மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 17 (2)

அதில் அடுத்து சற்று நேரத்தில் திருமண வீட்டினர் வந்து நிற்க, மனைவி உடன் இல்லாததுக்கு அவள் வேலை நிலை பற்றிச் சொல்லி சமாளித்து, தட்டு மாறிக் கொள்ளுதல் என்ற அந்த சிறு விழாவை முறையாய் செய்து முடித்தான்.

பெண் வீட்டினர் அடுத்து உடனே கிளம்பிவிட்டனர் என்றாலும்,

எளிய விழாவாய் மணவிழாவை இரு வாரத்தில் வைத்துக் கொள்ளலாம் என தேதி நிச்சயம் செய்திருந்ததால், தாலி வாங்கவும் அப்போதே சென்று வரலாம் என இவனை கட்டாயமாய் அழைத்தார் ப்ரபாகரின் அம்மா.

பெண்ணுக்கு தம்பி முறையல்லவா இவன், சென்று வர வேண்டியதாயிற்று.

அதன் பின் இவன் ராதியை அழைக்க, அவள் இணைப்பை ஏற்காமல், இவனையும் பார்க்காமல் இரண்டு நாளாய் தவிக்கவிட்டு கண்ணா மூச்சி ஆடியது அடுத்த கதை.

அதில்தான் இவன் அடுத்து இப்படி ட்யூட்டி டைம் முடியும் நேரம் போய் நின்றால் அவளைப் பிடித்துவிடலாம் என வந்து நின்றதும், அவள் வார்த்தையை கொட்டியதும்.

இவை எல்லாவற்றையும் சொல்லி,

“வண்டில அடிக்கவும் வலி பிச்சுகிட்டு, அதுக்கும் மேல நின்னு பேசினா இன்னும் தப்பாதான் போகும்னு கிளம்பிட்டேன்” என முடிக்கும் போது,

மருத்துவரை இவர்கள் சந்திக்கும் முறை வந்திருந்தது.

பிஜுவுக்கு ஆழமான காயம் என்றாலும் அது ஆபத்தான ஒன்று இல்லை. கையை அசைக்காமல் வைத்திருந்தால் சுலபமாக சரியாகிவிடும் என்று தெரிய வந்த பின் ஓரளவு நிம்மதியும்,

“அத்தன தடவ சொல்லி இருக்காங்க கைய அசைக்க கூடாதுன்னு அப்ப கூட கைய கால வச்சுகிட்டு சும்மா இருக்க முடியல என்ன? இவங்க என்ன சொல்றது நம்ம என்ன கேட்கிறதுன்னு நினைப்பு. கைய அசைங்க இனிம இருக்கு உங்களுக்கு?” என தன்னவனை கடியும் அளவுக்கு கோபமும் வந்திருந்தது ராதிக்கு.

வீட்டிற்கு திரும்பி வரும் போது பிஜு படு உற்சாகத்தில் இருந்தான். இருக்க மாட்டானா பின்னே?

எல்லாத்தையும் பேசியாச்சு, அவன் ராதி சமாதானம் ஆகியாச்சு, இரண்டு நாளாய் கண்ணில் கிடைத்துவிடமாட்டாளா என இவன் அலைந்த நிலைக்கு பொண்ணு கைக்குள்ளயும் வந்தாச்சு.

கூடவே ஜாக்பாட்டா, பர்ஸ்ட் நைட்ல பபிள் ரேப்பர் பத்தி பேசி படாய்படுத்தின பாப்பா மோட்ல இருந்து பொண்ணு பெட்ல பூப் போட்டு வைக்கிற ரேஞ்சுக்கும் வந்தாச்சு,

கை இந்த நேரம் இப்படி இருக்கிறது கொஞ்சம் கடிதான். அதை அசைச்சாலே கடிச்சு வச்சுரும்தான் இவன் வீட்டுவாலு, இருந்தாலும் இவன் சும்மாவெல்லாம் இருக்கப் போவதில்லை.

இப்படி எதேதோ நினைவில் அவன்.

ஆனால் ராதியின் மனநிலையோ இதற்கு நேரெதிராய்ப் போய்க் கொண்டிருந்தது.

காயம் பட்ட அன்று பிஜு அத்தனை வலியில் அதை யாரிடமும் காட்டிக் கொள்ளாமல் யாருக்காகவெல்லாம் எதையெல்லாம் யோசித்து செய்திருக்கிறான் என ஒரு பக்கம் நிறைவும் காதலும் அவளுக்குள்ளும் பொங்கினாலும்,

கூடவே அந்த நேரத்தில் அவனுக்கு உதவியாக இல்லாமல் போய்விட்டேனே என்ற குற்ற உணர்வும் அவளுக்குள் அலை வீசினாலும்,

இன்னொரு டைம் எப்படி ஒரு சிச்சுவேஷன்லயும் எடுத்தோம் கவுத்தோம்னு இப்படி இவன்ட்ட நடந்துக்க கூடாது என ஒரு உறுதியே வந்தாலும்,

அந்த சுசி அக்கா விஷயத்தில் இவ்வளவு பரந்த மனமாக யோசிக்கிறவன், நிச்சயமாக அந்த ரவி சொன்னது போல் கீழ்தரமாகவெல்லாம் நைட் டூட்டியை யோசிக்க மாட்டான் என்றும் அவளுக்குத் தோன்றினாலும்,

‘என்ன இருந்தாலும் இவனுக்கு என் ஃப்ரொஃபஷன் பிடிக்கலதான? அதான டாக்டர் பொண்ணு வேண்டாம்னு சொல்லி இருக்கான், நான் மட்டும் அன்றில் அண்ணிக்கு ரிலடிவ் இல்லைனா இவன் என்னை மேரேஜ் செய்துருக்க மாட்டான்தான?’ என்றும் ஒன்றும் அவளுக்குள் உள்ளே ஓடிக் கொண்டிருக்கிறது.

இதில் மருத்துவமனையை விட்டு வெளியில் வரும் வரைக்கும் அவள் மனம் அவனது உடல் நிலை குறித்த கவனத்தில் இருந்ததால் இதைப் பெரிதாய் தன் தலைக்குள் அனுமதிக்கவில்லை பெண்.

ஆனால் வெளியில் வரவும் அன்றில் மொபைலில் அழைத்தாள்.

“டேய் பஜ்ஜி எங்கடா இருக்க?” என அவள் விசாரிக்க,

ஸ்கூட்டியில் பின்னாலிருந்த பிஜு ஏக உற்சாகமாக “என்னங்க அனி மேடம், இப்பதான் எங்க நியாபகம் வந்துச்சா? என்று இணைப்பை ஏற்றவன்,

“ஹாஸ்பிட்டல்ல இருந்து தப்பிச்சு வந்துகிட்டு இருக்கேன்” எனச் சிரித்தான்.

இதில் பிஜுவுக்கு அடிபட்டிருக்கிறது என விஷயம் கேள்விப்பட்டு அழைத்திருந்த அன்றில்,

”என்னடா பெரிய அடியா? ரொம்ப கஷ்டமா இருக்கா? தப்பிச்சு வரேன்னுல்லாம் சொல்ற?” என பாச தவிப்புக்குள் போக,

அவளை சமனப் படுத்தவென “அதெல்லாம் பெருசால்லாம் ஒன்னும் கிடையாது, இது சும்மா பேச்சுக்கு சொல்றது லூசு” என இவன் பதில் கொடுக்க,

“ஆனாலும் நீ ஹாஸ்பிட்டல இப்படி சொல்லலாமா? இந்நேரம் அது ஒரு ஸ்விஸ் நெதர்லாண்ட் அளவு இல்லைனாலும் ஒரு கொடைக்கானல் ஊட்டி அளவுக்காவது அமோகமா தெரியணுமே” அவள் கிண்டல் செய்தாள்.

“ஆராவுக்கு ஆல் டைம் ட்ரைவரா அங்கதான் போய்ட்டு வர்றேன்னு தகவல் வந்துச்சே” அவள் சீண்ட,

“போ போ உனக்கு புரிஞ்சது அவ்ளவுதான்” என்றவன்,

‘மனுஷன் அவள அங்கவிட்டுட்டு இங்க தனியா எப்படி காயுறான்னு உனக்கு என்ன தெரியும்?’ என மனதுக்குள் முனங்கியபடி,

“எனக்கு எப்பவும் ஹாஸ்பிட்டல் அலர்ஜி, இப்ப அது இன்னும் கடியா இருக்கு” எனச் சொல்ல,

இதில் பிஜு பேசுவதை மட்டும் கேட்கும் நிலையில் இருந்த ராதிக்கு இது எப்படி இருக்கும்?

‘ஹாஸ்பிட்டல் பிடிக்காது, டாக்டரையும் பிடிக்காது அப்றம் என்னை எப்படி பிடிக்கும்?’  என குறுக்காக ஓடியது அவள் மனம்.

அடுத்த பக்கம்

Advertisements