மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகைச் சூடிக் கொண்டேன் 16

ராதனா ஸ்கூட்டியில் அந்த சாலையில் நுழையும் போதே அவள் கண்ணில் பட்டது அந்தக் காட்சி. ஆட்டோவில் ஏறிக் கொண்டிருந்த பிஜு தன் இடது கையால் இன்னும் முஷ்டி இறுகி இருந்த வலது கையை பிடித்துக் கொண்டு ஏறி அமர்ந்தான், அடுத்த நிமிடம் ஆட்டோ பறந்தது.

ஆட்டோ இவர்கள் வீடு செல்லும் திசைக்கு எதிர் திசையில் செல்ல, என்ன செய்ய இவள்?  என சிந்தித்த அந்த நொடியில் வெட்டிக் கொண்டு புரிகிறது இவளுக்கு.

‘ஐயோ அவனுக்கு கையில…நோ தோள்லயா இருக்கும், அங்க அடி பட்டிருக்கு, ரொம்பவே வலிக்குது போல’

அவ்வளவுதான் இந்த ஒற்றை புரிதலில் அவளே நினைக்கும் முன்னும் அவளது ஸ்கூட்டி ஆட்டோவின் பின் பாய்ந்து கொண்டு போனது.

‘ஐயோ ரொம்ப பெருசா எதுவும் இருக்குமோ? இதாலதான் அன்னைக்கு கைய பிடிக்கவும் தோள தொடவும் தட்டி விட்டுட்டுப் போய்ருக்கான், ஆனா என்ட்ட இவன் இதை ஏன் சொல்லல?’

‘கார் ட்ரைவ் பண்ண முடியல போல, இல்ல முதுகு பின்னால சீட்ல பட முடியல போல அதான் ஸ்கூட்டில வந்துருக்கான், அப்படின்னா அடி முதுகலயும் இருக்கும் போலயே!’

‘ஐயோ இப்ப அதே கையால வண்டிய வேற அடிச்சுட்டுப் போறான், ஸ்டிச் எதுவும் போட்டிருந்தா இப்ப என்னாகிறது?’

இப்படி சராமாரி ஐயோக்களுடன் இவள் வண்டி சீறிக் கொண்டு ஆட்டோவை பின்தொடர, ஆட்டோவை நிறுத்திவிட்டு இறங்கிவிட்டான் பிஜு.

அவசரமாய் இவளும் வண்டியை நிறுத்தியவள்,  முழுதாய் இறங்கி இன்னும் வெளியே கூட வந்திராதவனிடம் ஓடியவள்,

“என்னப்பா நீங்க?” என்றபடி சட்டென அவன் சட்டை பட்டனில் கைவைத்து,

“ப்ளீடாகுதாப்பா?” என தவித்தபடி பட்டனை விடுவிக்கத் துவங்கினாள்.

காயத்தோட நிலமை என்ன என தெரிந்தாக வேண்டும் என்பதைத்தாண்டி அவளுக்கு அது நட்ட நடு ரோடு, ஆள் நடமாட்டாம் அதிகமாகவே இருக்கிறது என அந்த நொடி வேறு எதுவும் கவனத்தில் இல்லை.

“ஏய் வாலு பார்க்கவன் நீ டாக்டர் வேல பார்க்கிறன்னு நினைக்க மாட்டான், டூயட் பாடுறன்னுதான் நினைப்பான்” என்றபடி அவள் கையை பற்றி அவள் செயலை நிறுத்தினான் அவள் கணவன்.

அவன் முகத்தில் தெரிந்த அத்தனை வலியையும் தாண்டி சின்னதாய் சிரிப்பு நின்றிருந்தது.

இவளென்ன அதையெல்லாம் நின்று சைட் அடித்துக் கொண்டிருக்கும் நிலையிலா இருக்கிறாள்?

“உங்க கோமதி ஹாஸ்பிட்டல் எங்க, முதல்ல கிளம்புங்க நீங்க” என அதில்தான் நின்றாள்.

“அது கோமதிலாம் இல்ல ரோஸ்மேரி போகணும்” இப்போது பிஜு குரலில் வெகுவாக தயக்கம் வந்திருந்தது.

ரோஸ்மேரி இங்குள்ள பெரிய மருத்துவமனைகளில் ஒன்று. ஃபேமிலி டாக்டரைப் பார்க்காமல் பெரிய மருத்துவமனைக்குப் போய் இருக்கிறான் என்றால், அடி ஒன்றும் சின்னதாய் இருக்காது.

இவள் இப்போது விக்கித்துப் போய் அவனை கேள்வியாய் பார்க்க,

“சின்னதா ஒரு சர்ஜரி செய்றாப்ல ஆகிட்டு ராதிமா, ஒரு குட்டி ஆக்சிடென்ட்,  நம்ம கொடோன்ல மேல அடுக்கி இருந்த க்ளாஸ் பீஸ் ஒன்னு சரிஞ்சு ஷோல்டர்ல விழுந்து வெட்டிட்டு, ஸ்டிச்சஸ் போட்ருக்கு, ஆனா ஐம் வெரி மச் ஃபைன் நவ், கொஞ்சமா வலிக்குது அவ்ளவுதான்” அவன் ப்ராக்ரஸ் கார்ட் காண்பிக்கும் மாணவனின் நிலைக்கும், அவளுக்கு ஆறுதல் சொல்லும் கணவனின் கரிசனைக்குமாய்  மாறி மாறி பயணிக்க,

அடுத்தும் இங்கு நின்று கொண்டு இருப்பது யாராம்?

“இப்ப உடனே ஹாஸ்பிட்டல் கிளம்புங்க” என இவனுக்கு ஆட்டோவை கண் காட்டிவிட்டு அவள் தான் பின் தொடரும் எண்ணத்தில் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தவள்,

“ஆட்டோவ விட டூ வீலர் பெட்டரா ஃபீல் பண்றீங்களோ? முதுகலயும் அடி பட்ருக்குதான?” என அடுத்த புரிதலுக்குப் போக,

“நீல்லாம் வரணும்னு அவசியமே இல்ல, ஜஸ்ட் காமிச்சுட்டு வந்துடுவேன், நீ ஒழுங்கா வீட்டுக்குப் போய் தூங்கலாம்” என பிஜு சொல்லிக் கொண்டாலும்,

அவள் பிடிவாத முகத்தைப் பார்த்தவன், ஆட்டோவுக்கு பணம் கொடுத்து அனுப்பிவிட்டு அவள் பின்னால் ஏறிக் கொண்டான்.

“ஜெர்க் இருந்துதுன்னா என் மேல ரெஸ்ட் ஆகிகோங்கப்பா, பெட்டரா இருக்கும்” அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவள் மேல் எடையேற்றாமல் சாய்ந்து, அவளை இடையோடு ஒரு கையால் பற்றி, அவள் தோளில் தன் நாடி நிறுத்திக் கொண்டான் அவன்.

சற்று நேரத்துக்கு முன் எந்த பிடிக்காய் எரிந்து விழுந்தாளோ அதே நிலை. ஆனால் அவனுக்கு அடி பட்டிருக்கிறது என்ற தவிப்பிருந்தாலும் இப்போதைக்கு அவளுக்கு பலத்த ஆறுதலே இந்தப் பிடிதான்.

இதுவரைக்கும் அவன் மீது வைத்து சுமந்தலைந்த கோபங்கள் செய்த காயங்கள் கூட தடமிழந்து கொண்டிருந்தன அவள் உள்ளத்தில். அதை அறியக் கூட அவளுக்கு அந்த கோபம் காயம் எதுவும் நினைவில் இல்லை.

அடுத்த பக்கம்

Advertisements