காற்றாக நான் வருவேன் 4 (4)

றுநாள் அபிஷேக்கின் டீமை சந்தித்தபோது படு உற்சாகமாக இருந்தாள் தயனி. அனைவரும் குடும்பமாக வந்திருந்தனர். விருந்து கலகலப்பு. ஒரே குடும்பமாய் உரிமையுடன் பழகினர். தயனிக்கு உடனேயே அவர்களை பிடித்துப்போனது.

விருந்து முடிந்த பின் களைப்பில் மாலை உறங்கிபோனாள் தயனி. உடல் இன்னும் முழு பலம் பெற்றிருக்கவில்லை. மனதிற்குள் அபிஷேக்கின் நடிப்பு திறமையை மற்றவர்கள் பாராட்டியது அவ்வப்போது வந்து போனது.

இவள் உறங்கினாலும், ரிஷப்ஷனுக்கான ஏற்பாட்டிற்கென அவள் கணவன் விழித்து வேலை பார்த்துகொண்டிருந்தான்.

இரவு விழிப்பு வந்து அறையை விட்டு அவளது கணவனை தேடி வந்தாள். யாரிடமோ தொலை பேசியில் அவன். அருகிலிருந்த சோஃபாவில் அமர்ந்து கொண்டாள்.

“இல்ல..அங்கிருந்து யாரையும் கூப்பிடலை…ஆமா அம்மாவையும் தான் சொல்றேன்…யாரும் வரலை..”

பேசி முடித்து அவன் வருவதற்குள் பெரும் பாரம் ஏறி இருந்தது அவள் மனதில்.

‘என்னமோ சுமுகமான காரணத்திற்காக இவன் அம்மாவை கூப்பிடாதது போல் இது என்ன பேச்சு?’ ‘நல்ல நடிகன்’ பாராட்டு வேறு அந்நேரம் ஞாபகம் வந்து மனதிற்குள் தீ மூட்டி போனது.

இவள் வந்துவிட்டதை கண்டு இவள் அருகில் வந்து அமர்ந்து இவள் தோளோடு சுற்றி கை போட்டபடி அலைபேசியில் பேச்சை தொடர்ந்தவன், பேசி முடித்து இவள் முகம் பார்த்தான்.

“அம்மாவ அலைய வைக்க வேண்டாமேன்னு அன்பான மகனா உங்க அம்மாவ அங்க விடுட்டு வந்த மாதிரி பேசிட்டு இருக்கீங்க?” எரிச்சல் இருந்தது அவள் கேள்வியில்.

“இப்ப பேசுனவங்க ரொம்ப பழக்கம் இல்லாதவங்கடா…விலாவாரியா வீட்டு விஷயத்த சொல்லமுடியுமா?”

“அப்ப பொய் சொல்லுவீங்க…”

“அப்படி இல்லமா…அம்மா வரலைனு தானே சொன்னேன்…அது உண்மைதானே! எதுக்காக வரலைங்கிறத மட்டும் சொல்லலை…அவ்வளவுதான்….”

அவள் முகம் இன்னும் முழுதாக தெளியவில்லை.

“சாப்பிட்டு தூங்குடா…உனக்கு ரெஸ்ட் தேவை….நான் வேலைய முடிச்சுட்டு வாரேன்.”

 

மீண்டுமாய் படுக்கையில் வந்து தனியாய் படுத்த தயனிக்கு தூக்கம் வரவில்லை.

நடிகன்…நிஜ வாழ்வில் நடிக்க எவ்வளவு இயல்பாய் வரும் இவனுக்கு? என்னிடம் நடிக்கிறானா? எல்லாமே நடிப்பு இல்லை என்று என்ன நிச்சயம்?

அதெப்படி இவன் அம்மா இவளை வீசிவிட்டு போன இடத்துக்கு இவன் மட்டும் சரியான நேரத்துக்கு தானாக வந்தான். அவன் அம்மா சொல்லாமல்தான் வந்தானா?

தாய் வீடு இருக்க, வயது பெண்ணை தனி வீடு ஏன் கொண்டு சென்றான்? அதெப்படி இவர்கள் இருவர் இருக்கும் வீட்டை மட்டும் தேடி கடத்தல் கூட்டம் வரும்?

இவளை மட்டுமாக அறையில் அடைத்து வைத்தானே! அதெப்படி அவன் மீது ஒரு குண்டடி கூட படவில்லை? சட்டத்தை காண்பித்து அவசரமாக திருமணத்தை பதிந்தானே! வேகமாய் செய்ய என இவள் ஐ டியை கேட்டு அவனே எல்லாம் செய்தானே!

இவள் காயம் நிமித்தம் என இவள் நினைத்தாளே! அது உண்மையில் அவனது பிறந்த பெயர் ‘நிகரில் திஜு’’வை வைத்து அவனை அடையாளம் காண கூடாது என்பதற்காகவா?

அவனது தாயிடம் அழைத்து சென்றானே! அதுவும் இவளை ஏய்க்க போட்ட நாடகமா?

விவாகரத்து செய்துவிட்டு திரும்பவும் இவளை மணந்ததின் காரணம் என்ன? காப்பாற்றி கூட்டி வருவது போல் உடனடியாக இந்தியா கொண்டு வந்து விட்டானே!

ஒருவேளை விவாகரத்திற்கு பின் தான் இவளிடம் சாதிக்க இன்னும் காரியம் இருக்கிறது என தெரிந்திருக்குமோ? அல்லது சொத்திற்காக மீண்டும் இவள் போராட கூடாது என நினைத்து இவள் சம்மதத்துடன் நாடு கடத்தி விட்டார்களா தாயும் மகனும்?

சொத்து…நோ….புரிந்துவிட்டது இந்த குள்ள நரிகளின் தேவை……அது. அது இவளிடம் இருப்பது தெரிந்துதான் அவனது அம்மா இவள் வீட்டிற்கே வந்திருக்க வேண்டும்.

நகை நாடகத்தில் அது அவர்கள் வசமாகிவிடும் என நினைத்திருப்பார்கள். ஆம் சந்தேகமே இல்லை. அந்த பச்சை வீணை நெக்லஃஸை அவள் அத்தை பார்த்தவிதம்.

ஆடைகளை உருவினாலே அந்த ராட்சசி…அதை தேடத்தான். எவ்வளவு தேடியும் அது கிடைக்கவில்லை…..இவளாக தந்தால்தான் உண்டு என எண்ணி இவளது நம்பிக்கையை சம்பாதிக்க மகன் இவளை நேசிப்பது போலவும், தாயை வெறுப்பது போலவும் நாடகமாட வந்திருக்கலாம்……

ஐயோ இவன் அம்மா அந்த பேய் கூட இவள் முதுகு தோலை சிதைத்ததோடு நின்றுவிட்டதே! இவனோ இவளை நம்பவைத்து என்னவெல்லாம் செய்துவிட்டான்…திருமணமாமே?

நடந்தது திருமணமா?

மூச்சை அடைத்து கொண்டு வந்தது தயனிக்கு. தடாலென எழுந்து நடந்தவளின் கால் எதிலோ இடற சுவரின் எதன் மீதோ போய் எக்கு தப்பாக தலை மோத ‘க்ரக்’ என்ற சத்தத்துடன் சுவரின் வாலட் திறந்தது.

அவள் அதன் பட்டங்களில் விழுந்ததில் அதன் ரகசிய எண்கள் அழுத்த பட்டிருக்குமோ? ஆச்சரியம் தான். உள்ளே அவள் தந்தையின் தங்க பேனா!

அவளது கணவன் நிகரில் திஜுவுக்காக ரகசிய கடிதம் வைத்து அனுப்பிய பரிசுப் பொருள்.

அவசரமாக அதை எடுத்து மையூட்டும் பகுதியின் ரகசிய மேல் பகுதியை திறந்தாள். உள்ளே அவள் வைத்தபடி பத்திரமாக இருந்தது அந்த அது–‘மரகத வீணை’.  

அடுத்த பக்கம்