காற்றாக நான் வருவேன் 5(3)

எத்தனை இன்பமாய் கழிந்திருக்க வேண்டிய இரவு

இப்பொழுதோ அவள் கணவனுக்கு ஏதும் பெரும் ப்ரச்சனையோ?, ஆபத்து ஏதும் வந்துவிட கூடாதே! என தவிப்பதிலும்,ஏன்? எதை மறைக்கிறான்? என்ற குழப்பத்திலும் கழிந்தது.

நேற்றைய கனவு போன்ற கனவும் மனதில் அவ்வப்போது வந்து பயம் தந்தது.

சல்…சல்…. சலங்கை சத்தம் படியேறி வரத் தொடங்கியது.

மற்றபடி நிசப்தம்.

உக்கு…….உக்கு……தூரத்தில் கேட்ட ஆந்தை சத்தம்.

“ப்ச்….”வெறும் மன பிரம்மை.

இல்லை நிஜம் என்றது ஜதி மாறா கொலுசொலி.

உடல் இறுக மூச்சை இழுத்தபடி இவள் இயக்கம் நிறுத்த….க்ரீச்…..இவளிருந்த அறை கதவு திறந்தது. தூக்கி வாரி போட்டது தயனிக்கு.

“என்னங்க பயந்துட்டீங்களா?…” உள்ளே வந்தது சுஜநிஷா, படுப்பதற்கு ஏற்றபடி இரவு உடைக்கு மாறி இருந்தாள்.

அசடு வழிந்தாள் தயனி.

“அபி அண்ணா உங்களை உங்க வீட்டில் இருக்க சொல்லாம…..இங்க விட்டுட்டு போனதுமே நினைச்சேன்…..அண்ணா வர்ற வரைக்கும் நான் இங்க உங்ககூட தங்கிகிடுறேன்….”

“ப்ரியத்தம் அண்ணா…..” தயனிக்கு சுஜநி இவளோடு தங்குவது படு தேவையாக பட்டாலும் கேட்டாள்.

“அவர் தூங்கியாச்சு….” சிறிது நேரம் இருவரும் பேசிக் கொண்டு இருந்துவிட்டு தூங்கிப் போயினர்.

எவ்வளவு நேரமாக தூங்கினாளோ தயனி. வெப்பமும் தாகமுமாக உணர விழித்தாள். தண்ணீர் வேண்டும்….ஏனிந்த வெப்பமும் வேர்வையும் ஏசி அறையில்?

சுஜநி படுத்திருந்த புறமாக திரும்பிய தயனி அலறிய அலறலில் அந்த கட்டிடமே அதிர்ந்தது.

கரி கட்டையாய் அரை குறையாய் எரிந்திரிந்த சடலம் கிடந்தது அங்கே.!!!

புகை வந்து கொண்டிருந்தது அதிலிருந்து. அதாவது அப்பொழுதுதான் எரிந்திருக்கிறது.

வெப்பம் வியர்வை.

“வேண்டாம் பப்பு….சொன்னா கேளு!”

அமனுஷ்யமாய் ஒரு குரல்.

இவள் அலற அலற அதன் பேச்சு நிற்கவே இல்லை.

தரை, தலைக்கு மேல், இடப்புறம், மேற்கத்திய மூலை, தென் கிழக்கே என ஒவ்வொரு இடத்திலிருந்தும் ஒலித்தது அக்குரல். எமிலி!!!

பிணக் குரல்.

பிண வாடை குடலை பிரட்டியது.

அரை வாசல் நோக்கி ஓடியவள் முன் வந்து நின்றது அது அந்த சடலம்.

“வேண்டாம்னு…சொன்னேன் பப்பு. உனக்காக…உன்னை காப்பாத்த வயசு…வாலிபம்…எல்லாம் விட்டு….வாழாம போனேனே……அத….வேஸ்டாக்கிட்டு…..நீயும்…..என்ட்ட வரப்போறியா…….உன் அபிகூட நீ வாழவேண்டாமா……உனக்காகதான் சொல்றேன்மா….”

பேசப் பேச கரிகட்டைமெல்ல மெல்ல மாறி முழு எமிலியானது ஒருகணம். இறக்கை தோன்ற மனு உடல் கொண்ட வெண் பறவையாகி சிறகடித்து பறந்தாள். சுவர் வழியே மறைந்தாள்.

இன்னும் தனக்கு மூச்சு நிற்காமல் இருப்பது, மீண்டு வந்த மூச்சில் தான் புரிந்தது தயனிக்கு.

தட தடவென கதவு தட்டும் சத்தம். திரும்பவுமா?

சுவரோடு ஒண்டினாள்.

“தயனி….., தயனி சிஸ்…..” கணவன் மனைவியின் அழைப்பில் கதவை திறந்தாள்.

ப்ரியத்தம் பக்கத்தில் நேற்று இவளறைக்கு படுக்க வந்தபோது அணிந்திருந்த அதே நைட்டியில் நின்றிருந்தாள் முகத்தில் கவலையுடன் சுஜநிஷா.

தொடரும்…