காற்றாக நான் வருவேன் 5 (2)

கிளம்ப முழுவதுமாக தயாராகி இருந்த அவன் புறத்தோற்றம் ரசித்தாள். கிளர்ந்தது இளமிதயம்.

‘அழகுடா நீ!’ தன் ஆடவனை காதல் கலகம் செய்ய பிறந்த புது ஆவலில் படுக்கையை விட்டு இறங்கியவளின் காலில் மிதிபட்டன மணல் துகள்கள்.

சிலீரிட்டது  இதயம்.

இது நேற்று எமிலி நின்ற இடம்.

முகம் வெளிர வேர்வை முத்துக்கள் உடல் ஊற குனிந்து பார்த்தால்…சிதறிய மணல்  சிறிது……..சிறிதும், பெரிதுமாய் ரத்த புள்ளிகள்……, அதன் அருகே ஆங்காங்கே……சிறு புழுக்கள்…… இவள் பாதம் தொடங்கி எமிலி வெளியேறிய சுவர் வரை.

பேச்சு வரவில்லை. தொப்பென்று மெத்தையில் அமர்ந்தாள்.

“என்னடா செல்ல குட்டி…சீக்கிரமே விழிச்சாச்சு போல…..” இவள் அசைவு கேட்டு திரும்பிய அபிஷேக் அவள் அமர்ந்திருக்கும் விதம் பார்த்து வேகமாக அருகில் வந்தான்.

“என்னடா அம்மு குட்டி திரும்பவும் கனவா?” யோசனையிலும் கரிசனையிலும் அவன் நெற்றியில் விழுந்தன சுருக்கங்கள்.

பீதியுடன் ஒற்றை விரலால் தரையை சுட்டினாள்.

“என்னடாமா?” குனிந்து சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு கேட்டான்.

“என்னது….? ஒன்னுமில்லையே!”

அவசர அவசரமாக இவள் எழுந்து பார்த்தால் எதுவும் இல்லை.

காலால் தரையை தேய்த்து பார்த்தாள். சுத்தத்தின் சத்தம் கேட்டது அதில். தரையில் அமர்ந்து கையால் தடவி கூட பார்த்தாள். மணலோ, மாம்ச ரத்தமோ அதன் சுவடு கூட அங்கு இல்லை.

இரவில் கண்ட காட்சியையும் இப்பொழுது பார்த்தவற்றையும் பதற பதற சொன்னாள் தயனி.

தன் கைகளுக்குள் அவளை காத்தபடி பொறுமையாய் கேட்டிருந்தான் அபிஷேக்.

“குட்டிமா…சின்ன வயசில இருந்து ஒரு வகையில் கஷ்டமான…சில கொடூரமான…சூழ்நிலைகள பார்த்து வளர்ந்திருக்க…அந்த மனகாயம்…இப்படி கனவா…பயமா வெளிபடுது…..மனசுவிட்டு நீ என்ட்ட பேசுறல்ல…இது குறஞ்சிடும்….ஸ்டில்…தேவபட்டா கவுன்சிலிங் எடுத்துக்கோமா….”

அவன் சொல்லும் போது சம்மதமாக தலையாட்டினாள்.

அது ஏன்  இத்தனை நாள் தனியாய் இருந்த எப்போதும் வராத பயங்கர கனவு…கனவுதானா அது?  இப்போது துணையோடு சுகமாய் இருக்கையில் வருகின்றது? என்ற கேள்வியை உணராமல் போனது பெண் மனம்.

“அழுக்கு பாப்பாவா இருந்தாலும் அழகு பாப்பாவா இருக்கியே தயூ குட்டி” கணவனாய் மணந்தவளை அணைத்தான்.

பயம் பதற்றம் எல்லாம் எங்கோ போக கட்டியவனின் தொடுகை மாற்றத்தில் துவள தொடங்கியிருந்தாள் பெண்.

சிறியதாய் சிணுங்கியது அபிஷேக்கின் அலை பேசி. அழைப்பின் ஒலி அளவு அதிகரிக்க அந்த இணைப்பை ஏற்றான் அவன். தொடங்கிய தொடுகை தடைபட்டது.

அன்று ரிஷப்ஷன் நேர்த்தியாய் நடந்தேறியது.

 

விழா முடிந்து அனைவரும் விடை பெற மனம் பிடித்த புத்தாடையில் புதுப் பெண்ணின் நாணத்துடன் இடை வளைத்திருந்த இணையின் வலகரத்திற்குள் கிளர்ந்த படி வீட்டுக்குள் படியேறினாள்.

இருவர் மனமும் இன்ப கனவில்.

எதிரியின் சத்தம். அதாங்க அபிஷேக்கின் மொபைல் சத்தம்!.

இடக்கையில் எடுத்து பேசியவன் முகம் ஒரு கணம் அரண்டு பின்பு அது கனவோ என்பது போல் இயல்பாகியது.

“தயனிமா சொன்னா புரிஞ்சுப்பல்லடா….ரொம்ப முக்கியமான வேலை…போய்ட்டு டூ டேஸில் வந்துடுவேன்…”

என்ன காரணமென்றே சொல்லாமல், அவசர அவசரமாக அவளை கிளப்பி, தன் நெருங்கிய நண்பனும் டீம் மெம்பருமான ப்ரியதம் மற்றும் அவனது மனைவி சுஜநிஷா கைகளில் அவளை ஒப்படைத்துவிட்டு கிளம்பிப் போனான் அபிஷேக்.

அவர்களது வீட்டில் அன்று இரவு அவள் தங்க வேண்டும். அதுவும் அருகில் அபிஷேக்கின்றி.

இவளுக்கென்று அவர்கள் தந்த அறைக்குள் சென்றவள் பைபிளும் கையுமாக படுக்கையில் அமர்ந்து கொண்டாள். இரண்டு நாளும் தூங்கப்போவதில்லை என இப்போதே தெரிந்துவிட்டது.

அடுத்த பக்கம்