காற்றாக நான் வருவேன் 3 (2)

ஒரு முறைக்கு இரு முறை அதை மனதில் சொல்லி பார்த்துக்கொண்டான். நடந்ததை திருமணமாக உணர இவனுக்கே இப்படி இருக்கிறதே, ஏற்கனவே ஒரு நாடக திருமணத்தில் மாட்டி தப்பி வந்திருக்கும் தயனிக்கு எப்படி இருக்கும்?

இது உண்மையான திருமணம் என புரியவைக்கும் படி இவன்தான் அவளை நேசிக்க வேண்டும்.

அசையாது நின்றிருந்த தயனியை கரம் பிடித்து கட்டிலில் உட்காரவைத்தான் அபிஷேக். மெல்ல தன் கையை அவன் பிடியில் இருந்து உருவிக்கொண்டாள் தயனி.

அவள் கண்களை கூர்ந்து பார்த்தான். இரு நொடி இவன் பார்வையை தன் கண்களில் வாங்கியவள் பார்வையை வேறு புறம் திருப்பி கொண்டாள்.

இவள் மனதில் என்ன?

“தயனிமா, இனி நாம வெளியே போவதில் ஒரு ப்ரச்சனையும் இல்ல. வெளிய வர்றியா? ப்ளீஸ்”

ஆமோதிப்பாக மௌனமாக தலை ஆட்டியவள், இவன் வாங்கி குவித்திருந்த உடைகளின் பெட்டிகளில் ஒன்றை எடுத்துகொண்டு பாத்ரூமிற்குள் நுழைந்தாள்.

அபிஷேக் தயாராகி வரும்பொழுது ஆயத்தமாக நின்றிருந்தாள் தயனி புர்கா அணிய முயன்றபடி.

இவன்தான் அதற்கு அவளுக்கு உதவினான். மறுப்பும் சொல்லவில்லை. நன்றியும் வரவில்லை அவளிடமிருந்து.

ஒரு பிரபல ஹோட்டலுக்கு அவளை அழைத்து சென்றான். எதையும் அவள் சாப்பிடவில்லை.

மால்களுக்கு போனார்கள். அவள் எதையும் பார்வை நிறுத்தி பார்க்கவே இல்லை.

மீண்டுமாய் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல் அறைக்கே திரும்பி வந்தார்கள், இந்த சூழலில் அவனது அந்த வீட்டில் தங்க முடியாது என்பதால்.

அவனிடம் ஒரு வார்த்தை பேசாமல் படுக்கையில் சுருண்டாள் தயனி. சற்று நேரம் பொறுத்துபார்த்தவன்

“தயனிமா சப்பிட்டுட்டு மெடிசின் போட்டுட்டுதான் தூங்க போகனும்” என்றபடி படுக்கை  அருகில் சென்று நின்றான்.

பதில் ஏதும் வரவில்லை. “சீக்கிரமா உடம்பு சரியான பிறகுதான் நாம சென்னை கிளம்பமுடியும்…”

மெதுவாக எழுந்தவள் வரவழைக்கபட்டிருந்த உணவு இருந்த டேபிளுக்கு அருகிலிருந்த நாற்காலிகளில் ஒன்றில் சென்று அமர்ந்தாள்.

அபிஷேக் நின்ற இடத்திலிருந்து அசையாமல் நின்றுகொண்டான். சிறுது நேரம் பொறுத்தவள் மெல்ல திரும்பி அவனை பார்த்தாள். மார்பின் குறுக்காக கைகளை கட்டியபடி மௌனமாக பார்த்திருந்தான் அவன்.

எழுந்து சென்று அவன் வலக்கையை பற்றி உரிமையுடன் இழுத்து வந்து எதிர் நாற்காலியில் அமர்த்தியவள், இருவருக்குமாக பரிமாற தொடங்கினாள். அபிஷேக்கும் தன் பங்கிற்கு பரிமாற, அவளோ வாயே திறக்கவில்லை.

“என்னாச்சு தயனிமா?”      “என்னை உனக்கு பிடிக்கலையா?” அவன் குரலில் வருத்தம் இருந்தது.

நிமிர்ந்து பார்த்தவளின் பெரிய கண்களிலிருந்து சர சரவென கண்ணீர்.

“தெரியலை…சுத்தமா புரியவும் இல்ல, ஒரு நிமிஷம் உங்களை ரொம்பவும் பிடிக்கிற மாதிரி இருக்குது….மறு நிமிஷம்…ரொம்ப  பயமா இருக்குது…” அவள் முகத்தில் தெரிந்த வலியும், பயமும், தவிப்பும் கண்டிருந்தவனை உருக வைத்தது.

“ஏன்டா?” உருகினான்.

“தெரியலையே….அ..அத்த மாதிரிதான் நீங்களும்னு….” அதற்கு மேல் பேச முடியவில்லை அவளுக்கு விம்மினாள்.

அவள் புறமாய் வந்து அவள் கை பற்றியவன் “புரியுதுடா, உனக்கு நம்பிக்கையில் விழுந்த அடி அது…அதனாலதான், நாள் போக போக என் அன்பு நிஜம்..அதில் எந்த நாடகமும் இல்லனு உனக்கு புரிஞ்சுடும்…..அப்புறம் எல்லாமே ரொம்ப சுமுகமாயிரும்..ஓ.கே…அதுவரைக்கும் நான் பொறுமையா காத்திருக்க தயார், அதே பொறுமை உனக்கும் வேணும்…..புரியுதாடா…….” அவள் கண்களை பார்த்து ஆறுதல் சொன்னான்.

“ம்,” மெல்ல தலையாட்டினாள்.

“ப்ரேயர் பண்ணுங்க அபி சாப்டலாம்”

வழக்கத்தின் படி அன்றும் அவந்தான் அவளுக்கு மருந்திட்டான். ஸோஃபாவில் போய் படுக்க போனவள், அவன் முகத்தை ஒருதரம் பார்த்துவிட்டு, இருந்த ஒரே கட்டிலின் ஓரத்தில் சென்று சுருண்டாள்.

சற்று நேரம் கழித்து அபிஷேக் அதே கட்டிலில் வந்து படுக்க, தயனியின் இதயம் வாயில் துடித்தது. முதல் முறையாக ஒரு ஆணுடன் அவள். ‘ஹேய்..உன் கணவனுடன் நீ’ திருத்தியது மனசாட்சி.

அபிஷேக் அசையவேயில்லை. படுத்தவுடன் தூங்கி இருந்தான். .நீதிமானின் நித்திரை சுகமாயிருக்குமாமே! அப்படியானால் நான் பாவியா? தூக்கம் வரவில்லையே! தூங்கும் கணவனை பார்த்துகொண்டு இரவை கழித்தாள் அவள்.

அடுத்த பக்கம்