காற்றாக நான் வருவேன் 2 (4)

அனஃஸ்தெடிக் எஃபெக்டில் அனைவரும் உளறுவது இல்லை,சிலர் மட்டும் தான் சிந்தை திறப்பர். அப்போது அவர்கள் பேசுவது அவர்கள் மனதிற்கு மிக முக்கியமான விஷயங்களாக மட்டும் தானிருக்கும்.

கோபம்,இழப்பு, வலி, இப்படி ஏதாவது.

ஆனால் தயனி இவன் இதயத்தில் தனித்துவமாய் அலை அடித்தாள். மயக்கத்தின் பிடியில் அவள் பாடினாள்.

அத்தனையும் இறைவனின் இணையற்ற இதயத்தை குறித்த பாடல்கள். உணர்ந்து பாடினாள். அவள் அழகாய் பாடினாள் என சொல்வதற்கில்லை. ஆனால் அவள் மனம் அழகானது என்றும், இவன் விரும்புவதற்கும் வேண்டுவதற்கும் மேலானது என்றும், இவனுக்கு புரிய போதுமான அளவிற்கு பாடினாள்.

வலியில் படைத்தவரை குறைசொல்வது உலக இயல்பு. இவள் இயல்பில் மரபு மீறிய புது கவிதை.

அனைத்திற்கும் மேலாக காரணம் பார்த்தா வருகிறது காதல்? சிக்கினான் அபிஷேக். ஒரு கணம் தாய்மையுடன் மனம் அவள் மேல் சூழ்வதும், மறுகணம் அதே மனம் தன் இணையாய் அவளை காண்பதும் அவனுக்கு புது அனுபவம்.

இவள் இவனுக்கு கிடைப்பாளா? அவள் கண்ணில் தெரியும் பயம் நிச்சயம் “நோஓஓஓ” என்றது. ஆனால் உள்ளுணர்வின் உள்ளிருந்த இறைகுரலோ நேர்மாறாக இவள் உன்னவள் என்றது.

தன் பாஸ்போர்டை பெர்த் ஐ டி மூலம் மீட்டு, அன்றே இந்தியா கிளம்ப விரும்பினாள் தயனி. அதற்கு அபிஷேக் உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாள்.

இந்தியா போய் என்ன செய்ய என்ற கேள்விக்கு அவளிடம் பதிலில்லை.

அவள் உடல் நிலைக்கு உடனடி பயணம் சாத்தியம் இல்லை என்பதால் ஒருவாரம் கழித்து இருவருமாய் இந்திய விஜயம் என்றான் மருத்துவன்.  அங்கு அவளுக்கு படிக்கவும் பணிக்கமரவும் அபிஷேக் உதவ முன்வர அரை மனதாக சம்மதித்தாள் தயனி.

அதுவரை தயனி தலைமறைவு வாழ்கை வாழ வேண்டும். இவனோடு சேர்ந்து பிடிபட்டால் இருவருக்கும் காத்திருப்பது மரணதண்டணை.

அலையிடைபட்ட துரும்பாய் அலைகழிந்தாள் தயனி தன்னுள், தனக்கு உதவ வந்தவனை தான் தூக்கு கயிறுக்கு அருகில் நிறுத்தியிருப்பதற்காக.

ஆனால் நேர்மாறாக, அபிஷேக் ஆழியால் சூழபட்டிருந்தாலும் அமைதி காக்கும் நிலம் போல் பதற்றமின்றி  இருந்தான்.

இவள் தேவைகளை கண்டறிந்து சந்தித்தான். ஆயிரம் அறிவுரைகளுடன் அவளை வீட்டில் விட்டுவிட்டு வெளியே சென்றவன் நல்ல உணவுகளுடன், இவளுக்கு தேவையான உடைகளையும் வாங்கி வந்தான்.

மெல்ல மெல்ல தயனி தன்னை அறியாமலே அவனிடம் தோழமை கொள்ள தொடங்கிஇருந்தாள். அந்நிய ஆணிடம் பேசி பழகி அறியாதவளுக்கு, அவசியம் தவிர மற்றவைகளுக்கு அபிஷேக்கிடம் பேச இருந்த தயக்கம் தயங்கி தயங்கி வெளியேறியது.

தூங்கும் நேரம் தவிர இருவரும் ஏதாவது கலகலப்பதும், இணையத்தில் இணைந்தே உலவுதலும், பிடித்தவை பிடிக்காதவை பற்றி கதையளப்பதுமாக சென்றது பொழுது.

இன்று தயனி மீட்க்கபட்ட மூன்றாவது நாள். எதிர்பார்த்ததைவிட வேகமாக முதுகு புண் காய்ந்து இருந்தது. ஆனால் அதோடு நின்றுவிடவில்லை அன்றைய எதிர்பார்பிற்கு எதிரான செயல்.

திடீரென இவர்கள் வீட்டு கதவுகளை துளைத்தன தோட்டாக்கள்.

தொடரும்…