காற்றாக நான் வருவேன் 2 (3)

கேட்டிருந்தவன் அவள் முகத்தை கூர்ந்து பார்த்தவண்ணம் கேட்டான் “உனக்கு இன்னும் மேரேஜ் ஆகலைன்னு புரியுது தானே?”

அதிர்ந்து விழித்தாள் தயனி. “உங்களுக்கு இது எப்படி புரிஞ்சுது?”

“அப்படின்னா உனக்கும் தெரியும்!..”

“ம், நான் மயங்கிட்டேன்னு நினைச்சு அத்தையும் மஞ்சுளாவும் பேசிகிட்டத கேட்டேன்.”

“அவங்க மகன் ஐ டி மூலம் அவனுக்கே தெரியாம, இந்த மேரேஜ் டிராமா. அவன மாதிரி அப்பாட்ட பேசியதும் இவங்க ஏற்பாடு செஞ்ச ஆளா இருக்குமாயிருக்கும். அவங்க மகன் எனக்கு அனுப்பின லெட்டர் போலி, என் ஜுவல்ஸ்ஸை பறிக்க அந்த நாடகம், மகன் ஐ.டி மூலம் சொத்த பிடுங்கி, அதே ஐ டி வழியா அந்த சொத்தை தன் பேருக்கே மாத்திட்டாங்க. அப்புறம் அதே ஐ.டி மூலம் டிவோர்ஸ்”

தயனி விளக்க புலம்பினான் “அபிஷேக், இப்படியும் ஒரு அம்மாவா? மகனை வித்து காசாக்கி …..இப்ப என்ன செய்றதா இருக்க தயனி?”

“நான் இந்தியா போலாம்னு நினைக்கிறேன்”

“அந்த அத்தை மகனை தேடியா?” குரல் சோர்ந்தது அபிஷேக்கிற்கு.

“திருமணங்கிறது எப்பவும் ரெண்டு பேர் சம்பந்தபட்டது தயனி. யாராவது ஒருத்தர் இன்னொருத்தர கல்யாணம் செய்துட்டதா தனக்குதானே நினைச்சுகிட்டா, அது கல்யாணம் ஆயிடுமா? உன் கதை அப்படித்தான் இருக்குது.” உணர்ச்சி வசபட்டு பேசிய அபிஷேக் மெல்ல நிதானபட்டான்.

“அவனை விரும்புறியா தயனி?”

“அவன் எப்படி இருப்பான்னே எனக்கு தெரியாது. இதுல அவன எத வச்சு தேட, நடந்தத என்னென்னு விளக்க? அப்படி விளக்கி எதை சாதிக்க? இந்த அம்மாவோட பிள்ளை மட்டும் எப்படி இருப்பான்?…..எந்த காதலும் தேடலும் எனக்கு இல்ல..ஆனா என்ட்ட  இந்தியா விசா மட்டும்தான் இருக்குது.. கல்யாணத்தோட அப்பா விசாவும் ஏற்பாடு செஞ்சுட்டாங்க, அது தான்  இந்த நாட்டிலிருந்து நான் வெளியேற இருக்கும் ஒரே வழி…தனியாளா…. எதுவும் இல்லாம… என்னால இங்க வாழவே முடியாது. அதனால்தான்…”

நிம்மதி பரவியது கேட்டிருந்தவன் மனதில். அது அவளுக்குமே புரிந்தது. அவன் தன்னை விரும்புவதாக ஒரு எண்ணம் தோன்றி அதன் தொடர்சியாக முதுகு தண்டில் பயம் சில்லிட்டது அவளுள்.

அவளிடம் அன்பு பாராட்டும் யாரையும் அவள் நம்ப தயாராக இல்லை.

பிஷேக்கிற்கும் தன் மனம் புரியாமலில்லை.

அபிஷேக்கிற்கு விரைவில் திருமணம் செய்யவேண்டும் என ஒரு தவிப்பு இருந்தது. காரணங்கள் பல. சிறு வயதிலிருந்தே அவன் அரவணைப்பை அனுபவித்தது இல்லை. அவன் அம்மா மிகவும் வித்யாசமானவர்.

அவர் இவனை கொஞ்சியதாக இவனுக்கு ஞாபகமே இல்லை. ஆனால் இவனுக்கு தேவையானதெல்லாம் இவன் கேட்கும் முன்பே கிடைக்கும்.

அவன் தந்தை அவன் தாய்க்கு கணவராக பணிசெய்கிறார் என்று சொல்லபடுமளவிற்கு அவனது அம்மாதான் வீட்டின் நூறு சதவீத பொறுப்பையும் வகித்தார்.

அப்பா அம்மாவின் புர்கா. ஆம் இந்நாட்டில் எம்மதத்தினரும் புர்கா அணிய வேண்டும். பெண்கள் தனியாக வெளியே செல்வதே மகா குற்றம். ஆக அம்மாவிற்கு தேவைப்பட்ட மனித வடிவ புர்கா அப்பா.

எல்லா தொழிலும் அப்பா பெயரில். மூளை, செயல், இயக்கம் எல்லாம் அம்மாவினுடையது.

இவன் தந்தை இவனிடம் சில நிமிடங்களுக்கு மேல் பேசியதே கிடையாது. அதற்கும் அம்மா தடை விதித்திருந்திருப்பார் என இவனுக்கு தோன்றும்.

“அதிகமா பேசி அவன கெடுத்துறாதீங்க” என்ற அம்மாவின் குரல் பலமுறை இவர்களது உரையாடலுக்கு முற்றுபுள்ளி வைத்திருக்கிறது.

படித்த காலத்தில் இயந்திர வாழ்க்கை. மருத்துவம் படிக்க சென்னை விஜயம். மற்ற நாடுகளை விட ஒழுக்கமான நகரம் என அம்மா தேர்ந்தெடுத்தது தான் இதுவும்.

ஆனால் சென்னை சென்றதும் அபிஷேக் முதலில் உணர்ந்தது முழு விடுதலை என்பதைதான். மது, புகை என்பதை தாண்டி போதையை நோக்கி பயணம்.

ஏதோ ஒரு குற்ற குறு குறுப்பு, க்ரீவிங் உள்மனதில். மெல்ல தோன்றி, முழுவதுமாய் கொன்று தின்றது அவனை. மெல்ல எனினும் அழுத்தமாய் கடவுளை நோக்கி அவன் நகர தொடங்கிய காரணம் அதுதான்.

இவன் வீட்டில் கடவுளை கிறிஸ்துமஸ் பார்டிக்கு காரணமாய் இருப்பதற்காக தவிர எதற்காகவும் கண்டு கொண்டது கிடையாது. ஆனால் இப்பொழுது அவனுக்கு அவர் அஸ்திவாரம். வழிகாட்டி,

அனைத்து அழிவுக்கேதுவான பழக்கங்களையும் விட்டுவிட்டு ஆனந்தமான, அற்புதமான, காண்போர் ஏங்கும் வாழ்க்கை இவனுக்கு இப்போது சொந்தம்.

ஆனாலும் என்றோ ஏங்கிய மனம் எங்காவது விழுந்துவிடாமல் இருக்க  தோழிக்கு தோழியாய், உறவில் உரிமையில் மனைவியாய், மையல் கொள்ளும் காதலியாய், அன்பு பாராட்டுவதில் அன்னையாய், அவனுள் இருக்கும் அனைத்து அன்பிற்கும் அதிபதியாய், இவனது குடும்பமாய், இவன் ஒருமிக்கும் ஒற்றை புள்ளியாய், தன்னுடன் தன்னில் பாதியாய் ஒரு பெண் இருப்பது நல்லது என்பது அபிஷேக்கின் அசைக்க முடியாத நம்பிக்கை.

ஒருவராய் இருப்பதை விட இருவராய் இருப்பது எப்போதும் உத்தமம். ஒருவர் விழுந்தால் அடுத்தவர் தாங்குவார்.

ஆண், பெண் என இருவராய் இருந்தாலும் குடும்ப வாழ்க்கை எனும் ஒரு பாதையில் செல்ல இவனது போன்ற நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும் உள்ள குடும்பபாங்கான பெண்தான் இவனுக்கு பொருந்தும் என இவன் தேட, அத்தகைய பெண்களின் குடும்பத்தார் இவனுக்கு பெண் கொடுக்க தயாராயில்லை.

அத்தனை தடைகளும் இன்று இங்கு இவளை பெண்கொள்ளதானோ?

தயனியை அவனுக்கு முதல் பார்வையில் பிடித்தது என்பது நிஜம். பிடிக்காமல் இருந்திருந்தால்தான் ஆச்சர்யம், காரணம் அவள் அழகு.

சற்றே நீள் வட்டமான முகமும், கடல் நிகர் கண்களும், கைகொள்ளா  கன்னங்களும், கண்ணாடியோ எனும் சருமமும், வெண்ணெய் கண்ட குங்கும பூ நிறமும், அவசியமின்றி அல்வாவை ஞாபகபடுத்தும் உதடுகளும் அத்தனையும் தாண்டி இவள் பருவம் கொண்டவள் எனும் எண்ணம் தந்து மனம் கலைக்காமல் மனதில் சுத்த மகிழ்ச்சியை மாத்திரம் சுழல வைக்கும் குழந்தைதனமும் அவள்பால் அவனை சரிக்க முயன்றது உண்மை.

வெறும் அழகில் திருமண முடிவெடுப்பது என்றால், எப்பொழுதோ இவனுக்கு ஒரு திருமதி வந்திருப்பாள்.

ஆனால் தயனி மயக்க மருந்தின் விளைவில் உளறிய உளறல்கள்தான் அவள் உள்மன அழகை இவனுக்கு திறந்து காட்ட, தன்னதாகும் வரை எதன் மீதும் ஆசை கொள்ள கூடாது என்ற அவன் கொள்கையை காப்பாற்ற அபிஷேக் இப்பொழுது கடும் யுத்தம் செய்து கொண்டிருக்கிறான் தன்னோடு..

அடுத்த பக்கம்