காற்றாக நான் வருவேன் 2

வள் விழுவதை பார்த்திருந்த அபிஷேக் பாய்ந்து சென்று தடுத்து பிடிக்க முயலவில்லை, மாறாக மன வேதனையுடன் செய்கையற்று பார்த்திருந்தான். அவளை தாங்கி பிடித்தால் அவள் உடலுக்கு நல்லது…ஆனால் அவள் மனதுக்கு…?

அவள் அருகில் அவன் செல்ல

“சாரி அபிஷேக் நீங்க எனக்கு ந…நல்லது செய்றீங்களா…கெடுதல் செய்றீங்களான்னே….புரியலை…” முனங்கினாள் தயனி.

இட்ஃஸ் ஓ.கே… தயனி டேக் யுவர் ஓன் டைம்..” என்றவன் அவள் தலைக்கு அருகில் ஒரு தலயணையை  வைத்துவிட்டு அறையை விட்டு வெளியேறினான்.

தொட்டு கட்டிலுக்கு தூக்கினால் இன்னும் என்ன ஆர்பாட்டம் செய்வாளோ?

பால் மற்றும் பிரட் ஆம்லெட் கொண்டு வந்து அவள் அருகில் வைத்தான்,

“அஸ் அ டாக்டர், சாப்பிடுவது நல்லதுன்னு சஜஸ்ட் பண்றேன்..” சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.

அவளாக எழுந்து சாப்பிட மிகவும் கஷ்டமாக இருக்கும் அவளிருக்கும் நிலைமைக்கு என இவனுக்கு நன்றாக தெரியும். ஆனால் இவன் ஊட்ட முயன்றால் அவள் எகிறி குதிப்பாளே!

வாசலருகில் நின்று திரும்பி பார்த்தான், தயனி உணவு உண்கிறாளா என. அவள் அசையவே இல்லை. அடுத்த அறைக்குள் நுழைந்து கொண்டான் அபிஷேக்.

கண்ணாடி  உடையும் சத்தம் கேட்க திரும்பி ஓடி வந்தான். அவன் நினைத்தது போல பாலை குடிக்க முயன்று அதை நழுவவிட்டிருந்தாள் தயனி. பாலின் ஈரத்தில் அவள் நனைந்து விட கூடாதே!

ஓடிச்சென்று அந்த பாலை வேகமாக துடைத்தெடுத்தான். அவள் உடை நனைந்திருக்கிறதா என பார்வையால் ஆராய்ந்தான்.

அவளுக்கே அப்பொழுதுதான் உறைத்தது. அவளது ஆடை?

கூசி குறுகிய படி தன்னை மேலும் கீழுமாக பார்த்தாள். அவளது அதே புர்காவில்தான் இருந்தாள். முதுகு புறம், காயம்பட்டிருந்த பகுதி மட்டும் திறந்திருப்பதை உணர முடிந்தது.

“வூண்ட் திறந்திருக்கனும்….அப்பதான் சீக்கிரம் ஆறும்….அதை தான் செய்தேன்…டாக்டரா மனசாட்சிக்கு விரோதமில்லாம என்ன செய்யனுமோ அதமட்டும்தான் செய்தேன்….”

பாலை துடைத்திருந்த துணியை எடுத்துகொண்டு அவன் திரும்ப “அபிஷேக் என்னை கட்டிலில் விட முடியுமா?” அவள்தான் அழைத்தாள்.

கவனமாக அவளை கட்டிலில் விட்டவன், உணவு தட்டை எடுத்துகொண்டு அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்தான். அவன் கொடுக்க கொடுக்க வேகமாக உணவை வாயில் வாங்கி கொண்டாள்.

அடுத்த குவளை பாலை எடுத்து வந்து பருக செய்தான் அவளை. அவன் கண்களை பார்த்து நன்றி சொன்னவள் தூங்கிப் போனாள். மருந்தின் விளைவு.

மீண்டுமாக அவள் விழிக்கையில் அவளருகில் அமர்ந்து ஏதோ புத்தகம் படித்து கொண்டிருந்தான் அபிஷேக்.

இவள் விழித்ததை பார்த்தவன், “வலி தெரிய ஆரம்பிக்கிதோ தயனி?” கனிவாக கேட்டான். ஒரு டாக்டருக்கு கட்டாயம் குரல் இப்படித்தான் இருக்க வேண்டுமென அவள் எண்ணிக் கொண்டாள்.

“ம். ஆனா தாங்க முடியுது….”

“இன்னைக்கு பெயின் கில்லர்ஸ் தாரேன்…..ஊண்ட் சீக்கிரம் ஆற மெடிசின்ஸ் குடுத்திருக்கேன்…..இன் ஃப்யூ டேஸ் யு வில் பி ஆல் ரைட்”

“தேங்க்ஃஸ்” காய்ந்த உதடுகளுடன் பேச கஷ்டப்பட்டாள்.

மீண்டுமாக ஒரு கப் பால் கொண்டு வந்து கொடுத்தவன், “உன்னைபத்தி சொன்னால் என்னால உனக்கு என்ன உதவி செய்ய முடியும்னு பாக்கலாம். நியாயமான எந்த உதவியும் செய்ய தயாரா இருக்கேன்..” அவனை நம்பும்படியாய் ஒரு முக பாவத்துடன் சொன்னவன் பதிலுக்காய் அவள் முகம் பார்த்தான்.

யனியின் தந்தை யுவ்ரேவ் தஜு அந்த நாட்டு மன்னரின் ஆலோசகர், நண்பர். அபிஷேக் குறிப்பிட்ட அந்த முதல் குடும்பம் இவளதுதான்.  வாணிபம், வசதி, பதவி என எல்லாம் சுபம் தயனியின் பிறந்த வீட்டில்.

இவளது 10 வயதில் இவளது அன்னை மறைய தன் ஒரே மகளை கண்ணின் மணியாக பேணி வளர்த்தார் அப் பாசமிகு தந்தை வேறு திருமணம் ஏதும் செய்யாமல் கடவுளை மாத்திரம் துணையாக கொண்டு.

தயனியின் பதினேழு வயதில் அவளது தூரத்து உறவினர் என சொல்லிகொண்டு வந்து சேர்ந்தார் அந்த அத்தை. மிக அன்பாக நடந்து கொண்டார் தயனியிடம்.

தாயை காண்பது போன்ற உணர்வு தயனிக்கு. அவர் வந்த இரண்டாம் நாள் திடீரென யுவ்ரேவ் உடல் நலம் குன்றி மரண படுக்கையில் விழுந்தார். அப்பொழுது பரிதவித்த இவளுக்கு தேறுதலும் ஆறுதலுமாக இருந்தது அந்த அத்தைதான்.

மேலும் தவித்த யுவ்ரேவிடம் தயனியின் எதிர்காலத்தை குறித்து அவர் பயபட தேவையில்லை என்றும், அவள் இனி தன் பொறுப்பு என்றும், அவர் சம்மதித்தால் தன் மகனுக்கு தயனியை ஏற்ற நேரத்தில் மணமுடிப்பதாகவும் ஆறுதல் சொன்னார்.

அன்றே தன் செல்வாக்கை பயன்படுத்தி இந்தியாவிலிருந்த அத்தை மகனை குறித்து விசாரித்த யுவ்ரேவிற்கு மருமகனை மிகவும் பிடித்துவிட்டது. ஆனாலும் வெறும் வார்த்தை அளவில், மகளை உரிமையின்றி அந்த அத்தையிடம் ஒப்படைக்க தயனியின் தந்தைக்கு விருப்பம் இல்லை.

மணமக்கள் வெவ்வேறு இடத்திலிருந்தபடி திருமணம்செய்ய இந்நாட்டில் வகையுண்டு. அந்த வகையில் உடனே திருமனம் செய்யலாம் என்றார் யுவ்ரேவ். வருங்கால மருமகனிடம் இவள் தந்தை போனில் பேச, அவனும் சம்மதிக்க அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் சட்டபடி பதியபட்டது திருமணம்.

ஒருவரை ஒருவர் பாராமல், ஒருவரோடு ஒருவர் பேசாமல் ஒரு திருமணம். தயனியும் எதற்குள்ளும் மனம் செலுத்தும்  நிலையிலும் இல்லை. அவள் மனம் தான் முழுவதுமாக தந்தைக்காக தவித்து கொண்டிருந்ததே.

துயரத்திலும் துயரமாய் அன்று இரவே யுவ்ரேவ் மரித்தும் போனார். இறுதி சடங்கு முடிந்து மருமகளை தன்னோடு அழைத்து வந்தார் அந்த மாமியார்.

அடுத்த பக்கம்