காற்றாக நான் வருவேன் 1 (3)

“ஆனா நான் ஒரு டூரிஃஸ்டா கூட இருக்கலாமே!” மெச்சுதல் குரலில். கடையோரத்து இதழில் சிறுநகை.

“அப்படி நீங்க வெளி நாட்டு பாஸ்போர்ட்டோட டூர் வந்திருந்தீங்கன்னா, நேரே என்னை ஹாஸ்பிட்டல் கொண்டு போயிருப்பீங்களே! இப்படி சட்டதுக்கு பயந்து வந்து ஒளிச்சு வச்சிருக்க மாட்டீங்களே.

டூரிஸ்டுனா உங்களுக்கு இந்த நாட்டு சட்டம் தெரிஞ்சிருக்காது. அப்படியே தெரிஞ்சிருந்தாலும் இப்பதான் இங்க வந்தேன், இந்த பொண்ணுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லனு ஃப்ரூப் பண்ண ஆயிரம் சாட்சி இருக்கும், அப்படி நிரூபிக்க முடியலைனா கூட, அதிக பட்ச தண்டனையே இனி இந்த நாட்டுக்கு வராதேன்னு திருப்பி அனுப்புறதாதான் இருக்கும்.

அதே இது ஒரு டூரிஸ்ட் இந்த நாட்டு பொண்ணை ஒளிச்சு வச்சிருக்கிறது வெளிய தெரிஞ்சுதோ, போலிஃஸ் விசாரணையே இல்லாம போட்டு தள்ளிட்டு, சாக்கடையில் பிணம் கண்டு பிடிப்புன்னு செய்தி கொடுப்பங்க, அதனால இதுக்கு அது மேலன்னு ஹாஸ்பிட்டல்தான் கொண்டு போயிருப்பீங்க, அதுவே இந்த நாட்டு சிட்டிஸன்ஷிப் வச்சிருந்தீங்கன்னா, இப்ப செய்றத மட்டும்தான் செய்ய முடியும்”

கனிவாய் அவளை பார்த்தபடி நின்றிருந்தான் அபிஷேக்.

“இவ்வாளவு புத்திசாலி எப்படி இப்படி மாட்டின?” கோபமும் ஆதங்கமும் இரக்கமும் சரி சமமாய் கலந்து ஒலித்தது அக்கேள்வியில்.

“தனக்காக பேச ஒரு ஜீவன் இருக்கிறதா?” அவனை ஆராய்ச்சியாய் பார்த்தாள் அவள். ஒரு கணம் மனதிற்குள் மாருதம், மறு கணம் தலை முதல் கால் வரை  ஆட்கொண்டது கடும் பயம்.

‘ஏன் இவன் இவளுக்கு உதவ முயற்சிக்கிறான்?…ஒருவேளை இவளால் இவனுக்கு வேறு ஏதாவது பிரயோஜனம் இருக்குமோ?’  அனுபவபட்ட மனது எச்சரித்தது. ‘எங்காவது தவறான இடத்தில் விற்றுவிட்டால்?…….’ துள்ளி எழுந்தாள்.

கையில் ஏறிக்கொண்டிருந்த டிரிப்ஸ் உருவி ரத்தம் கொட்டியது.

“ஹேய் தயனி, என்னாச்சு….ஏற்கனவே அதிக பிளட் லாஸ்” பதறி ஓடி வந்து, எழுந்தவளை பிடித்து முன்பிருந்ததுபோல் ஒரு சாய்த்து படுக்க வைக்க முயன்றான்.

“தொடாதீங்க, டோன்ட் டச் மீ, என்னை விடுங்க, நான் போகனும்” அலறினாள் தயனி.

ஆனால் ஒரு வாலிப ஆணின் புஜ பலத்துக்கு முன்னால், பல நாள் பட்னியும், சவுக்கடியுமாக மயங்கி கிடந்த இவளின் பலம் எம்மாத்திரம்? அவளை வலுகட்டாயமாக படுக்க வைத்த அபிஷேக் அவள் கையிலிருந்த நீடிலை உருவினான். ரத்தம் கொட்டுவது நின்றது.

“யேசப்பா ப்ளீஸ் ஹெல்ப் மீ, என்ன காப்பாத்துங்க, திரும்பவும் மனுஷ மிருகங்கட்ட என்னை விடாதீங்க……., ப்ளீஸ்…….பயமா இருக்கே, ஐயோ! பயமா இருக்கே….,சாகபோறேன்னு சந்தோஷமா இருந்தேனே……அப்பா…..பயமா இருக்குபா, பயமா இருக்குபா….” அவள் கதற கதற இவனுக்குதான் என்ன சொல்லவென தெரியவில்லை.

“தயனி.., தயனி…., பயபாடாதே தயனி, நான் உன்னை ஒன்னும் செய்யலைமா….” இவன் வார்த்தை அவள் காதில் விழுந்தால் தானே!. சட்டென அவளை விட்டு விலகினான். கட கடவென அறையை கடந்து சென்றான்.

அவன் அவள் மீதிருந்த பிடியை விலக்கியதும் உருவி ஓட முயன்றவள் உடல் ஒத்துழைக்காததால் தடுமாறி மெல்ல படுக்கையைவிட்டு இறங்கினாள். மனம் வாயில் வழியாக வெளியே பறந்தாலும் உடல் நின்ற இடத்தில் நின்றது.

திரும்பி வந்த அபிஷேக் அவளிடம் தன் கார்சாவியை கொடுத்தான். “நீ எங்கே போகனுமோ போய்கோ, இல்ல நான் வந்து விடனுனாலும் விடுறேன். பிஸ்டலை கூட தந்துருவேன், பட்….நீ சாவ பத்தி பேசுனதுல…..அதுக்காகவா நான் இவ்ளவு ரிஸ்க் எடுத்து உன்ன காப்பாத்துனேன்….”

கை நீட்டி சாவியை வாங்கிக் கொண்டாள். அருகில் நின்றவன் கண்களை ஆழ பார்த்தாள். உண்மை, பரிவு, பயமின்மை இவையின் மொத்த உருவமாக தெரிந்தன அவை. அதன் வழியாக தெரிந்த அவனது மனம் அவளை அழ வைத்தது. ‘இவன் உண்மையில் நல்லவனாக இருந்தால்,இவளுக்காக எத்தனை ஆபத்திற்குள் தன்னை உட்புகுத்தி இருக்கிறான். அதற்கு இவள் செய்யும் கைமாறு என்ன?’

“சாரி அபிஷேக்……சாரி…என்னால யாரையும் நம்ப முடியாது….”கேவினாள்.

அவ்வளவுதான் அதுவரை அவளை தாங்கியிருந்த கால்கள் வலுவிழக்க  குப்புற விழுந்தாள்.

தொடரும்..

One comment

Leave a Reply