கர்வம் அழிந்ததடி 4 (3)

பெரியம்மா என்பது தனது ஆச்சி தான் என்று புரிந்ததும் அக்ஷராவிற்கு ‘அட!!! சூப்பர் ஆச்சியா இருக்காங்களே’ என்று தோன்றியது. “அண்ணே!! ரோட்டுக்கு அந்தப் பக்கமிருக்கிற தோப்பு நம்மளுது தான். மொதல்ல மாந்தோப்பு மட்டும் தான் இருந்துச்சு. நீங்க வாரீங்கனு சொன்னதும் பெரியம்மா தென்னந்தோப்பும் வாங்கிப் போட்டுட்டாங்க. பக்கத்து தோப்பு இடமெல்லாம் ஃப்ளாட் போட குடுத்திட்டாங்க. நம்ம எடத்தையும் கேட்டாங்க. பெரியம்மா திட்டி விரட்டி அனுப்பிட்டாங்க.” என்று கூடுதல் தகவலும் கொடுத்தான்.

 

‘அடடா!! நம்ம ஆச்சி ரொம்ப இன்ட்ரெஸ்ட்டிங் காரெக்டரா இருப்பாங்க போலவே’ என்று ஆச்சரியம் கூடிப் போனது. மெயின் ரோட்டில் இருந்து விலகி உள்ளே இருந்த மண்ரொட்டில் வண்டி செல்லத் துவங்கியது. திடீரென சாரல் தொடங்கியது. அவ்வளவு நேரமிருந்த காற்றின் கதகதப்பு மாறிப் போய் காற்றில் ஈரப்பதம் அதிகமாக ஒரு ரம்மியமான உணர்வு எழும்பியது.

 

“சீசன் ஆரம்பிச்சாச்சா மருதண்ணா?” என்றார் சத்தியன். “இந்த முறை சீக்கிரமே ஆரம்பிச்சாச்சுய்யா. அருவில தண்ணி கொட்டுதாம். எப்போ போகனும்னு சொல்றீங்களோ அப்போ போகலாம்” என்றார். பார்வையை வெளியில் இருந்து ஒரு நொடி கூட அகற்றாது வந்தவர் அக்ஷராவிடம் “அச்சும்மா குற்றாலம் புலியருவி இங்கிருந்து மூனு கிலோமீட்டர் தான். மெயின் ஃபால்ஸும் பக்கம் தான். நிதானமா போகலாம் டா. என்ன அவசரம்!! இனி இங்கே தானே!!” மகளுக்குச் சொல்வது போல தனக்குத் தானே சொல்லிக் கொண்டார்.

Advertisements

இதெல்லாமே ஊருக்கு போகப் போகிறோமென்றதுமே கூகுளாண்டவர் துணையால் தெரிந்து வைத்துக் கொண்ட விஷயம் தான் அக்ஷராவிற்கு. இருந்தும் அப்பா சொல்லும் போது புதிதாய் கேட்டுக் கொண்டாள். அவரது சிறுபிள்ளை போன்ற குதூகலம் அவளுக்கு ரொம்பவே புதிதாக இருந்தது. ப்ரிகேடியர் சத்தியமூர்த்தியாய் ஆர்மியில் மிரட்டியவர் இப்போது சிறுகுழந்தையின் உற்சாகத்தோடு சொந்த ஊரில்….. சாருமதியைப் பார்த்து சிரித்துக் கொண்டாள் அக்ஷரா.

 

 

கார் ஒரு பெரிய இரும்பு கேட்டின் முன் சென்று நின்றது. டிரைவர் இறங்கிச் சென்று கேட்டைத் திறக்க அதற்குள் உள்ளிருந்து இரு உதவியாட்கள் உதவிக்கு வர கார் உள்ளே சென்றது. வெளியில் இருந்து பார்க்க இந்த காலத்து வீடு போல் இருந்தாலும் உள்ளே நுழைவாயிலின் இருபுறமும் பெரிய திண்ணைகளுடன் பழைய காலத்து வீட்டை நினைவூட்டின. திண்ணையில் நல்ல அகலமான தூண்கள் இருந்தன.

 

முன்புறம் சாய்ப்பு இறக்கி ஓடு வேயப்பட்டிருந்தது. திண்ணையில் கொல்லம் செங்கல் பதிக்கப்பட்டிருந்ததால் காலை வைத்ததுமே ஒரு குளுமை பரவியது. வாயிலில் கேட்டினை ஒட்டினாற் போல் பூந்தோட்டம் அமைத்திருந்தனர். வீட்டின் நான்கு மூலைகளிலும் தென்னை மரங்கள் இருந்தது. கீழோரத்து சுவற்றின் அருகில் இருந்த வேப்பமரம் நன்கு படர்ந்து கிளை பரப்பியது. தெற்கு பார்த்த வாசல் என்பதால் நல்ல காற்று வசதி இருந்தது புரிந்தது. வீட்டைக் கண்டதும் அப்படியே லயித்துப் போய் அந்த இடத்திலேயே நின்று விட்டாள் அக்ஷரா.

 

காரை விட்டு இறங்கியதுமே தன் தாயிடம் சென்ற சத்தியன் அவரது கால்களைத் தொட்டு வணங்கி எழுந்தார். பலகாலம் சென்று வீடு திரும்பிய மகனை அப்படியே கட்டிக் கொண்டார் ராஜமீனா. மெல்ல தயக்கத்துடன் நடந்து வரும் மருமகளைக் கண்டவர் “வாம்மா” என்று மனதார அழைத்தார். மாமியார் எப்படி இருப்பாரோ, தன்னை எப்படி ஏற்றுக் கொள்வாரோ என்று இத்தனை வருடங்கள் கழித்தும் பயப்படும் மருமகளாக வந்தவளை தனது மகளாகவே ஏற்று அவளை வரவேற்று உச்சிமுகர்ந்த மீனாவின் பாசத்தில் சாரு உருகிப் போனாள்.

அடுத்த பக்கம்

Advertisements