கர்வம் அழிந்ததடி 4 (2)

மருது தன்னைத் தூக்கி வளர்த்தவராயிற்றே. இவரின் அணைப்புக்குள் சிக்குண்ட மருது கூச்சத்தில் நெளிந்தபடி ” என்னய்யா என்னைப் போய் கட்டிகிட்டு…. இது தான் நம்ம தாய்ங்களா?? வணக்கம்மா. நான் மருது. ஐயாவ சின்ன வயசிலருந்தே பழக்கம். இவங்க வீட்டுல தான் வேலை செய்யறேன்.”விட்டால் கீழேயே பணிந்து குறுகி விடுவார் போல் நின்ற மருதுவை தன்னோடு அணைத்துக் கொண்ட சத்தியன் “என்ன மருதுண்ணா. இப்படி கும்பிடெல்லாம் போடறீங்க? வாங்க. வீட்ல எல்லாரும் நல்லாருக்காங்களா? அச்சும்மா இவங்க பேரு மருது. எனக்கு சின்னப்பிள்ளையில இருந்து ஃப்ரெண்டு. மருதண்ணா இது எம் பொண்ணு அக்ஷரா” என்றார்.

 

மருதுவிற்கு சத்தியன் தன்னை அவரது சேக்காளி என்று சொன்னதே பெரிய விருது கிடைத்த குஷி. தன்னையே சிரித்த முகத்துடன் பார்த்து நிற்கும் அக்ஷராவைக் கண்டதும் அவருக்கு மனம் நிறைந்து போனது. காரணம் அக்ஷராவின் தோற்றமே. ராஜமீனாவின் இளவயது புகைப்படத்தை வைத்து ஒத்து நோக்கினால் ஆறு வித்தியாசங்கள் கூட வராது.

 

எந்தவித அலட்டலுமில்லாத ஆர்ப்பாட்டமில்லாத குளுமையான அழகு. ஆகாய நீலத்தில் சிம்பிளான காட்டன் குர்த்தியும் ஜீன்ஸுமாய் ஏதோ பள்ளிக்கூட மாணவியின் தோற்றம். “பாப்பா ஸ்கூல் படிக்கிறாங்களா தம்பி?” மருது வெள்ளந்தியாய் கேட்டு வைத்தார். “ஹாஹாஹா மருதண்ணா அவ காலேஜ் எல்லாம் முடிச்சுட்டா.” என்று சிரித்தார்.

 

“மன்னிச்சுக்கங்க தாயி. ரொம்ப சின்னப்பிள்ளையா தெரிஞ்சீங்க. அதான் ஸ்கூல்ல படிக்கிறீங்களானு கேட்டுட்டேன்.” தலையைச் சொறிந்தபடி சொன்னார் மருது. “அதனாலென்ன தாத்தா. நீங்க என்னை நீ வான்னே சொல்லுங்க. நீங்கனு எல்லாம் சொல்லாதீங்க.” என்று சிநேகமாய் சிரித்தபடி சொன்னவளைப் பார்த்த மருதுவின் கண்கள் குளமாகின.

Advertisements

“ஐயா!! சின்னம்மா நம்ம அம்மா மாதிரியே இருக்காங்கய்யா.” என்றதும் மகளை ஒருதரம் கூர்ந்து நோக்கிய சத்தியனுக்கு தான் எப்படி இத்தனை நாள் இதை கண்டுகொள்ளாமல் இருந்தோம் என்ற வியப்பு மேலிட்டது. மருது இவர்களது பெட்டிகளை எல்லாம் தூக்கப் போக அவரைத் தடுத்த அக்ஷராவும் சாருமதியும் அவரவர் பெட்டிகளை அவர்களே தூக்கிக் கொண்டனர்.

 

இவர்களுக்கென்று காத்து நின்ற காரை நோக்கிப் போகும் போது ஏனோ அக்ஷராவிற்கு யாரோ தன்னையே பார்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. சட்டென்று நின்று ஒருமுறை சுற்றும் முற்றும் பார்த்தாள். ஆனால் எதுவும் புரிபடவில்லை. தனது பிரமை என்றெண்ணி தோளைக் குலுக்கிய படி சென்று காரில் தங்களுடைய ட்ராலி பெட்டிகளை அடுக்கிவிட்டு பின்னிருக்கையில் தாயுடன் ஏறிக் கொண்டாள்.

 

கார் கிளம்பியபின் இரயில் நிலைய தூணிற்கு பின்னின்ற அமிர்தன் மெல்ல வெளிவந்தான். அக்ஷரா நின்றதும் எங்கே தன்னைக் கண்டு கொள்வாளோ என்று ஒருநிமிடம் பயந்திருந்தான். ‘ஆரா பேபி!! சூப்பர் ஸ்மார்ட் நீ!! கண்டுபிடிச்சிட்டியே. சீக்கிரமா வரேன் பேபி. உன்னை அப்படியே சம்யுக்தாவைத் தூக்கிட்டுப் போன ப்ருத்விராஜன் மாதிரி தூக்கிட்டுப் போறேன். ஜஸ்ட் வெய்ட் ஃபார் மீ’ மனசுக்குள் சொல்லிக் கொண்டான்.

 

கார் நேராக மேலகரத்தை நோக்கி விரைந்தது. புதிதாக உருவான ஸ்டேட் பாங்க் காலணியை அடைந்ததும் கொஞ்சம் வண்டியின் வேகத்தை குறைத்தார் டிரைவர். கேள்வியாய் நோக்கிய சத்தியத்திடம் “இந்தப் பக்கம் ஒரு ஸ்கூல் இருக்குண்ணே. அந்தப் பசங்க இப்போ இந்த வழியாத்தான் ரோட்டைக் கிராஸ் பண்ணுவாங்க. அதான் இங்கே எப்பவும் ஸ்லோ பண்ணனும்னு பெரியம்மா சொல்லியிருக்காங்க” என்றான்.

அடுத்த பக்கம்

Advertisements