கர்வம் அழிந்ததடி 4

“ஒத்தையடி பாதையில

ஒத்தையில போறவளே

கரடிவந்து வழி மறிச்சா

காட்டுக்குள்ள என்ன செய்வ”

 

இரயிலின் ஆட்டத்துக்கு ஏற்ப பாடலும் ஹெட்ஃபோனில் ஒலிக்க அக்ஷரா கலவையான உணர்வுடன் தந்தையின் ஊருக்கு பயணப்பட்டாள். இந்தப் பயணம் தனக்கு என்ன வைத்திருக்கிறது என்று தெரியாத போதும் ஏனோ தனது வாழ்க்கையின் முக்கியமான கட்டமாக அமையும் என்று உள்ளுணர்வு அடித்துச் சொன்னது. அவர்களது சாமானை எல்லாம் பார்சல் சர்வீஸிடம் ஒப்படைத்து விட்டு அன்றைய இரவு இரயிலில் கிளம்பினர் மூவரும்.

 

விடுமுறைக்கு பாட்டி வீட்டிற்கு செல்லும் சிறுவனின் மனநிலை தான் சத்தியத்திற்கு. இரயில் ஏறியது முதலாக ஏதேதோ கதை சொல்லியபடி வந்தார். அவர் பேசியதில் அதிகப்படியாக வந்த விஷயம் ‘சுலோக்கா’, சில்லுக் கருப்பட்டி, குற்றாலம் ஃபால்ஸ், மாணிக்கம் அண்ணா. ஏனோ இவற்றைச் சுற்றியே வந்தது பேச்சு. தன் தந்தையின் வாழ்க்கையில் இவர்கள் இவைகள் மிகவும் முக்கியம் என்பது நன்கு புரிந்தது அக்ஷராவிற்கு.

 

“எங்க சுலோக்கா நெத்திலி மீன் குழம்பு வச்சா எப்படி இருக்கும் தெரியுமா? அச்சும்மா!! நம்மூர்ல இந்த பருப்பு சோறும் கறிக்குழம்பும் செய்வாங்க பாரு!! அதுக்காகவே பள்ளிக்கூடத்துக்கு மட்டம் போட்டுட்டு வந்திருவேன் பாதியிலேயே. சுத்தமான தண்ணீர், எங்க பார்த்தாலும் பச்சை பசேல்னு வயல்வெளி. ஹும்ம் சொந்த ஊர்லயே வாழறவன் எல்லாம் கொடுத்து வச்சவன் மா” ஒரு ஏக்கப் பெருமூச்சுடன் முடிப்பார்.

Advertisements

மீண்டும் ஐந்து நிமிடம் கழித்து “சாரு!! எங்கம்மா உளுத்தங்களி கிண்டுவா பாரு!! என்ன ருசி!!! நீ பக்குவம் கேட்டு வச்சுக்கோ. சரியா. இந்த மாணிக்கம் அண்ணன் வீட்டு மையினி வைக்கிற கருவாட்டுக் குழம்பு இருக்கே!!!! இதெல்லாம் என்னவோ நேத்து சாப்பிட்டா மாதிரியே இருக்கு. இதெல்லாம் விட்டுட்டு சுயத்தை தொலைச்சுட்டு எங்கேயோ போய் இருந்திருக்கோம் பாரேன்!!” என்று மீண்டும் ஆரம்பிப்பார்.

 

அக்ஷரா கூட ஒரு நேரம் பொறுக்க முடியாமல் “ஏன்பா சாப்பிடறதுக்குன்னே ஊருக்குப் போறீங்களா? உங்களுக்கு ஊர்ல சாப்பாடு மட்டுமே தான் ஞாபகம் இருக்கா? மனுஷங்க இல்லையா?” என்று கேட்டு விட்டாள். சாருமதி உடனே “அச்சும்மா!! என்ன பேச்சு இது. அப்பாகிட்ட இப்படியா பேசறது?” என்று கண்டித்தார்.

 

மகளின் கேள்வியில் சிரித்தவராய் சத்தியன் அக்ஷராவின் கைகளைப் பற்றியவர் “அச்சும்மா இது வெறும் சாப்பாடு மட்டுமில்லடா. இது மனுஷனோட உணர்வு மற்றும் ரசனையோடு சம்பந்தப்பட்ட விஷயம். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா மனுஷங்களை ரிலேட் பண்ணிப்பாங்க. நான் ரிலேட் ப்ணணிக்கிற விதம் இது தான். மனுஷன் இந்த நாக்குக்கு அடிமை அச்சும்மா. இது மட்டும் கட்டுப்பாட்டுக்குள்ள வந்துட்டா அப்புறமா வாழ்க்கை நமக்கு வசப்பட்டா மாதிரி தான்.” பார்வை மகளின் முகத்தில் பதிந்திருந்தாலும் ஏனோ மனம் வேறெங்கோ பறந்திருந்தது.

 

தந்தையின் மனம் ஏற்கனவே கீழூருக்கு போய்விட்டதை உணர்ந்தவளாய் அவரின் தோள் சாய்ந்து கொண்டாள் அக்ஷரா. தூங்கும் நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் ஊர் புராணமே சத்தியனுக்கு. தன் தந்தையின் ஆர்வத்தைப் பார்த்தவளுக்கு ‘கடவுளே!! ஊரில் அப்பாவுக்கு பிடிச்ச மாதிரியே இருக்கனுமே. அவர் மனசு வருத்தப்படற மாதிரி எதுவுமே நடக்காம இருக்கனுமே’ கடவுளிடம் ஆயிரம் முறை கோரிக்கை வைத்தவளாக வந்தாள்.

 

ஒருவழியாக அதிகாலை நேரம் தென்காசி இரயில் நிலையத்தை வந்து சேர்ந்தனர். பல வருடங்களுக்கு பின் தாய் மண்ணை மிதிக்கப் போகும் போது மனதுக்குள் ஏதோ இனம் புரியாத உணர்வு சத்தியனுக்கு. இவர்கள் வண்டியில் இருந்து இறங்கவும் “ஐயா!!! நல்லாருக்கீங்களா சாமீ!!!” கண்களில் நீர்த்துளி பணிக்க கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டு வந்து நின்ற மருதுவைக் கண்டதும் அவரை அணைத்துக் கொண்டார் சத்தியன்.

அடுத்த பக்கம்

Advertisements