இன்பம் எனும் சொல் எழுத 1

ந்த இரவு நேரத்தில் சிணுங்காமல் சிதறாமல் கொட்டிக் கொண்டிருந்தது மழை.

மழையின் நசநசப்பை தாண்டியும் வெளியே எதோ நடமாடும் சத்தம் கேட்பதாய்  ஒரு உணர்வு வீட்டில் தனியாய் இருந்த அனிச்சாவுக்கு.

காம்பவ்ண்ட் கேட்டை தாண்டி நாய் எதுவும் உள்ள வந்துட்டோ? ஜன்னல் வழியாய் வெளியே எட்டிப் பார்த்தாள் அவள், பார்த்தவரை வித்யாசமாய் எதுவும் படவில்லை.

‘சே, இன்னைக்காவது இந்த ஆது சீக்கிரம் வந்துருக்கலாம். இந்த இன்வெர்டர் வேற இன்னும் எவ்ளவு நேரம் தாங்கும்னு தெரியலை’ மனதுக்குள் தன் அண்ணனை நினைத்து முனங்கிக் கொண்டவள்,

மீண்டுமாய் தான் வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்திற்கு முன்னாய் உட்கார்ந்த நேரம் வீட்டின் மாடிப் பக்க கதவில் எதோ சத்தம்.

சட்டென தூக்கி வாரிப் போட உடல் விறைத்தது இவளுக்கு, என்ன ஏது என இவள் உணரும் முன்னம் மாடிப்படிகளில் வேக வேகமாய் இறங்கி வந்து கொண்டிருந்தான் அவன்.

இதற்கு முன் இவள் பாத்திராத அக்மார்க் அன்னியன்.

ஒரு க்ரீச்சிடலுடன் சுவரோடு ஒண்டினாள் அனிச்சா.

கோட் சூட் டை என்ற அவனது கோலம் நிச்சயமாய் அவன் திருடனில்லை என அவளை நம்ப வைக்க,

“யார் நீ?” இவள் கேட்க வேண்டியதை கேட்டது அவன்.

நகரத்தின் புறநகர் பகுதியில் உண்டாகிக் கொண்டிருக்கும் ஒரு குடியிருப்பு இது,

இத்தனை மணிக்கெல்லாம் இங்கு ஆள் நடமாட்டமே இருக்காது.

அங்கொன்றும் இங்கொன்றுமாய் வீடுகள் உண்டே தவிர அடுத்த வீடு என்று கூட ஒன்று கிடையாது இவர்களது வீட்டிற்கு.

இப்ப இவ என்ன செய்யனும்?

“கேட்கிறேன்ல பதில் சொல்லு? யார் நீ? ஆதன் எங்க?” வெகு இயல்பாய் கையில் பிஸ்டலை எடுத்தான் அவன்.

முன்ன பின்ன அதையெல்லாம் இவள் பார்த்திருக்கிறாளா என்ன? இன்னுமாய் மிரண்டு போய் விழி விரித்தாள் அனிச்சா.

சுவரோடு சுவராக பம்மினாள்.

அவனோ இதற்குள் வீட்டிலிருந்த மூன்று படுக்கை அறைக்குள்ளும் நுழைந்து வெளி வந்திருந்தவன்,

“ஏய், என்ன நான்பாட்டுக்கு கேட்டுட்டே இருக்கேன் நீ பாட்டுக்கு சும்மா?” என மிரட்டலாய் ஆரம்பித்து,

சட்டென முகம் கன்ற,

”சாரி உனக்கு பேச வராதோ?” என குரல் இறக்கி, சைகையில் காது கேட்குமா என அடுத்த லெவல் விசாரணைக்கு போனான்.

அவன் முகத்தில் ஒரு கனிவும் கரிசனைப் பார்வையும் கூட தலைகாட்டியது.

அப்பொழுதுதான் தான் இப்படி பேச்சடைத்துப் போய் நிற்பதே அனிச்சாவுக்கு உறைக்கிறது.

“என் வீட்ல வந்து என்னையவே யாருன்னு கேட்கிறீங்க, நான் ஆதனோட சிஸ்டர், அவன் ஆஃபீஸ் போய்ருக்கான்”

கொஞ்சம் கெத்தாகவே பதில் சொன்னாள், அவனது கரிசனப் பார்வை கொடுத்த தைரியமாய் இருக்கலாம்.

இப்பொழுது மீண்டுமாய் கோபத்தில் கொதித்துப் போனது அவனது முகம்,

“உன் அண்ணா என்ன லூசா?” அடுத்து என்ன சொல்ல வந்தானோ, சட்டென பேச்சை நிறுத்தியவன்,

ஒரு தீவிர முகபாவத்துடன் எதையோ கவனித்தான்.

வெளியே எதுவும் சத்தம் கேட்கிறதோ என கவனிக்கிறான் என்பது இவளுக்கு புரிகிறது.

அடுத்த நொடி என்ன நினைத்தனோ, ஒரு கையால் இவளது கையைப் பற்றி இழுத்துக் கொண்டு நடக்க தொடங்கினான்.

தொடரும்…

இன்பம் எனும் சொல் எழுத 2

 

 

Advertisements

One comment

Leave a Reply