கர்வம் அழிந்ததடி 8 (2)

“ஓ!!!!” என்ற ஒற்றை வார்த்தை மட்டுமே சொல்ல முடிந்தது அவளால். ஆச்சியின் தங்கையைத் தான் தாத்தா இரண்டாம் தாரமாய் கல்யாணம் செய்திருந்தார் என்று அப்பா சொல்லியிருந்தார். தனது தங்கையே தனது வாழ்க்கையை பங்கு போட்டது எவ்வளவு பெரிய வலியைக் கொடுத்திருக்கும் ஆச்சிக்கு. ஆதரவாய் ஆச்சியின் கையை அழுத்தினாள் அக்ஷரா. அதில் தன்னுணர்வு பெற்றவராய் மீனா திரும்பி அக்ஷராவைப் பார்த்தார்.

 

“அவ அப்படித்தான். முன்கோபி. கொஞ்சம் எடுப்பார் கைபிள்ளை. ஆனா பாசம் அதிகம். உங்கப்பன்னா அவளுக்கு ரொம்பப் பிடிக்கும். அதெல்லாம் ஒரு காலம்!!!!! ஹ்ம்ம்ம்” பெருமூச்சொன்றை வெளியிட்டார். “அப்போ ஏன் ஆச்சி நீங்க அவங்ககூட நின்னு பேசல?” கேட்க வேண்டாம் என்று நினைத்த கேள்வி அவளையும் அறியாமல் வந்துவிட்டது. நாக்கை கடித்தபடி மீனாவைப் பார்த்தாள் அக்ஷரா.

 

எங்கோ பார்வை உறைந்து போயிருக்க வாய் மட்டும் பதிலைக் கொடுத்தது. “நாங்க ரெண்டு பேரும் பேசி ரொம்ப வருஷமாச்சு தாயீ!!!! ரொம்ப ஒத்துமையாத்தான் இருந்தோம். ஊருக்குள்ள எல்லாருமே கேப்பாங்க நீங்க அக்கா தங்கச்சியா இல்ல சேக்காளியான்னு. ஆனா எல்லாம் சிதஞ்சு போச்சு.. எல்லாம் அந்த ஒரு சம்பவத்தால… அச்சரா!!!! நீ தெய்வானையப் பார்த்தத உங்கப்பன்ட சொல்லாத சரியா?” கெஞ்சலாகவே தொனித்தது அவரது கேள்வி.

 

மீனாவைப் பார்க்கவே பாவமாய் இருந்தது. சரியென்று தானாய் தலையாட்டினாள் அக்ஷரா. இதற்குள் வீடு வந்திருக்க வேறு கேட்க முடியாது போயிற்று அக்ஷராவிற்கு. வாயிலேயே சேரை இழுத்துப் போட்டு அமர்ந்திருந்த சத்தியன் கார் சத்தம் கேட்டதும் ஓடியே வந்தார். காரிலிருந்து இறங்கிய இருவரின் முகத்தையே ஆர்வமாகப் பார்த்தவர் எதுவும் கண்டுபிடிக்க இயலாமல் போகவே மழுப்பலாக ஒரு சிரிப்பைச் சிந்தியவராக “வாம்மா!!!! அச்சு!!!! ஊரெல்லாம்

பிடிச்சிருக்கா?” என்றார்.

 

அதற்குள் அக்ஷராவிடம் வந்த சாரு “மீசையில் மண்ணு ஒட்டலயாம் உங்கப்பாவுக்கு.” என்று சொல்லவும் அம்மாவும் மகளும் சிரித்துக் கொண்டனர் வாய்மூடியபடி. மீனா “சாப்பிட்டியா சத்தி??? சாரும்மா சாப்டாச்சா?” என்று கேட்டுவிட்டு பின்கட்டை நோக்கி நடந்து போனார். மகளையும் மனைவியையும் பார்த்து “என்ன சிரிப்பு???” என்பதாய் முறைத்து நின்றவரைப் பார்த்தபடி சாருமதி “இவ்வளவு நேரம் டெலிவரிக்கு பொண்டாட்டியை அனுப்பிட்டு வெளில நடமாடின மனுஷனாட்டம் நடந்தது யாராம்?” என்றாள் வாயைப் பொத்தியபடி.

 

முழித்தபடி நின்ற தந்தைப் பாவமாய் தோன்ற அவரை அணைத்துக் கொண்ட அக்ஷரா “எனக்கிந்த ஊரு ரொம்ப பிடிச்சிருக்குப்பா. எங்க பார்த்தாலும் க்ரீனரி, தென்னைமரம், குளிர் காத்து, குற்றாலச் சாரல். வாவ்!!!!!!!! லவ்விங் திஸ் பா. இங்க வரலேன்னா இதெல்லாம் மிஸ் பண்ணிருப்பேன்” என்றாள் அனுபவித்து. என்னதான் தனக்கு தாய்மண்ணிற்குப் போக வேண்டும் என்று தோன்றியதும் வந்துவிட்டாலும் மகளுக்கும் மனைவிக்கும் பிடிக்க வேண்டுமே என்ற கவலை இருக்கவே செய்தது சத்தியனுக்கு. வந்த அன்றே சாருமதிக்கு ஊரைப் பிடித்துவிட அக்ஷராவிற்கு பிடிக்க வேண்டுமே என்ற கவலை மட்டும் மிஞ்சியிருந்தது.

Advertisements

 

அதுவும் தீர்ந்து போனது இப்போது அச்சுவின் பதிலால். மீனா கேட்டுக் கொண்டதின் பேரில் அக்ஷரா அங்கு தெய்வானை வந்ததையோ விநாயகத்தைப் பார்த்ததையோ பற்றிப் பேசவே இல்லை. ஆனால் அந்த ஆறடி அசுரன் மட்டும் அவளது நினைவை முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொண்டான். ‘யாராக இருப்பான் அவன்???? யாரிடம் கேட்பது அவனைப் பற்றி???? ஏதோ டீனெஜ் பெண்ணைப் போன்று மனது ஒருவனைப் பார்த்து தடுமாறுமா??? அச்சு வாட்ஸ் ஹேப்பனிங் வித் யூ?’ தன்னைத் தானே கேள்விக் கேட்டுக் கொண்டாள்.

 

ஆனாலும் அவனைப் பற்றி ஏதாவது தெரிந்தே ஆகவேண்டும் என்று தோன்ற மெல்ல ஆச்சியின் பின்னோடே அலைந்தாள். தனது எண்ணங்களோடு போராடிக் கொண்டிருந்த மீனா அக்ஷராவின் குழப்பமான முகத்தைப் பார்த்து அவளை தனதருகில் இருத்திக் கொண்டு “என்ன தாயீ???? என்ன குழப்பம்? ஆச்சிகிட்ட என்ன கேக்கனும்?????” என்றார் நேரடியாக.

 

சரியாக கணித்து விட்டாரே என்று தோன்றினாலும் தனது கேள்விக்கு பதில் தெரியாவிட்டால் தலை வெடிக்கும் என்பதால் கேட்டேவிட்டாள். “ஆச்சி அந்த பனைமரம் உசரத்துக்கு இருந்தாரே அவர் யாரு ஆச்சி????” என்று. இவள் யாரைச் சொல்கிறாள் என்று ஒருநிமிடம் யோசித்தார் அமிர்தனைத் தான் கேட்கிறாள் என்பது புரிபட உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே “அவனா அவன் நம்ம சுலோவோட மவன். பேரு அமிர்தன்.” என்று சுவாரஸ்யம் இல்லாததைப் போல் காட்டிக் கொண்டார்.

 

ஆச்சியிடம் ஒரு அசுவாரஸ்யம் தென்பட “ஏன் ஆச்சி???? உங்களுக்கு அவரைப் பிடிக்காதா?” என்று கேட்டாள். பேத்திக்கு தனது பேரன் மீது ஈடுபாடு வந்ததைக் கண்டுகொண்டவராய் அவளிடம் சற்றே விளையாடிப் பார்க்க நினைத்தவராய் “அவன் கிடக்குறான் கிறுக்குப்பய. குடும்பத்துக்கு அடங்காதவன். கோவக்காரன்” என்று அடுக்கிக் கொண்டே போனார்.

அடுத்த பக்கம்

Advertisements