கர்வம் அழிந்ததடி 8

“யூ பிலாங் வித் மீ” டெய்லர் ஸ்விஃப்ட்டின் பாடல் ஐபாடில் எங்கோ அழைத்துச் செல்ல அக்ஷராவின் மனதில் என்னவோ நினைவுகள் படமாக ஓடிக்கொண்டிருந்தது. முந்தைய தினம் ஆச்சியுடன் பால்காய்ச்சு வீட்டிற்கு சென்றதும் அங்கே அந்த ஆறடி அசுரனைப் பார்த்ததும், அவன் தன்னிடம் வந்து பேசியதும் பின் தன்னிடம் கேளாமலே தனது மனதை கொள்ளையிட்டுச் சென்றதும், பின்பு சுலோ அத்தையை பார்த்ததும், அவர்களது பாசத்தில் கட்டுண்டதும், தனது தாத்தாவைப் பார்த்ததும் என்ற எல்லாமுமே ஒரே சீராக சென்றது ரம்மியமாகத் தான் இருந்தது.

 

எல்லாமும் அந்தக் குரலைக் கேட்கும் வரை தான். அதன்பின் நடந்த எல்லாமுமே ஃபாஸ்ட்ஃபார்வேர்டு செய்ததைப் போன்றாகிவிட்டது. அந்தக் குரலுக்குச் சொந்தக்காரப் பெண்மணி ஐம்பதுகளில் இருப்பார் போல. நடமாடும் நகைக்கடையாய் வந்திருந்தார். கண்கள் சிவந்து இருந்தது. சுலோ அத்தையின் சாயல் நன்றாகத் தெரிந்தது. அவரைக் கண்டதும் அதுவரை சிரித்தபடி இருந்த தாத்தாவின் முகம் கூம்பிப் போனது.

Advertisements

கன்றுக்குட்டியைப் பிடித்து வந்த அசுரன் கூட ஒருநிமிடம் அதிர்ந்து தான் பார்த்தான். பின்பு வரவழைக்கப்பட்ட சிரிப்புடன் அவரின் புறம் நகர்ந்தவன் “என்ன ஆச்சி!!! இவ்வளவு சூடா வந்திருக்கீய? வாங்க” என்று அவரது கரம்பிடித்து இழுத்து வரமுற்பட அவனது கரத்தை தனது கரத்தில் இருந்து மெல்ல விலக்கியவரின் பார்வை வீட்டின் உள்நோக்கிப் பாய, கண்கள் கோபத்தில் மேலும் விரிந்தது.

 

அவரது பார்வையைத் தொடர்ந்த அக்ஷராவின் பார்வை தனது ஆச்சியின் மேல் படிய ஆச்சியோ சுலோச்சனா அத்தையைக் கேள்வியாகப் பார்த்தார். அத்தை தெரியவில்லை என்பதாய் உதடு பிதுக்கி தோள்களைக் குலுக்கினார். இதற்கு மேல் இங்கு நின்றால் சரிவராது என்பது போல் மீனா வேகமாக வந்து அக்ஷராவிடம் “வாம்மா நாம் போகலாம். அந்த மாரிப்பயலுக்கு போனப்போடு.” என்று விட்டு சுலோச்சனாவிடம் வருகிறோம் என்பதாய் தலையசைப்புடன் கிளம்பினார்.

 

எதுவும் புரியாத போதும் அக்ஷராவும் “வரேன் தாத்தா, வரேன்” என்று சுலோச்சனாவிடமும் தன் தாத்தனிடமும் விடைபெற்றுக் கிளம்ப எதிரே நின்ற அமிர்தனின் பார்வையில் ‘போறியா?’ என்பது போன்ற பாவனை. மெல்ல தலையசைத்து விட்டு அங்கிருந்து மீனாவின் கைகளைப் பற்றியபடி நடந்தாள். ஏனோ அந்தப் புதிதாக வந்த பெண்மணியை மீனா கடக்கும் போது மட்டும் அக்ஷராவிற்கு அக்னி நக்ஷத்திரம் பிரபுவும் கார்த்திக்கும் எதிரிட்டுக் கொள்வது நினைவு வந்தது. ஒரு நொடி தான் அந்தப் பெண்மணியின் பார்வை அக்ஷராவின் மேல் படிந்து திரும்பியது. அந்த ஒரு நொடியில் ஆயிரம் பாவனைகள்…. அதிர்ச்சி, சந்தோஷம், வன்மம் ஆத்திரம் என பல பாவனைகள் வந்து போனது. அவரையே திரும்பித் திரும்பி பார்த்தபடி சென்ற அக்ஷராவின் பார்வை வளையத்துக்குள் விழுந்த மற்றொரு நபர் அந்த மறைந்திருந்தே பார்க்கும் மர்ம நபர்.

 

இவளின் பார்வையைச் சந்தித்தவர் தலைகவிழ்ந்து நின்றார். யாராக இருக்கும்? ஏனிப்படி துரத்தி வந்து மறைந்திருந்து பார்க்கிறார்? இப்போது வந்த பெண்மணி யார்? என்று கேள்விகள் மனதை வண்டாய்க் குடைய ஆச்சியிடம் கேட்க வழியில்லாதவாறு மீனா இறுகிப் போய் அமர்ந்திருந்தார் காரில். வண்டி மேலகரத்தை நோக்கி விரட்டிப் பாய்ந்தது. வீட்டினை நெருங்கும் நேரம் மீனா மெல்ல அக்ஷராவிடம் திரும்பி மெல்லிய புன்னகை ஒன்றைச் சிந்தினார்.

 

“யாராச்சி அவங்க? ஏன் அப்படி கத்தினாங்க? அவங்க வந்ததும் ஏன் நீங்க கிளம்பிட்டீங்க?” என்று கேள்விகளை அடுக்கினாள். அத்தனை கேள்விகளுக்கும் பதில் கிடைக்காவிட்டால் அவளுக்குத் தலை வெடித்துவிடும் உணர்வு. “அது தெய்வானை. என்னோட தங்கச்சி” என்று சொன்னவரின் பார்வை எங்கோ வேறுலகத்துக்கு பயணப்பட்டாற் போன்றிருந்தது.

அடுத்த பக்கம்

Advertisements