கர்வம் அழிந்ததடி 6 (2)

சாருவின் பேச்சினால் சமாதானம் அடைந்தவர் “சரித்தா!!! நீ சொன்னா சரியாத்தான் இருக்கும். உங்களையும் கூட்டிட்டு போகனும்னு தான் ஆசை. ஆனா …….. வரும்… நமக்கும் நேரம் வரும். எல்லாம் அந்த கருப்பன் தான் மனசு வைக்கனும்.” மேல் நோக்கி கையெடுத்து கும்பிட்டு முறையிட்டபடி உள்ளே சென்றார்.

 

கலங்கி அமர்ந்திருந்த சத்தியனிடம் வந்த சாருமதி “ஊருல வந்து இருக்கிறதுனு முடிவு பண்ணியாச்சு. அதுக்கப்புறமா நல்லது கெட்டதுக்கு போகலைன்னா எப்படி அச்சுப்பா. எல்லாம் நல்லதாவே நடக்கும். கவலைப்படாதீங்க” என்று அவரது தோளை அழுத்தி சமாதானம் செய்ய அவரது கையைப் பற்றிய சத்தியனுக்குள் எங்கோ மூலையில் சின்னதாய் ஒரு நம்பிக்கை துளிர்விட்டது.

 

 

அக்ஷரா பால்காய்ச்சு வைபவத்திற்கு  அணிவதற்கு எடுத்து வைத்த அனார்க்கலி சல்வாரைப் பார்த்த மீனா “ராசாத்தி!! இந்த உடுப்பு நல்லாருக்கு. உனக்கு ரொம்ப பொருத்தமாவும் இருக்கு. ஆனா இந்த ஆச்சியோட ஆசைக்காக சேலை உடுத்துவியா? இந்த ஒருமட்டம் தான். அப்புறமா கேக்க மாட்டேன்.” என்று கெஞ்சல் பார்வை பார்த்தபடி கேட்டார்.

 

“ஓகே ஆச்சி!! கட்டிக்கிறேன். எனக்குமே சேலை கட்ட பிடிக்குமே!!” கண்கள் மின்ன சிரித்தாள் அக்ஷரா. மீனாவின் முகத்தில் சந்தோஷம் கலந்த நிம்மதி பரவியது. மனதுக்குள் “எலேய் பேராண்டி!!! இதுவரைக்கும் என் வேலையைச் சரியாத்தான் செஞ்சுட்டேன். இனி உம்பாடுடா ஐயா.” என்று ரகசியமாகப் பேசிக் கொண்டார்.

 

மறுநாள் காலைப் பொழுதும் ரம்மியமாய் விடிய அக்ஷரா அமர்க்களமாய்க் கிளம்பிக் கொண்டிருந்தாள். அந்த மைசூர் சில்க் புடவையில் எளிய அலங்காரத்திலும் பார்க்கவே கண்களுக்கு நிறைவாய் அழகாய் இருந்தாள். இருபத்தியிரண்டு வயதிற்கு பருவம் அழகை அள்ளித்தான் கொடுத்திருந்தது. அந்த மெரூன் நிறப்புடவை அவளது சிவந்த தேகத்திற்கு எடுப்பாக இருந்தது. இயல்பிலேயே பெரிய கண்கள் அக்ஷராவிற்கு. இப்போது காஜலிட்ட அந்த விழிகள் இன்னும் அழகாக எடுப்பாக இருந்தது.

Advertisements

 

கருகருவென நீண்ட கூந்தலைத் தழைய தழைய பின்னி அதில் ஜாதி மல்லி பூச்சரம் வைத்திருந்தாள். மொத்தத்தில் தனது ஆர்ப்பாட்டமில்லாத அழகில் அசரடித்தாள்.  பார்க்கப் பார்க்க கண்கள் பெருமிதத்தில் நிறைய சாருமதி மகளுக்கு திருஷ்டி பொட்டு வைத்து விட்டாள். மீனாவின் உத்திரவுபடி கனகம் அக்ஷரா கிளம்பும் முன் அவளுக்கு திருஷ்டி கழித்தார்.

 

 

பத்திரம் பத்திரம் என ஆயிரம் முறை பத்திரம் சொல்லி அனுப்பி வைத்தார் சத்தியன். கிளம்பும் சமயம் சாரு மகளிடம் “உனக்குத் தெரியாததில்லை அச்சும்மா. ஆனா அம்மா வழக்கமா சொல்லியனுப்புறது தான் இப்பவும் சொல்றேன். எந்த சண்டைக்கும் போகாதே. இது உங்கப்பாவோட சொந்த ஊர். நீ செய்யிற எந்த விஷயத்தாலும் அவரைத் தான் அவரோட வளர்ப்பைத்தான் பேசுவாங்க. அதனாலக் கோபத்தைக் குறைச்சுக்கோ. இங்கயிருக்கிற மனுஷங்களை எப்படி சம்பாதிச்சுக்கனும்னு பாரு.” என்று சொல்லியனுப்பினார். அச்சுவின் குணம் அப்படியாயிற்றே.

 

தன் கண்முன்னே தப்பு நடந்தால் அவளால் பொறுத்துக் கொள்ளவே முடியாது. அது யாராக இருந்தாலும் சரிதான். அக்ஷராவின் பதினோராவது வயதில் ஒருமுறை சத்தியனின் அலுவலகத்தில் நடந்த ஃபேமிலி கெட்டுகெதரில் கலந்து கொண்ட போது சத்தியனுடன் வேலை பார்ப்பவர் மகன் (இவள் வயதை ஒத்தவன்) அங்கிருந்த விலையுயர்ந்த பேனா ஒன்றை பார்த்ததும் ஆசைப்பட்டு அதனை திருடி விட்டான். உடனிருந்த மற்ற குழந்தைகள் கண்டுகொள்ளவில்லை. அக்ஷரா அந்தப் பையனின் சட்டையைப் பிடித்து உலுக்கிய உலுக்கலில் அந்தப் பையன் அழுது ஆர்ப்பாட்டம் செய்து பேனாவையும் தூக்கி கொடுத்துவிட்டு ஓடிவிட்டான். அவனது தந்தை ரொம்பவும் வருத்தப்பட்டார்.

அடுத்த பக்கம்

Advertisements