கர்வம் அழிந்ததடி 6

“கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

காதல் என்று அர்த்தம்.

கடலை வானம் கொள்ளையடித்தால்

மேகம் என்று அர்த்தம்.

பூவை வண்டு கொள்ளையடித்தால்

புதையல் என்று அர்த்தம்”

 

ஹெட்ஃபோனில் அதிர்ந்த பாடலை ரசித்தபடி தனக்குப் பிடித்த மெரூன் நிற மைசூர் சில்க் புடவையை நேர்த்தியாக கட்டிக் கொண்டு கடைசி கட்ட அலங்காரங்களை சரிபார்த்துக் கொண்டாள் அக்ஷரா. பால்காய்ச்சு வீட்டுக்கு அக்ஷராவை அழைத்துப் போக மீனா மகனிடம் கேட்ட போது சத்தியனின் முகம் இறுகிப் போனது. “அம்மா வேணாம்மா. அங்கன அவுங்க எல்லாம் வருவாங்க. எம்பொண்ணை அங்கன கூட்டிட்டு போக வேணாம்.” தலையைக் கவிழ்த்தியபடி பேசினார்.

 

மீனா மகனின் தோளில் கை வைத்து ஆதரவாய் அழுத்தியபடி “ராசா!! இனி இங்கன தானே இருக்கப் போறீய. பொறவு யாரையும் பாக்க மாட்டேன்னா என்ன அர்த்தம். இத்தன நாளு தான் நான் அனாதை மாதிரி ஒத்தக்கட்டையா போய் நின்னுருக்கேன். இப்பவாது எம்பேத்தியக் கூட்டிட்டு போயிட்டு வாரனே. அவுக யாரும் இப்போ எதுக்கும் வர்றதும் இல்லை. அதனால நீ விசனப்படாத ராசா” என்று சாம பேத தான தண்டம் என்று எல்லா வகையையும் கையிலெடுத்து தனது முயற்சியை மேற்கொண்டார்.

 

சாருமதியும் பார்வையால் கெஞ்ச சத்தியனுக்கு வேறு வழியில்லாது போயிற்று. அரைமனதாய் சரியென்று தலையை ஆட்டி வைத்தவர் “அங்கன அவுக யாராவது வந்தா நீங்க கிளம்பிருங்கம்மா. ஒரு ஃபோன் போடுங்க நான் வந்து கூட்டிட்டு வர்றேன். இல்ல இல்ல ஆளையனுப்பி உங்கள கூட்டிட்டு வர ஏற்பாடு பண்றேன்.” கண்கள் பரிதவிப்பு அப்பட்டமாகத் தெரிந்தது.

Advertisements

மீனா சிறுபிள்ளையாய் குதித்தார். “ராசாத்தி நீ வாடா. நம்ம போய்ட்டு வரலாம். உனக்கு நம்ம சொந்தக்காரங்க சொக்காரங்க எல்லாரையும் காட்டறேன். ஒன்னுமில்லாதவ எல்லாம் மினுக்கிட்டு வரும்போது எம் பேத்தி மகாராணியாட்டம் வரனும். நீ வாத்தா. உனக்கு என் நகை எல்லாம் தரேன். போட்டுக்க.” என்ற சிறுமியாய் துள்ளிக் குதித்தபடி உள்ளறைக்குச் சென்று தனது அலமாரியைக் குடைந்து ஒரு கையகலப் பெட்டியைத் தூக்கி வந்தார்.

 

மரத்தை நன்கு இழைத்து வழுவழுவென்றிருந்த வெளிப்புறத்தில் ஒரு வெண்கலக் குமிழ் இருந்தது. அதை வலப்பக்கமாக இருமுறை திருக அது திறந்து கொண்டது. உள்ளே கனம் கனமாய் தங்க நகைகள். ரொம்ப நாட்களாக எடுத்திராத காரணத்தால் ஒழுங்கற்று குமித்து வைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு நகையின் கணத்தைப் பார்த்தாலே பயம் வந்தது அக்ஷராவிற்கு.

 

“இந்தாத்தா. இதெல்லாம் உனக்குத் தான். போட்டுக்க. இன்னிக்கு உன்னைப் பார்த்து ஊரே மூக்கு மேல் விரல வைக்கனும். போட்டுக்கத்தா.” என்றார். இவற்றையே வெறித்துப் பார்த்த அக்ஷரா மறுப்பாக தலையசைத்தாள்.”ஆச்சி நான் உங்ககூட வரனும்னா இதெல்லாம் எனக்கு வேணாம். ப்ளீஸ்” இதமாக மறுத்துப் பார்த்தாள்.

 

‘ஒருவேளை தனது நகைகள் பேத்திக்கு பிடிக்கவில்லையோ. இன்னும் தன்னை அவள் ஆச்சியாக ஏற்றுக்கொள்ள வில்லையோ. அதனால் தான் உரிமையாக எடுத்துக் கொள்ளவில்லையோ’ என்று எண்ணங்கள் ஓட மீனாவின் முகம் வாடிப் போனது. அதைப்பார்த்த சாரு தன் அத்தையிடம் வந்து நின்றவர் மகளிடம் “அச்சும்மா!! நீ போய் உனக்கு அங்க போட்டுட்டு போறதுக்கு டிரெஸ் எடுத்து வை” என்று அனுப்பி வைத்தவர் மீனாவிடம் திரும்பி “அத்த!!! அவ எப்பவுமே அப்படித்தான். அவளுக்கு நகை அவ்வளவா பிடிக்காது. கொஞ்ச நாள் போகட்டும் பழகிருவா. அதுக்குள்ள நம்ம இந்த நகையெல்லாம் பாலிஷ் பண்ணி வச்சிரலாம். சரியா” சிறுபிள்ளைக்கு விளக்குவது போல் விளக்கினாள்.

அடுத்த பக்கம்

Advertisements