கர்வம் அழிந்ததடி 20

“காலை தென்றல் பாடி வரும்

ராகம் ஒரு ராகம், ராகம் ஒரு ராகம்

பறக்கவே தோன்றும் சிறகுகள் வேண்டும்

சிறகுகள் வேண்டும்

காலை தென்றல் பாடி வரும்

ராகம் ஒரு ராகம், ராகம் ஒரு ராகம்”

 

தலைக்கு குளித்துவிட்டு பாத்ரூமை விட்டு வெளியே வந்த அக்ஷரா வாசலில் கோலம் போடும் திவ்யாவைக் காணவென்று விரைந்து செல்ல அங்கே தன்னை மறந்து பாடியபடியே கோலமிட்டுக் கொண்டிருந்தாள் திவ்யா. இளமஞ்சள் நிறப்பாவாடை ரவிக்கையும் அரக்கு கலர் தாவணியும் திவ்யாவிற்கு அவ்வளவு அழகாகப் பொருந்தியது.

 

பெரிய பூக்கோலமிட்டு அதில் வண்ணங்களால் நிரப்பியிருந்தாள் திவ்யா. “திவி!! நீயே தனியாவா இவ்வளவு பெரிய கோலம் போட்ட?” கண்கள் சாசராய் விரிய சிறுபிள்ளை போல் கேட்டாள் அக்ஷரா. “ஆமா மைநி!! நல்லாருக்கா?” கொஞ்சமே கொஞ்சம் வெட்கம் முகத்தில் தெரிய திவ்யா அச்சுவிடம் ஆர்வமாய்க் கேட்டாள். “ஸ்டுப்பெண்டோஃபென்டாபுலஸ் திவி!!! செம்ம சூப்பர் பா. என்ன டாலென்ட் உனக்கு. வாவ். இரு வரேன்” என்று வீட்டினுள் ஓடியவள் தனது அலைபேசியை எடுத்து வந்து விதவிதமான கோணங்களில் அதனை புகைப்படமெடுத்து வைத்துக் கொண்டாள்.

 

“நீங்களும் கோலம் போடுவீங்களா மைநி?” என்று கேட்ட திவ்யாவிடம் “யாராவது இவ்வளவு அழகா கோலம் போட்டா ஆன்னு வாய் பாத்துட்டு நிப்பா அவ. ரொம்ப அழகா இருக்கும்மா திவ்யா. எங்க கண்ணே பட்டிரும்.” என்றபடி வந்தார் சாருமதி. “ஆனாலும் மாதாஜி என்னைக் கிண்டல் பண்ண நல்ல நேரம் பாத்தீங்க.” என்று செல்லமாய் நொடித்துக் கொண்டாலும் அன்னை சொல்வது உண்மை தான் என்பதால் சிரித்துக் கொண்டாள் அக்ஷரா.

 

மணமணக்கும் கடுங்காப்பியுடன் வந்த சுலோ “தங்கம்!! பால்காப்பி தரேன்னு சொன்னா வேண்டாம்னு சொல்ற. அப்படி என்ன தான் இருக்கோ இந்த கடுங்காப்பில? இந்தா சூட்டோட குடி. சாரும்மா வா சாம்பிராணி போடச் சொன்னேன் பொன்னம்மாகிட்ட. போட்டு வச்சிருப்பா. தலையைக் காயவை வா. திவ்யா மைநியக் கூட்டிட்டு சீக்கிரமா உள்ள வா” என்றபடி திரும்பப் போனவரின் பார்வை தூரத்தில் வருபவர்களின் மீது படிய முகம் தானாகச் சிரிப்பைப் பூசிக் கொண்டது.

இளவட்டப் பையன்கள் நாலைந்து பேர் மற்றும் இன்னொரு நடுத்தர வயது மனிதரும் இவர்களது வீட்டை நோக்கி வந்தனர். அந்தப் பையன்களின் கைகளில் ஒரு பெரிய பாத்திரத்தை தூக்கி வந்தனர். “வாங்க பரமசிவண்ணே!! எப்படி இருக்கீய? ஊருல தான் இருக்கீயளா? ஆளையே காண்கலையே கொஞ்ச நாளா?” என்றார் சுலோ.

 

“ஆமா தங்கச்சி!! மவன் மெட்ராஸுல வேலை பாக்கான். அவன் தனியா பொங்கித்திங்க கஷ்டப்படுதாம்னு அவம்மாளுக்கு ஒரே கொறை. அதான் கொஞ்ச நாள் அவனுக்கு ஒரு கல்யாணங்காட்சினு செஞ்சு வைக்கது வரை அங்கன இருக்கலாம்னு போயிட்டோம். கோயில் கொடைக்குனு வந்தேன் மா. விட்டு குடுக்க முடியாதுல்லா. அதான். பாத்திரம் கொண்டு வா தாயீ” என்றதும் அதற்குள் குறிப்பறிந்து திவ்யா வீட்டிற்குள் ஓடிப்போய் ஒரு பெரிய சட்டியும் ஒரு சின்ன சட்டியுமென தூக்கிக் கொண்டு வந்தாள்.

 

“மாமா! இந்த வருஷமாவது கொஞ்சம் அதிகமாக் குடுங்க. போன வருசமே கம்மியாத்தான் குடுத்தீங்க.” என்றபடியே நீட்டியவளை பார்த்த பரமசிவன் “என்ன மருமவளே!! எப்படி இருக்க? படிப்பெல்லாம் எப்படி போவுது? உனக்கில்லாததா மருமவளே?? எலேய் மருமவளுக்கு நல்ல கறி சாஸ்தியா எடுத்துப் போடுங்கடா” என்றவரிடம் மறுகையில் வைத்திருந்த சின்ன சட்டியைக் காட்டி “மாமா இதுல தனியாக் குடுங்க. இது தான் எனக்கு. அது வீட்டுல மத்தவங்களுக்கு” என்றாள்.

 

“அதென்ன ரெண்டு பாத்திரம்? வீட்டுக்கு ஒன்னு தானே சித்தப்பூ” என்று ஒருவன் முறைக்க அவனைப் பார்த்து கடுங்கோபத்தில் முறைத்தாள் திவ்யா. “ஏன்? உங்க வீட்டு சொத்துலயா பங்கு குடுக்கறீய? வரி குடுக்கறோம்ல?” என்று சண்டக்கோழியாய் நின்றவளைப் பார்த்து சிரித்த பரமசிவம் “எலேய் எம்மருமவளுக்கில்லாததால. குடுங்கல” என்றார்.

 

மாமனின் சப்போர்ட் தனக்குத் தான் என்றதும் முறைத்த இளைஞனைப் பார்த்து ஒரு கிண்டல் சிரிப்பை உதிர்த்து விட்டு இரண்டுச் சட்டிகளுடன் வேடிக்கைப் பார்த்து நின்ற அக்ஷராவையும் இழுத்துக் கொண்டு வீட்டுக்குள் விரைந்தாள். சமையல்கட்டு மேடையில் பெரிய பாத்திரத்தை வைத்தவள் வாயில் கை வைத்து “உஷ்ஷ்” என்றபடி சின்னப் பாத்திரத்தைத் தூக்கிக் கொண்டு பின்கட்டுக்கு அக்ஷராவையும் இழுத்துக் கொண்டு பூனை போல் அமைதியாகச் சென்றாள்.

 

பின்கட்டில் இருந்த வேப்பமர நிழலின் கீழிருந்த திண்டில் போய் அமர்ந்து கொண்டவளைப் பார்த்த அக்ஷரா “அப்படியென்ன ஸ்பெஷல்னு அவங்ககிட்ட சண்டை போட்ட திவி?” என்றாள். “ஸ்பெஷல் தான் மைநி. இது தான் படைப்புச் சோறு. இதை வரிச் சோறுன்னும் சொல்லுவாங்க. குடும்பத்துக்கு இவ்வளவுனு தலகணக்கு வச்சு பணம் வசூல் பண்ணி கோயில்ல ஆடு கோழின்னு வாங்கி ராத்திரி பலி குடுப்பாங்க. அதை நைட்டே கொழம்பு வைப்பாங்க. மொத்தமா சாதம் வடிச்சு அதை கோயில்ல சாமி முன்ன பனையோலைப் பாயில மலைமாதிரி குமிச்சு வச்சிருப்பாங்க. அதுல இந்தக் கறிக்கொழம்ப ஊத்தி மொத்தமா பிணைஞ்சு வரி குடுத்த எல்லா வீட்டுக்கும் காலையில கொண்டு வந்து குடுப்பாங்க. என்ன டேஸ்ட் தெரியுமா? ம்ம்ம்” என்று கண்களை மூடியபடி ரசித்துச் சொன்னவளையேப் பார்த்திருந்த அக்ஷரா “ஆமா உங்கண்ணனும் சொன்னாங்க. ஆனா இஸ் இட் ஹைஜீனிக்? ஐ மீன், ராத்திரி வெட்ட வெளியில போட்டு வச்ச சாதத்துல போட்டு பிசைவாங்கன்னு சொல்றியே?” என்று சந்தேகமாக முழித்தவளை சந்தேகமாகப் பார்த்தாள் திவ்யா.

அடுத்த பக்கம்

Advertisements