கர்வம் அழிந்ததடி 19 (4)

இந்த சுலோச்சனா எத்தனையோ முறை இதையே தான் சொல்லியிருந்தாள். ஆனால் அப்போதெல்லாம் இந்த பரசு பேச்சைக் கேட்டு முட்டாள்தனமாக எப்படியாவது விநாயகத்திடம் இருந்து தன் பெயருக்கு மாற்றி விடலாம் என்று எண்ணியிருந்தது தப்போ என்று இப்போது தோன்றியது.

 

ராஜமீனா விநாயகத்தின் மனைவியாக இருக்கும் பட்சத்தில் தானே சொத்தெல்லாம் அவருக்குப் போகும், அவரே இல்லை என்றால் என்ற எண்ணம் தோன்ற ஓரிரு முறை மீனாவைக் கொல்ல திட்டம் தீட்டினார்கள். ஆனால் கடவுள் அருளால் அவருக்கு எதுவும் நேராமல் போக தெய்வானைக்கு ஆத்திரம் அதிகமாகியது. பார்க்கும் இடத்தில் எல்லாம் அவரை தன்னால் இயன்ற வரை வார்த்தைகளால் சாடினாள். ராஜமீனாவிடம் தான் சென்று வாழ்க்கைக்காக கெஞ்சியதை மறந்து என்னவோ அவர் இவளது வாழ்க்கையைப் பங்கு போட்டது போன்று எல்லோரிடமும் புறம் பேசினாள்.

 

இயல்பிலேயே அமைதியாக யார் வம்பிற்கும் போகாத ராஜமீனா முடிந்தவரை தெய்வானையின் பார்வையில் படாத வண்ணம் பார்த்துக் கொண்டார். தான் எதுவுமே செய்ய முடியவில்லையே என்ற கையாலாகதத்தனம் ரொம்பவே இம்சை செய்தது தெய்வானையை. தான் பெற்ற மகளான சுலோச்சனாவும் தன்னைவிட ராஜமீனாவிடமே இருந்தது வேறு கோபத்தை அதிகப்படுத்தியது. மற்ற இரு மகள்களும் தெய்வானையின் எண்ணத்தைப் புரிந்து கொண்ட போதும் அதற்கு மறுத்து எதுவும் பேசியதில்லை.

 

விநாயகத்தின் காலத்துக்குப் பின் இந்த சொத்தெல்லாம் தானாகவே தனக்கு வந்து சேரும் என்று இருந்திருந்தால் ஒரு வேளை அவளும் ரெங்கனுமாகச் சேர்ந்து விநாயகத்தைக் கொன்றிருப்பார்களோ என்னவோ. இப்போது அதற்கு வழியில்லை என்பதால் அடுத்து என்ன என்று யோசித்திருக்கும் வேளையில் தான் ராஜமீனாவின் மகன் ஊருக்கு வருகிறான் என்று செய்தி கிடைத்தது.

 

விநாயகமும் தென்காசியில் ஏதோ வக்கீலை அடிக்கடி பார்ப்பதாக தகவல் வர இரண்டும் இரண்டும் ஐந்து என்று வழக்கம் போல் தப்பாகவே கணக்குப் போட்டாள் தெய்வானை. மகன் வருவது தெரிந்ததும் கிழவன் சொத்தெல்லாம் அவன் பெயரில் எழுதப் போகிறான் என்றே முடிவு செய்து விட்டார். ஆண் வாரிசு என்று பெருமை பீத்தித் தள்ளியவருக்கு பேத்தி தான் என்றதும் ஏனோ உள்ளூர ஒரு சந்தோஷம்.

 

அடிப்படையில் அவளது பயம் எங்கே தன்னை குழந்தைக்காக என்று மணமுடித்த விநாயகம் குழந்தை பிறந்தபின் ஒதுக்கி விடுவாரோ என்பது தான். ஆனால் ஆண் வாரிசு வேண்டும் என்று முயன்று வரிசையாக மூன்று பெண் பிள்ளைகளாகப் பெற்றுக் கொண்டதும் பரசு தெய்வானையின் பயத்தை நன்கு உபயோகப்படுத்திக் கொண்டார். ராஜமீனாவுக்கும் தெய்வானைக்கும் பேச்சு வார்த்தை கூட இருக்கக் கூடாது என்பதில் மனிதர் தெளிவாக இருந்த காரணத்தால் அங்கும் இங்குமாகப் புறம் பேசி முடித்த வரை இருபுறமும் பகையை உண்டாக்கினார்.

 

ஏனென்றால் பரசுவுக்கு ராஜமீனாவைப் பற்றித் தெரியும். தெய்வானை அளவு முட்டாள் அல்ல அவர். தங்கையை அரவணைத்துச் சென்றிருப்பார். ஆனால் அப்படி நடந்திருந்தால் அண்ணனின் சொத்தை ஆட்டையை போட முடியாது என்று எண்ணியவர் இருவரையும் முட்டிக் கொள்ள வைத்தார். எப்படியாவது தெய்வானையை வைத்து பேசி விநாயகத்திடம் இருந்து சொத்தை எல்லாம் தெய்வானை பேரில் மாற்றி விட்டால் பின்பு தன் பெயரில் மாற்றுவது சுலபம் என்று கணக்கு போட்டார் பரசு.

 

 

விநாயகம் மட்டும் கொஞ்சம் புரிதலோடு இருந்திருந்தால் தெய்வானைக்கு அந்த பயம் இருந்திருக்காது. அவருக்குப் புரியவைத்திருக்கலாம். கணவன் தன்னைக் கைவிட மாட்டார் என்ற நம்பிக்கை இருந்திருந்தால் கட்டாயம் அவர் பரசு போன்றோரின் பேச்சிற்கு ஆடியிருக்க மாட்டாரோ என்னவோ. சில ப்ரச்சனைகளைப் பேசினாலே பாதி தீர்த்து விடலாம். ஆனால் மனித மனம் அவற்றை அலட்சியப்படுத்தி அவை பெரிதாகி கைமீறிப் போன பின்பு கையாளத் தெரியாமல் தவிக்கிறது.

 

இப்போது தனக்குக் கிடைக்காத சொத்து வேறு யாருக்கும் குறிப்பாக ராஜமீனாவின் மகனுக்குக் கிடைக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள் தெய்வானை. அதற்கான அடுத்த முயற்சி தான் அந்த கோயில் ஊர்வலத்தில் ஏற்படுத்திய சலசலப்பு. ரெங்கனிடம் சத்தியனின் மகளை லேசாகக் காயப்படுத்தும் படி மட்டும் சொல்லியிருந்தாள் மகளுக்கு ஒன்றென்றால் சத்தியன் கட்டாயம் பின்வாங்குவான். இந்த ஊரே வேண்டாம் என்று மீண்டும் போய் விடுவான் என்று கணக்குப் போட்டாள்.

 

உள்ளூர் ஆட்களென்றால் தெரிந்து விடுமென ரெங்கனை விட்டு திருநெல்வேலியில் இருந்து ஆட்களை வரச் செய்திருந்தாள். அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த வேலை கூட்டத்தில் சற்றே சலசலப்பை ஏற்படுத்தி முடிந்தால் அந்தப் பெண்ணை லேசாக காயப்படுத்த வேண்டும். அவ்வளவே. ஆனால் மாட்டிக் கொள்ளாமல் செய்ய வேண்டும். பட்டினத்தில் வளர்ந்தவள், பெற்றோர்களுக்கு ஒரே பெண் வேறு, செல்லமாக வளர்ந்திருப்பாள். அதனால் எப்படியும் பயந்து சுபாவமாகத் தான் இருப்பாள் என்றே நினைத்திருந்தாள்.

 

அக்ஷராவைப் பற்றித் தப்பாக கணக்கிட்டதால் ப்ரச்சனை திசை மாறியது. சத்தியனின் மகள் அடிதடியில் வல்லவளாக இருப்பாள் என்று தெய்வானைக்கென்ன ஜோசியமா தெரியும்? ஊர்வலம் கிளம்பி சற்று நேரத்திற்கெல்லாம் ஃபோனடித்த ரெங்கன் சொன்ன விஷயம் தெய்வானைக்கு தலைசுற்றலை ஏற்படுத்தியது. அந்தப் பெண்ணும் இந்த சுலோச்சனாவின் மகனுமாகச் சேர்ந்து தாக்க வந்தவர்களை அடித்துப் பந்தாடி போலீசில் பிடித்துக் கொடுத்து விட்டனராம்.

அடுத்த பக்கம்

Advertisements