கர்வம் அழிந்ததடி 19 (2)

மனிதர் தான் செய்ததே சரி என்று வாதிடாமல் இவ்வளவாவது தப்பு என்று உணர்கிறாரே என்று தோன்றியது. அவரது கைகளை மெல்ல அழுத்தி நம்பிக்கைக் கொடுத்து தனது சந்தோஷத்தை வெளிப்படுத்திய அக்ஷரா, “தாத்தா!! இங்லீஷ்ல ஒரு பழமொழி உண்டு. பெட்டர் லேட் தான் நெவர்னு. ஒரு விஷயத்தை செய்யாமலே விடறதுக்கு பதிலா லேட்டா செஞ்சாலும் நல்லது தான்னு. இப்பவும் எதுவும் தாமதமில்ல தாத்தா. எப்படி செய்யனும்னு நீங்க தான் முடிவு பண்ணனும்.” என்றாள்.

 

பேத்தி சொல்வதன் அர்த்தம் புரிந்தவராய் ஆமோதித்து தலையசைத்தவர் அமிர்தனைப் பார்த்து “விசுவம் நீ குடுத்து வச்சவன்டா.” என்றார். காரணம் புரிந்த போதும் புரியாதது போல “ஏன் தாத்தா. நா குடுத்து வச்சவன்னு தெரியும் தான். இருந்தாலும் இப்போ என்ன திடீர்னு?” என்றான். விநாயகம் அக்ஷராவை சாடை பார்வை பார்த்தபடி அவனிடம் கண்ணசைக்க அக்ஷராவிற்கும் புரிய முகம் சிவந்தது. அதனை ரசித்துக் கொண்டே அமிர்தனோ “தாத்தா சும்மா தைரியமா சொல்லுங்க. நான் ஏற்கனவே சொல்லிட்டேன், நாங்க குடும்பமா வந்து ப்ரபோஸ் பண்ணுவோம்னு. சத்தி மாமா இடம் முடிக்கட்டும் தாத்தா. அடுத்த நிமிஷம் அம்மா தட்டை மாத்தனும்னு துடியா இருக்கா.”

 

“ஆனா உங்க பேத்தி தான் இன்னும் பதிலே சொல்லல தாத்தா.” சோகம் போல் முகத்தை வைத்துக் கொண்டு வம்பிழுத்தான். விநாயகமோ “இருக்கட்டும்டே. மெதுவாகவே யோசிச்சு சொல்லட்டும். என் பேத்தி மாதிரி பொண்ணு கிடைக்கனும்னா நீ காத்திருக்கலாம்டே. தப்பே இல்லை. எங்குலம் தழைக்க வந்தவ அவ. விநாயகத்தின் பேத்தின்னா சும்மாவா. நம்ம வீட்டு லெட்சுமிடே அவ” என்றபடி கண்கள் பனிக்க அக்ஷராவின் தலையை மெல்ல வருடியபடி சொன்னார்.

 

அவரிடம் இருந்து அப்படி ஒரு பதிலை எதிர்பாராத அக்ஷராவும் அமிர்தனும் அர்த்தமுள்ள புன்னகை ஒன்றை பரிமாறிக் கொண்டனர். சும்மாவா? எப்போதும் ஆண் என்றால் என்னவோ பெரிது போலவும் பெண்பிறப்பு என்றால் மட்டம் போலவும் பேசிக்கொண்டிருந்த மனிதர் தனது பேத்தியைப் பற்றி இப்படி உயர்வாகப் பேசினால் ஆச்சரியம் வராதா?.

 

விநாயகம் விஷயஞானம் உள்ள மனிதர். பள்ளிப்படிப்பு என்பது இல்லாத போதும் அனுபவ அறிவு அதிகம். பல சுவாரஸ்யமான விஷயங்களை நகைச்சுவை கலக்க பகிர்ந்து கொண்டார் இருவரிடமும். இவ்வளவு நல்ல மனிதர் அப்படி என்ன செய்திருந்தால் தந்தை இவரை விட்டு தாயை விட்டு இத்தனை வருடங்கள் விலகியே இருந்திருப்பாரோ? என்று தோன்ற அவரிடம் கேட்டே விட்டாள் அக்ஷரா.

 

“ஏன் தாத்தா, உங்களுக்கும் அப்பாவுக்கும் அப்படி என்ன தான் ப்ரச்சனை? எங்கிட்ட எல்லாத்தையும் சொல்ற எங்கப்பா இந்த ஒரு ப்ரச்சனையைப் பத்தி மட்டும் பேசவே விரும்பலையே. என்ன தான் தாத்தா ப்ரச்சனை.?” என்றாள் தவிப்புடன். சிறிதும் யோசிக்காமல் “எல்லாம் என் வாய் தான் தாயீ ப்ரச்சனை. நாங்கிற கர்வம். ஆம்பளைன்னு திமிர்ல எல்லாரையும் காயப்படுத்தினேன். அதனாலயோ என்னவோ அவன் என்கிட்ட ஆரம்பத்துல இருந்தே ஒட்டல. அத்தோட நா விட்டிருந்தா பரவால்ல. அவன் என்கிட்ட பேசலங்கிறது என்னோட தன்மானத்துக்குப் பெரிய அடியாத் தெரிஞ்சுது. அதனாலேயே எம்மவன என்னால எவ்வளவு முடியுமோ அவ்வளவு காயப்படுத்தினேன் வார்த்தையால. எந்தம்பி பேச்சைக் கேட்டு அவன் எடுத்த ஒரு முடிவு பெரிய தப்பா முடிய எனக்கு அது ரொம்ப வசதியாப் போச்சு. எம்மவன் தோத்துப் போயிட்டான்னு எனக்கு ரொம்ப வருத்தம். எம்மவனா இருந்தா செயிக்கனும். தோக்கக் கூடாதுனு ஒரு நினைப்பு. அகங்காரம். அது கண்ண மறைக்க ரொம்ப பேசிட்டேன்.”

 

“தப்பு தான். ரொம்ப தப்புத் தான். எம்மவன் ரோசக்காரன். ஊரைவிட்டே போயிட்டான். எடாத எடுப்பெடுத்தா படாத பாடு தான் படனும்னு எங்க சின்னய்யா சொல்வாவோ. நா எடாத எடுப்பெடுத்து ஆடுனேன். அதான் எம்மவனே என்னை ஒதுக்கிட்டான்.” கண்ணீர் வழிய கதறினார். தாத்தா அழுவது பொறுக்காது அமிர்தன் அவரிடம் வந்து தன் தோளோடு அவரை அணைத்துக் கொண்டான்.

 

‘ஏதாவது சொல்லேன்’ என்பது போல் அக்ஷராவைப் பார்க்க அவள் நிதானாமாக தன் தாத்தாவின் கை விரல்களை நீவியபடி “அழாதீங்க தாத்தா. முடிவில்லாத ப்ரச்சனை இல்லை. எந்த ஒரு ப்ரச்சனையையும் நாம நினைச்சா முடிச்சிறலாம். நாம நினைக்கனும். அவ்வளவு தான். இப்போ என்ன? அவர் வேத்தாளா என்ன? உங்க பையன் தானே? பேசுங்க தாத்தா. அவர்கிட்ட பேசுங்க. அப்பா புரிஞ்சுப்பாரு. அப்பா பாவம் தாத்தா. அவங்களும் அப்பா பாசமில்லாம தானே இத்தனை வருஷமா இருந்திருக்காங்க. போய் பேசுங்க. எல்லாம் சரியாப் போகும். உங்க பையன் கிட்ட மட்டுமில்ல. நீங்க மனசு வச்சா எங்காச்சிகிட்ட தெய்வானை ஆச்சிகிட்ட எல்லார்கிட்டயும் பேசலாம்.”

 

“எத்தனை காலத்துக்கு தான் இப்படியே இருக்க முடியும்? பேசிப் பாருங்க தாத்தா. எங்களுக்கும் இந்தக் குடும்பத்துல எல்லாரும் ஒன்னா சேர்ந்திருந்தா எவ்வளவு சந்தோஷமா இருக்கும் தெரியுமா?” என்று அமிர்தனையும் துணைக்கழைத்தாள்.

 

சற்று நேரம் அமைதி காத்த விநாயகமூர்த்தி பின்பு தெளிந்தவராய் “பேசறேன் தங்கம். கட்டாயம் பேசறேன். எம்மவன்கிட்ட மனசுவிட்டுப் பேசறேன். அவன்கிட்ட மன்னிப்பு கேக்கேன். எனக்கு எம்மவன் வேணும். அதுக்காக அவன் கால்ல விழுந்து மன்னிப்பு கேக்கனும்னா கூட கேப்பேன்” என்றார் குரல் தழுதழுக்க. அவ்வளவு நேரம் இருந்த இறுக்கம் தளர்ந்த உணர்வு மூவருக்குமே ஏற்பட்டது.

 

“தாத்தா. நாங்க கிளம்புதோம். காலையில நேரமே கோயிலுக்கு போவனுமாம். அம்மா சொன்னா. நாளைக்குப் பூசையில நம்ம தலகட்டு தான். சத்தி மாமாக்கு தான் நாளைக்கு முதல் மரியாதை. கொஞ்ச நேரமாச்சும் போய் தூங்கினா தான் காலைல கோயிலுக்கு போவ முடியும். நீங்க பத்து மணி போல் வாங்க சரியா?” என்றான் அமிர்தன்.

அடுத்த பக்கம்

Advertisements