கர்வம் அழிந்ததடி 18

“ஒன்னும் ஒன்னும் ரெண்டு

ரெண்டும் ஒன்னும் மூணு

மூணுக்குள்ள நாலு

நாலும் அஞ்சு ஆறு

ஆறு ஒன்னும் ஏழு

ஏழுக்குள்ள எட்டு

எட்டு ஒன்னும் ஒன்பது

ஒன்பது ஒன்னும் பத்து

பத்து எண்றதுக்குள்ள

பத்து எண்றதுக்குள்ள”

 

நள்ளிரவில் அந்த ராயல் என்ஃபீல்ட் காற்றைக் கிழித்துக் கொண்டு  கடபோகாத்தியில் இருந்து கீழூர் செல்லும் சாலையில் விரைந்தது. அக்ஷராவால் நம்பவும் முடியவில்லை. ‘என்னோட ஃபேவரிட் இடத்துக்கு வர்றியா?’ என்று அமிர்தன் கேட்டதும் மறு சிந்தனையின்றி இப்படி யாரிடமும் சொல்லாமல் அவனுடன் கிளம்பிச் செல்ல ஒத்துக் கொண்டதே அவளுக்குப் பெரிய ஆச்சரியமாக இருந்தது. கீழூர் ஊருக்குள் செல்லாமல் கோயிலுக்கு அடுத்துள்ள பாதையில் இறங்கி வண்டி தென்னந்தோப்பை ஒட்டியுள்ள பாதையில் செல்ல எங்கே செல்கிறோம் என்று புரியாத போதும் மனதுக்கு நன்றாகவே இருந்தது.

 

தோப்பினூடே செல்லும் வழியே கொஞ்சம் பயமாக இருக்க அவளையும் அறியாமல் மெல்ல அமிர்தனின் இடையைப் பிடித்துக் கொண்டாள். அவளது கைகள் தன்னை இறுக்கிக் கொள்வதைப் பார்த்தவன் “என்ன ஆரா??? பயமா இருக்கா?” என்றான். “இந்த அர்த்த ராத்திரியில காட்டுக்குள்ள கூட்டிட்டு வந்தா பயப்படாம என்ன குஷியாவா இருக்கும்?” காற்றோடு சேர்ந்து அவளது பயந்த குரல் கேட்டது.

 

“என்னை நம்பு ஆரா!! நான் உன்னை பத்திரமா பாத்துக்குவேன். அமிர்தனை நம்பினோர் கைவிடப்படார்” என்றான் கெத்தாக. “அப்படி எத்தனை பேர் உங்களை நம்பி இருக்காங்களோ?” என்றாள் பின்னிருந்து. வண்டியை இடதுபுறம் ஒடித்து திருப்பியவன் ஒரு பெரிய இரும்பு கேட்டின் முன் வண்டியை நிறுத்தினான். மெல்ல அவன் தோளில் கைவைத்து ஊன்றி இறங்கியவளைப் பார்த்து “மத்தவங்களைப் பத்தி கவலை இல்லை. ஆனா இந்த ஆராவுக்கு மட்டும் எக்ஸ்க்ளூசிவ் நான்” கைகளை நெஞ்சில் வைத்து உத்திரவாதம் போல் சொன்னான்.

 

 

அவன் சொன்ன விதத்தில் கொஞ்சமே கொஞ்சம் கன்னங்கள் செம்மை பூசிக் கொள்ள அக்ஷரா எங்கே வந்து நிற்கிறோம் என்று பார்ப்பது போல் பார்வையைச் சுற்றி ஓட்டினாள். முன்னிருந்த இரும்பு கேட்டினை விலக்கியதும் கண்முன் விரிந்த காட்சி ஒருநிமிடம் மூச்சை அடைத்தது.

 

ஆரஞ்சும் மஞ்சளுமாக செவ்வந்திப் பூக்கள் பூத்திருந்தது. வெறும் பால்நிலவின் வெளிச்சம் மட்டுமே இருந்த இடத்தில் சுற்றிலும் மஞ்சளும் ஆரஞ்சு நிறமும் கலவையாக பார்க்கவே ரம்மியமாக கண்ணைப் பறித்தது. தோட்டத்தின் ஒரு மூலையில் ஒரு ஓட்டு வீடு இருந்தது. தோட்டத்தின் உள்நோக்கி நடக்க நடக்க இருமறுங்கும் பூக்கள் பூத்துக் குலுங்கியது ஏனோ அக்ஷராவிற்கு தான் பழைய ப்ரின்சஸ் கதைகளில் வரும் இளவரசி தங்கள் தோட்டத்தில் நடக்கும் உணர்வைக் கொடுத்தது.

 

பாதி தூரம் சென்ற பின்பு சற்றே இடப்புறமாகத் திரும்பி உள்நோக்கி நடந்த அமிர்தனை பின்தொடர்ந்தவளின் கண்முன் விரிந்த காட்சி அவளை வாய்பிளக்க வைத்தது. சுற்றிலும் கனகாம்பரமும் மரிக்கொழுந்தும் பரவிப்படர்ந்திருக்க அதன் நடுவில் போடப்பட்டிருந்தது ஒரு சிமெண்ட் பெஞ்ச். அந்த இடம் தோட்டத்தின் மையப்பகுதி என்பது அங்கு நின்றதும் புரிந்தது.

 

தோட்டத்தின் வாயிலில் ஆரம்பித்து பாதி தூரம் வரை செவ்வந்திப் பூத்துக் குலுங்க மையப்பகுதியில் செவ்வரளி ஒருபுறமும் கனகாம்பரம் மறுபுறமும் என வைத்திருந்தார்கள். தோட்டத்தின் பின்புறம் வலது ஓரம் மல்லிப்பந்தல் படர்ந்திருக்க இடது ஓரம் போர்வெல்லும் மோட்டரும் அதனை ஒட்டி  அதனுடன் இணைந்த அடிபம்பும் இருந்தது. இரண்டிற்கும் நடுவில் சுவரை ஒட்டியபடி ஒரு ஓட்டு வீடும் இருந்தது.

 

கண்கள் காண்பவை கனவா நனவா என்பது போல் தன்னையே கிள்ளிப் பார்த்துக் கொண்டவள் சந்தேகம் தீராமல் அருகில் நின்ற அமிர்தனின் கரத்தினை கிள்ளினாள். இதனைச் சற்றும் எதிர்பாராத காரணத்தால் வலியில் துள்ளியவன் கேள்வியாக இவளைப் பார்க்க “கனவில்ல. நிஜம் தான். கன்ஃபர்ம் பண்ணிக்கிட்டேன்.” என்று தோள்களைக் குலுக்கியபடிச் சொல்ல “அடப்பாவி!! இப்படியா ஒரு அப்புராணி புள்ளைய கிள்ளி வைப்ப? உன்னை இங்க கூட்டிட்டு வந்ததுக்கு இது தான் பரிசா? எல்லாம் நேரமடா அமிர்தா! நல்லதுக்கே காலமில்லை” என்று அலுத்துக் கொண்டான்.

அடுத்த பக்கம்

Advertisements