கர்வம் அழிந்ததடி 16 (2)

அவ்வளவு நேரம் பதட்டதுடன் நின்று கொண்டிருந்த அமிர்தன் கேள்வியாக சத்தியனைப் பார்க்க சாருமதி அமிர்தனிடம் “தம்பி அவளுக்கு ஊசின்னா சின்ன வயசிலிருந்தே பயம். அச்சு பயப்படற ஒரே விஷயம் ஊசி தான்.” என்றார். அது வரை இருந்த இறுக்கம் தளர்ந்து வாய்விட்டுச் சிரித்து விட்டான் அமிர்தன். தன்னைப் பார்த்துச் சிரிப்பவனை முறைத்துப் பார்த்த அக்ஷரா “என்ன சிரிப்பு?? இது மட்டும் எனக்கு ரொம்பவே பயம். வேண்டாம்னு சொல்லுங்க. ப்ளீஸ்” கோபத்தில் ஆரம்பித்து கெஞ்சலில் முடித்தாள்.

 

“பாம்புக்கே பயப்படாத எங்க ஜான்சி ராணி இத்துணூன்டு ஊசிக்குப் பயப்படறாங்களே!!! இது தான் உன்னோட வீக் பாயிண்ட்டா?? பின்னாடி எனக்கு நிறைய விஷயத்துக்கு இது யூசாகும் போலயே” என்று இவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொன்னவன் நல்லசிவத்திடம் “கட்டாயம் ஊசி போடனுமா சிவம்?” என்றான். “வலி அதிகமா இருக்கும் விஷ்வா. அதுக்குத்தான் இன்ஜக்ஷன். போட்டுட்டா அவங்க கொஞ்சம் நல்லா தூங்குவாங்க.” என்றார் நல்லசிவம்.

 

‘வேண்டாம் ப்ளீஸ். ஊசியில் இருந்து என்னைக் காப்பாத்து’ என்பதைப் போல் முகத்தை வைத்துக் கொண்டு அவனைப் பார்த்தாள் அக்ஷரா. அமிர்தனோ உதவிக்காக சத்தியனைப் பார்க்க சத்தியன் “அச்சும்மா ப்ளீஸ் இந்த ஒரு முறை போட்டுக்கோ. இல்லைன்னா நைட் தூங்க முடியாதுடா. வலிக்கும்” என்று கெஞ்சினார். சாருவும் அது தான் சரி என்பது போல் “அச்சும்மா போட்டுக்கோடா” என்றார் அவளது கையைப் பற்றியபடி. இவர்கள் யாரும் தனது சப்போர்ட்டுக்கு வரப்போவது இல்லை என்பதைப் புரிந்தவளாய் யாரிடம் உதவி கேட்கலாம் என்று சுற்றும்முற்றும் பார்த்தவள் எல்லோரும் அவளையே கெஞ்சல் பார்வை பார்ப்பதை உணர்ந்து வேறு வழியின்றி அமிர்தனை பார்த்து “ப்ளீஸ்” என்றாள்.

 

நல்லசிவத்திடம் அர்த்தமாய் ஒரு பார்வை பார்த்தவன் அவளது அருகில் வந்து அவளது தோளில் கைவைத்து “ஆரா! இப்போ இந்த மருந்து போய் வேலை செய்யனும்னா நீ நல்லா தூங்கனும். நல்லா தூங்கனும்னா உனக்கு வலி தெரியக்கூடாது. நாளைக்கு கோயில்ல நம்ம வீட்டுலேர்ந்து பூசைக்கு குடுத்திருக்கோம். அப்போ நாம தானே மொதல்ல போய் நின்னு எல்லா வேலையும் பாக்கனும். அதுக்குள்ள சரியாக வேண்டாமா? நாளைக்கு உனக்கு எவ்வளவு வேலை இருக்குத் தெரியுமா? நாளைக்கு சத்தி மாமாக்கு தான் முதல் மரியாதை செய்வாங்க. நீ தான் நாளைக்கு பூசைக்கு எல்லாத்தையும் முன்னாடி நின்னு செய்யனும்.” என்று பேசிக் கொண்டே போக அதற்குள் அக்ஷராவின் கவனம் அந்த பேச்சில் ஆழ்ந்திருக்க நல்லசிவம் அவளுக்கு ஊசியை போட்டு முடித்திருந்தார்.

 

சத்தியன் டாக்டரிடம் வந்து “டாக்டர்!! காயம் ஆழமா இல்லையே?? பயப்படற மாதிரி எதுவும் இல்லை தானே?” தழுதழுத்த குரலில் வினவ ஒரு தந்தையாய் அவரது கவலை அனைவருக்கும் புரிந்தது. “கவலைப்படாதீங்க மாமா. ஒரு பயமும் இல்லை. காயம் மேலோட்டமா தான் இருக்கு. அதான் இரத்த கசிவு நின்னுருச்சு. அடுத்த தெருவுல தான் இருக்கேன். எதுனாலும் எனக்கு கூப்பிடுங்க, எந்த நேரமானாலும்.” என்றார் நல்லசிவம். அவரது பதில் ஓரளவு ஆறுதலைத் தர “தாங்க்ஸ் டாக்டர் சார்” என்றார் சத்தியன். “அட என்ன மாமா நீங்க, யாரோ மாதிரி பேசறீங்க. நமக்குள்ள இந்த சார் மோரெல்லாம் எதுக்கு?” என்ற நல்லசிவத்தைப் புரியாமல் பார்த்த சத்தியனிடம் “சிவம் நமக்குச் சொந்தம் தான் மாமா. நம்ம கீழத்தெரு சரசு சித்தி மவன் தான் சிவம்” என்றான் அமிர்தன்.

 

அப்போது தான் நல்லசிவத்தைக் கூர்ந்து பார்த்த சத்தியனின் முகம் சிவத்தின் முகச்சாயலை மனதிற்குள் சரசுவோடு ஒத்து நோக்கிப் பார்த்து சிரிப்பை பூசிக்கொண்டது. “சரி மாமா நான் கிளம்பறேன். எதுவும் தேவைன்னா கூப்பிடுங்க” என்று விட்டு கிளம்பினான். அவனை வாசல் வரை சென்று வழியனுப்பி வைத்துவிட்டு வந்தான் அமிர்தன். மகளின் அருகே அமர்ந்து அவளது தலையை வருடியபடி இருந்த சத்தியன் “என்னை மன்னிச்சிரு அச்சும்மா. சொந்த மண்ணு, மக்கள்னு ஆசைப்பட்டு உன்னோட உயிருக்கு ஆபத்தை உருவாக்கி வச்சிட்டேன். இது எதுவுமே வேண்டாம். வா. நம்ம போயிரலாம்.” என்றார்.

 

அவர் பேசியதைக் கேட்ட சுலோவும் மற்றவரும் அதிர்ந்தே போயினர். “சத்தி!!! என்னப்பா சொல்ற? அவசரப்பட்டு முடிவெடுக்காதப்பா.” என்ற சுலோவிடம் “அவன் சொல்றதுல தப்பில்ல சுலோ. எங்கயோ கண்காணாத இடத்துல இருந்தாலும் உயிரோட இருக்கான் என் மவன்கிற நிம்மதியாவது இருந்துச்சு. ஆனா இப்போ நம்ம கூட வந்து இருக்கனும்னு ஆசைப்பட்ட பாவத்துக்கு எந்தங்கத்த இப்படி பண்ணிட்டானுவளே!” கண்களில் கண்ணீர் நிற்காமல் அருவியாய்க் கொட்ட அழுதபடி சொன்னார் ராஜமீனா.

 

அவ்வளவு நேரம் சோர்ந்தமர்ந்திருந்த அக்ஷரா தந்தையை திகைத்துப் பார்த்தாள். எவ்வளவு ஆசையாக வந்தார் ஊருக்கு. சொந்த மண்ணில் சொந்தங்களோடு தான் இனி வாழப்போகிறோம் என்று வந்த மனிதன் இப்படி சோர்ந்து திரும்பிப் போய்விடலாம் என்று சொல்கிறார் என்றால்,.. ‘ஏதாவது செய் அச்சு. அப்பா பாவம். திரும்பப் போக வேண்டாம்னு சொல்லு’ என்று உள்ளுக்குள் நண்டு பிராண்டியது. அன்னையை உதவிக்கு அழைக்கலாம் என்று சாருமதியைப் பார்த்து பார்வையாலே கெஞ்சினாள் அச்சு.

 

மகளின் பார்வைக்கான அர்த்தம் உணரந்தவராய் சாருமதி மெல்ல எழுந்து “அத்தை நான் சொல்றேனேனு தப்பா எடுத்துக்காதீங்க. சொந்த மண்ணுல யாருக்கோ பயந்து ஓடறவங்க மத்த எடத்துல போய் மட்டும் நிம்மதியா இருப்பாங்கன்னு என்ன நிச்சயம்? அச்சுப்பா!! என்னாச்சு உங்களுக்கு? நீங்க இப்படி தளர்ந்து நான் பார்த்ததே இல்லையே. எங்களுக்கெல்லாம் தைரியம் சொல்ல வேண்டிய நீங்க இப்படி சோர்ந்து போகலாமா?” என்றபடி கணவனின் கரங்களை மெல்லப் பற்றினாள். அக்ஷரா மேலும் உதவிக்காய் அமிர்தனைப் பார்க்க அவன் யாரோட அலைபேசியில் உரையாடியபடி இவளைப் பார்த்து ‘கவலைப்படாதே. நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்பதாய் கண்களை மூடித் திறந்தான்.

 

சத்தியனோ மனைவியை ஆழ்ந்த பார்வை பார்த்தவராய் “சாரும்மா!! உனக்குமா என்னைப் புரியல? நம்ம பொண்ணோட உயிருக்கே ஆபத்து வந்துருச்சே. இனியுமா இங்க இருக்கனும்னு சொல்ற? அவளவிடவா நமக்கு இந்த மண்ணும் சொத்தும் பெரிசா போச்சு? வேண்டாம் சாரும்மா. போயிடலாம். கடவுளே!! ஒருநிமிஷம் கையில பட்ட கத்தி என்பொண்ணு கழுத்துல பட்டிருந்தா!!!!!” நினைக்கவே உதறலெடுக்க சத்தியன் கலங்கிப் போனார். சாருமதி வேறு என்ன சமாதானம் சொல்வது என்று புரியாமல் விழித்தார். அவருக்குமே நடந்த விஷயத்தை அவ்வளவு லேசாக எடுத்துக் கொள்ள இயலவில்லை.

அடுத்த பக்கம்

Advertisements