கர்வம் அழிந்ததடி 16

“பூமியின் கோலங்கள்

இது உங்கள் காலம் இனிமேல்

உலகம் பார்க்க போவது

மனிதையின் வீரங்கள்

சிங்கப்பெண்ணே சிங்கப்பெண்ணே

ஆணினமே உன்னை வணங்குமே

நன்றிக்கடன் தீர்பதற்கே

கருவிலே உன்னை ஏந்துமே”

 

டைமிங் சரியாக இருப்பது போல் அருகில் யாருடைய மொபைலிலோ அழைப்பு மணி பாடலை ஒலிக்க, திவ்யாவின் பார்வை அக்ஷராவின் கையில் பதிந்தது. இடது கரத்தில் மணிக்கட்டில் லேசாக இரத்தக் கசிவு ஏற்பட்டிருந்தது. வலி அவளது முகத்தில் நன்றாகவே தெரிந்தது. அக்ஷராவின் அருகில் ஓடப்போனவளின் பார்வை அவளது மறுபுறம் படிய அச்சுவின் வலது கரம் ஒருவனின் கழுத்தைப் பிடித்தபடி இருந்தது. அவளது இரும்பு பிடிக்குள் சிக்கியிருந்தவனின் விழிபிதுங்கியது. மூச்சுத் திணறியது.

 

அவன் தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டி அக்ஷராவைத் தாக்க கையை ஓங்க அவனது ஓங்கிய கரத்தைப் பற்றியவள் அதை  அவனது முதுகுப் பக்கமாக முறுக்க அவன் வலியில் கத்தினான். மறு கையால் அவனது மற்றொரு கரத்தில் இருந்த கத்தியைத் தட்டிவிட்டாள். நடப்பவற்றைப் பார்த்திருந்த திவ்யா அக்ஷராவைப் பெருமை பொங்க பார்த்தாள். அவளையும் அறியாமல் கண்களில் பெருமிதம் பொங்கியது. ‘எங்க அச்சுவா கொக்கா? மாட்டுனான்டா மாடசாமி’ என்று மனதுக்குள்ளே சபாஷ் போட்டுக் கொண்டவள் இருக்கும் இடம் மறந்து கைதட்டி விசிலடித்தாள்.

 

மொளப்பாறி எடுத்துவந்த பெண்கள் கூட்டத்திற்கு இடையில் நின்றதால் நடப்பது வெளியில் யாருக்கும் அவ்வளவு தெரிந்திருக்கவில்லை. சுற்றியிருந்த பெண்கள் சற்றே விலகி நிற்க ஓரிருவர் முன் சென்று கொண்டிருந்த பெரியவர்களிடம் சொல்லச் சென்றனர். நடப்பவற்றைப் பார்த்திருந்த கூட்டம் சற்றே சிதறிப்போக அக்ஷரா அவனது கையை மேலும் முறுக்கியபடி “யார் நீ? எதுக்கு என்னை பின்தொடர்ந்து வர்ற?” என்று மிரட்டினாள்.

 

அவளது இரும்புப் பிடியின் இறுக்கம் தாளாது அவன் வலியில் துடிக்க இவனை கூட்டத்தை விட்டு வெளியே தள்ளி அழைத்துச் சென்று தான் விசாரிக்க வேண்டும் என்று முடிவு செய்து திவ்யாவை உதவிக்கு அழைக்க கூட்டத்தில் அவளைத் தேடினாள். அதுவரை சற்று தள்ளி நின்று அக்ஷராவைப் பெருமையாகப் பார்த்திருந்த திவ்யாவின் பார்வை அக்ஷராவின் பின் கத்தியோடு நின்றவனின் மீது பதிய “ஐயோ மைநி!! பின்னாடி…” என்று தொடங்கியவள் முடிக்கும் முன் அச்சுவின் இடது கையை இந்த முறை அழுத்தமாகவே பதம் பார்த்திருந்தது அவனுடைய கத்தி.

 

சட்டென்று எதிர்பாராத நேரத்தில் நடந்த தாக்குதலால் சற்றே நிலைகுலைந்து கீழே விழப்போனவளை தாங்கியது ஒரு கரம். தாக்குதலின் அதிர்வால் கண்கள் கிறங்கிப் பார்வை மங்க தன்னைத் தாக்கியது யாரெனப் பார்த்தவளின் பார்வையை எதிர்கொண்ட அமிர்தனின் மறுகரமோ அக்ஷராவைக் கத்தியால் கிழித்தவனின் கழுத்தை நெறித்திருந்தது. ‘நான் வந்துவிட்டேன். இனி பயமில்லை. பார்த்துக் கொள்வோம்’ என்பதாய் பார்வையாலேயே அவளுக்கு தைரியம் சொன்னவன் தனது பிடியை மற்றவனிடத்தில் இறுக்கினான். அவனோ அக்ஷராவிடம் மாட்டியவனைப் பார்த்து “மாரிப்பா!!! ஓடிரு!! மாட்டிராத!” என்று கத்தினான்.

 

அமிர்தனைக் கண்டவளுக்கு ஓரளவு தெம்பு மீண்டு வர தன் பிடியில் இருந்தவனை தன் புறம் திருப்பி அவனது முகத்தில் பற்கள் உடையுமளவு அழுத்தமாக குத்தினாள். அதன் வீரியம் தாங்க இயலாமல் ஏற்கனவே கைகள் முறுக்கப்பட்டதால் ஏற்பட்ட வேதனையில் இருந்தவன் மயங்கி மடங்கினான். இதற்குள் அமிர்தன் தன் பிடியில் வைத்திருந்தவனின் கரங்களை பின்புறமாக இழுத்து ஒரு துண்டினால் இறுக்கிக் கட்டினான். திவ்யா அக்ஷராவிடம் ஓடியே வந்து தனது தாவணியின் முந்தியின் ஓரத்தைக் கிழித்தவள் குருதி கொட்டிய இடத்தினைச் சுற்றிக் கட்டினாள்.

 

கூட்டத்தினுள் முன்னே சென்று விட்ட மற்ற மூவரும் விஷயம் கேள்விப்பட்டு பதறி ஓடிவர சாருவிற்கு அக்ஷராவின் கையில் கட்டப்பட்டிருந்த கட்டினைக் கண்டதும் மயக்கமே வந்தது. சுலோ அகஷராவைத் தாங்கிக் கொள்ள மீனா சாருவை அணைத்துக் கொண்டார். இதற்குள் செய்தி பரவி வேறு சில இளவட்டப் பையங்களும் வந்து சேர இவர்களைத் தாக்க வந்த இருவரையும் கைகள் பின்னே கட்டி அடுத்து என்ன என்பதாய் அமிர்தனை நோக்கி பார்த்து நின்றனர். அமிர்தன் தனது அலைபேசியில் யாருக்கோ அழைத்துப் பேச அடுத்த பத்தாவது நிமிடம் போலீஸ் வந்து சேர்ந்தனர்.

 

கைகளின் காயத்தில் இரத்தக் கசிவு நின்றுவிட்ட போதும் அக்ஷரா சோர்வாகத் தென்பட அமிர்தன் சுலோவிடம் “அம்மா நீங்க எல்லாம் வீட்டுக்குப் போங்க. நான் நம்ம நல்லசிவத்தைக் கூட்டிட்டு வரேன்.” என்று இறுக்கமான குரலில் சொல்லி விட்டு திரும்பி அந்த போலீஸ் அதிகாரியிடம் ஏதோ பேசச் சென்று விட்டான். பெண்கள் ஐவரும் தங்கள் வீடு நோக்கிச் நடக்கத் துவங்க அவர்களின் அருகே வந்து நின்ற காரிலிருந்து இறங்கிய சத்தியன் இறுகிய முகத்துடன் அனைவரையும் ஏற்றிக் கொண்டு வீடு நோக்கிப் பறந்தார்.

 

வீடு வந்து சேரும் வரை யாரும் எதுவும் பேசவேயில்லை. வண்டியோட்டி வந்த சத்தியன் மட்டும் அவ்வப்போது கலங்கிய கண்களுடன் திரும்பித் திரும்பி தன் அருகில் முன்னிருக்கையில் அமர்ந்திருந்த மகளின் முகத்தைப் பார்த்தபடி இருந்தார். ஒரே மகள். எவ்வளவு செல்லம்!! இன்றளவில் குரலுயர்த்தி கூட அவளிடம் பேசியதில்லை. பொதுவாகவே அக்ஷரா நல்ல குழந்தை. பெற்றவரிகள் கோபிக்கும் அளவு இன்றளவில் அவள் நடந்து கொண்டதே கிடையாது. தான் தவறே செய்திருந்தாலும் அதை ஒப்புக் கொண்டு அந்தத் தவறு பிறகு மறுபடியும் நடக்காதவாறு பார்த்துக் கொள்வாள்.

 

ரொம்பவுமே தைரியசாலி தான். பள்ளிக்கூடம் படிக்கும் காலத்திலேயே எல்லா தற்காப்புக் கலைகளையும் கற்று வைத்திருந்தாள். எந்தமாதிரியான இக்கட்டான சூழ்நிலையிலேயும் தன் மகள் தன்னைக் காத்துக் கொள்வாள் என்பது புரிந்து தான் இருந்தது. ஆனாலும் உள்ளுக்குள் இருந்த அந்த தகப்பனால் தனது மகள் காயப்பட்டு நிற்பதைக் காணச் சகியவில்லை. தன் மகளைக் காயபப்டுத்தியவனைக் கொன்று விடும் ஆத்திரம் பொங்கியது உள்ளுக்குள்.

 

இவர்கள் வீடு வந்து சேரவும் பின்னோடே தனது என்ஃபீல்டில் பின்னே ஒருவருடன் வந்து சேர்ந்தான் அமிர்தன். அக்ஷராவை சுலோ ஹாலில் சோஃபாவில் அமர வைக்க அமிர்தனுடன் வந்த நபர் அவளது காயத்தை பரிசோதிக்க வேண்டிக் காட்டுமாறு கேட்டதும் புரிந்தது அவர் தான் நல்லசிவமென்ற டாக்டர் என. சுற்றி நின்ற மற்றவர்கள் கையாலகாததனத்தோடு அவர்களையே பார்த்திருந்தனர். போட்டிருந்த கட்டினை அகற்றிவிட்டு காயத்தின் ஆழத்தைப் பரிசோதித்தவர் அதற்கு மருந்திட்டு முடித்து தனது பைக்குள் இருந்து இன்ஜக்ஷனை எடுத்தார்.

 

அவ்வளவு நேரம் தைரியமாக இருந்த அக்ஷரா அவர் எடுத்த இன்ஜெக்ஷனைப் பார்த்ததும் அலறி சோஃபாவை விட்டு பதறி எழுந்தாள். சுலோவின் அருகில் அவ்வளவு நேரம் அழுதபடி நின்ற திவ்யா அக்ஷரா பதறி எழவும் என்னவோ ஏதோ என அவளருகில் பதட்டதுடன் ஓடி வந்து “என்ன மைநி?? என்னாச்சு?” என்றாள். “ஐயோ ஊசி!!! எனக்கு வேண்டாம். என்னால முடியாது.” கண்களில் பயம் அப்பட்டமாகத் தெரிய திவ்யாவின் கைகளைப் பிடித்துக் கெஞ்சினாள் அக்ஷரா.

அடுத்த பக்கம்

Advertisements