என்னைத் தந்தேன் வேரோடு 10

“கங்ராட்ஸ்டா குல்ஸ்,நீ ஆசைப்பட்டபடியே நம்ம ஜூனியர் வர போறாங்க”

கவினின் அந்த வாழ்த்துதலில் அவனுக்கு விஷயம் புரிந்துவிட்டது என உணர முடிந்தாலும், அவன் வாழ்த்தியவிதம் முனுக்கென்றது வேரிக்கு.

அவன் மார்பில் சாய்ந்திருந்தவள் தலை நிமிர்த்தி அவன் முகம் படித்தாள்.

இயல்பில் இவளை காணும்போது அவன் முகத்தில் வரும் அந்த மலர்ச்சி அப்படியே இருந்தது. அப்படியானால் குழந்தைக்காக அவன் உணர்ச்சி வசப்படவில்லை என்று அர்த்தமா?

“உங்களுக்கு குழந்தை விஷயம் சந்தோஷமா இல்லையா?”

“இல்லையே, குழந்தைய நினைச்சா சந்தோஷமா இருக்குதுதான், ஆனால் இப்ப உன் இந்த வயசுக்கு இத கொஞ்சம் தள்ளி வச்சிருக்கலாம்னு எனக்கு ஒரு எண்ணம். முன்னமே உன்ட்ட சொன்னேன்தானே, ஆனா நீ ஆசைப்பட்ட, நீ கேட்ட பிறகு அதுவும் நியாயமான ஒரு ஆசைக்கு நான் எப்படி நோ சொல்லுவேன்”

“அப்படின்னா எனக்காகதானா?” அவள் குரல் மிகவும் உள்ளிறங்கி போயிற்று.

“இதென்ன குல்ஸ் இப்படி பேசிகிட்டு? அது நம்ம குழந்தை.  உனக்கு அடுத்தபடியா என் வாழ்க்கையில முக்கியமான உயிர், மனசால கூட எனக்கு குழந்தை முக்கியமில்லனு நினைக்காதே, உன் நினைவு கூட பேபிய தொடும், ஞாபகம் வச்சுகோ”

வேரியின் முகத்தில் பழைய மகிழ்ச்சி வந்திருந்தது. ஆனால் எங்கோ உள்ளே ஒரு உறுத்தல் தடயமின்றி தஞ்சமானது.

“அத்தை மாமாட்ட சொல்லணும்” தயங்கி சொன்னவள் முகம் வழியாக மனம் காண முயன்றான் கணவன்.

“அவங்க  ச…சந்தோஷப்படுவாங்கதானே? ஒருவேள” அவள் இழுக்க,

“ஒரு வேளை??”

“அவங்க, அவங்க, வருத்த …சாரி பயப்படுவாங்களோ?”

“பயாமா? ஏன்மா?”

“இல்ல, என்ன மாதிரி பிறந்திடும்னு, என்னோடது ஜெனிடிகல் ப்ராப்ளம் கிடையாதுன்னு அவங்களுக்கு தெரியாதுல்ல, அதான்”

“எதையும் எதிர்பார்கிறப்பவே மனசுக்கு கஷ்டமான கோணத்துலதான் எதிர்பார்க்கிறதா?”

“அதுக்கில்ல, அவங்க ஏற்கனவே நம்ம மேரேஜ்னால அப்சட்டா இருக்காங்கல்ல, அதுல இந்த நியூஸை எப்படி எடுத்துப்பாங்கன்னு”

“உனக்கு ஒரு விஷயம் தெரியுமா?  நம்ம மேரேஜ்னால அவங்க அப்செட்டா எதுவும் இல்ல, அவங்க நம்ம மேல அப்சட்டா இருக்காங்கன்னு நான் எப்பவாவது சொல்லி இருக்கேனா?

நம்ம மேரேஜ் அன்னைக்கு நாம கிளம்புறப்ப அவங்க கவனம் வியன் மேல இருந்துது, என்னதான் அவன் ஸேஃபா இருக்கான்னு நான் சொன்னாலும் அவன அதுவரை நாம யாரும் பார்க்கல இல்லையா? அதனால

அப்புறம் நான் தான் கொஞ்ச நாள் நாம தனியா இருந்தாதான் ஒருத்தர ஒருத்தர் ஒழுங்கா, அடுத்தவங்க இன்ஃப்லுயென்ஸ் இல்லாம சரியா புரிஞ்சிக்க முடியும்னு அவங்கள வெயிட் பண்ண சொல்லி கேட்டுகிட்டேன்,

இல்லனா எப்பவோ வந்து செல்லம் கொடுத்தே உன்னை இன்னும் சின்னபாப்பாவா ஆக்கி இருப்பாங்க, அவங்க நம்ம வீட்டுக்கு வரலைனதும் நீயாவே நல்லா கற்பனை செய்துகிட்ட”

“ஹான்”

“நீ வாய திறந்திருந்தாலும் மூடி இருந்தாலும் எனக்கு ஓகே தான் குல்ஸ், ஆனா கொசுவாவது குருவியாது முட்டை போட்டுட்டுன்னு வச்சுக்கோ”

சட்டென தன் வாயை மூடிக்கொண்டாள் வேரி.

“இப்ப ஹாஸ்பிட்டல் போய் விஷயம் கன்ஃபார்ம் ஆனதும், அவங்கட்ட சொல்லலாம், எனக்கு தெரிஞ்சவரை உன் மாமியாரை நாளைக்கு இங்க எதிர் பார்க்கலாம்” அடுத்து அவன் சொல்ல,

“அ…தோட” தயங்கி நிறுத்தினாள் வேரி.

“உன் பேரண்ட்ஸ்ட்ட சொல்லணும், அவங்கள பார்க்கணும் அப்படிங்கிற மாதிரி எதையும் தவிர நீ வேற என்ன வேணாலும் கேளுடா”

கவின் முகத்திலிருந்த அந்த கனிவு, குரலில் இருந்த அன்பு எதுவும் மாறவில்லை ஆனால் அவன் கண்கள்…

அதைப் பார்த்த பின்பு வேரியால் அதற்கு மேல் தன் தாய்வீடை பற்றிப் பேச முடியவில்லை. ஆனால் அதை அடிமனதால் முழுமையாக ஒத்துக்கொள்ளவும் முடியவில்லை.

அடுத்த பக்கம்

Advertisements