என்னைத் தந்தேன் வேரோடு 9 (8)

டுத்த வந்த நாட்கள் வேரிக்கு சொர்க்க வாழ்வின் முன்னோட்டம் என்றானது. கண்ணீர் யாவும் துடைக்கபட்டு, வலி யாவும் நீங்கி, தனக்காக உயிரையும் தர விரும்பும்  மன்னனின் உயிர் மனைவியாய், உண்மை காதல் ஒன்றே இயக்கும் விசையாய், இல்லறம் பரலோகின் பால உதாரணம்.

உண்மையில் கவின் கைக்குள் சுருளும் நாட்களில் ஈரமில்லா விடியல்கள். இடையில் ஒரு நாள் மீண்டுமாய் பழைய பிரச்சனை தலை காட்ட துவண்டு போனாள்தான்.

ஆனால் கவின் அந்த நிமிடங்களை கையாண்ட விதத்தில் அவளால் அந்த நிகழ்வை அசட்டை செய்ய முடிந்தது.

அடுத்து சில நாட்கள் பின், வேலை விஷயமாக  வெளியே சென்று வந்தவன், அவள் கைகளில் ஒரு பார்சலை கொடுத்துவிட்டு தலையில் சின்னதாய் செல்லமாய் ஒரு குட்டு.

“எதையும் ஒழுங்காவே விசாரிக்காம இப்படித்தான் தனியா சோக கீதம் வாசிப்பியா? எத்தன வருஷம் முன்னால டாக்டர பார்த்தியோ? உருப்படியா ஒரு டாக்டரை பார்த்திருந்தா அப்பவே இதயும் சொல்லியிருப்பாங்கல்ல, இந்த மாதிரி ப்ராப்ளம் உள்ளவங்களுக்குன்னு இதெல்லாம் இருக்குது”

பிரித்துப் பார்த்தாள். அடல்ட் டயப்பர்.

அவன் நம்ம வாழ்க்கைக்கே விடிவு காலம் வந்துட்டு, எவ்வளவு பெரிய ரிலீஃப் என்பது போலோ, இது தெரியாம இவ்வளவு நாள் எவ்ளவு கஷ்டபட்டுட்ட நீ என்பது போலோ எதாவது சொல்லி இருந்தால் அல்லது முக பாவம் காட்டி இருந்தாலோ கூட வேரிக்கு தன் ப்ரச்சனை பெரிதானதுதான் என அதன் பின்பும் நம்ப முடிந்திருக்கும்.

அவன் மிக சாதாரணமாக ஒரு சின்ன கவனக்குறைவை சுட்டி காட்டுவது போல் சொல்லிவிட்டு போக அதன் பின் அப்பிரச்சனை ப்ரச்சனையாகவே தோன்றவில்லை அவளுக்கு.

வேரி மெல்ல மெல்ல தன்னை கவினின் பார்வையில் பார்க்க தொடங்கினாள். அவளை அவளுக்கே பிடிக்க தொடங்கியது.

சில மாதங்கள் சில நாட்கள்போல் பறந்திருந்தன.

‘கவின்”

லேப்டாப்பில் மூழ்கி இருந்த கவின் தலையை நிமிராமலே,

”ம், இன்னும் கொஞ்சம் வேல இருக்கு குல்ஸ், முடிச்சிட்டு வந்துடுறேன்” என்றபடி தன் வேலையை தொடர்ந்தான்.

“கவின்ஸ்”

“ம்” இப்பொழுது பதில் ஒற்றை எழுத்தோடு நிற்க,

“மிஸ்டர் அழகு சுந்தரம்” மனைவியின் இந்த அழைப்பில் சட்டென எழுந்து நின்றான் கவின்.

“சொல்லுங்க எஜமானியம்மா” என்றபடி.

அவனுக்கு தெரியும் இது அவளது உச்சகட்ட மகிழ்ச்சியின் வெளிப்பாடு என.

“ஆங், அது, உங்களுக்கு உங்க தாத்தா பாட்டிய பிடிக்குமா?”

“ஏன்டா, உனக்கு பாட்டி ஞாபகமா இருக்கோ?” அவளை தன் மார் மீது சாய்த்தான்.

அவன் மீது வாகாக ஒண்டினாலும் “கேட்டா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம பதில் கேள்வி கேட்டுகிட்டு, இது என்ன இந்த எதிர்த்து பேசுற புது பழக்கம்?” என்று எகிறியது அவள் கேள்வி.

அவள் பேச்சின் தலை வால் புரியவில்லை எனினும் மகிழ்ச்சியில் மிளிர்ந்த அவள் முகமும், குரலும்  கணவன் மனதிற்குள் பாச மழை.

“என்ன பதில காணோம்?”

“ஆமாங்க எஜமானியம்மா, எல்லோரையும் போல எனக்கும் அவங்கள ரொம்ப பிடிக்கும்தான், ஆனா அவங்க யாரும் இப்ப இங்க இல்லையே”

“அது இல்ல, எல்லோருக்கும் ஏங்க அவங்க க்ரன்ட் பேரண்ட்ஸ பிடிக்குது?”

இப்பொழுது அவள் நாடியில் தன் ஒற்றை விரல் வைத்து அவள் முகத்தை நிமிர்த்தி அவள் கண்களை படிக்க முற்பட்டான் கவின்.

“எப்பவுமே தன் பிள்ளைகளவிட பேரப்பிள்ளைங்களுக்கு எல்லாரும் அதிகமா செல்லம் கொடுப்பாங்க, அதனால பிள்ளைங்களும் பேரண்ட்ஸவிட க்ராண்ட் பேரண்ட்ஸ்ட்ட ரொம்ப அன்யோன்யமா இருப்பாங்க”

“அப்டின்னா, உங்க பேரண்ட்ஃஸுக்கு அவங்க கிராண்ட்சில்ரனும், அவங்க பேரபிள்ளைகளுக்கு தாத்தா பாட்டியும் வேணும்தான?”

அவன் மீது சாய்ந்து நின்றாலும் அவள் தலை குனிந்து நின்றவிதத்தில் கவின் முதலில் நினைத்தது தன் மனைவி தன் பெற்றொரிடம் சீர் பொருந்த விரும்புகிறாள் என்பதே. ஆனால் அடுத்த நொடி அவனுக்கு விஷயம் புரிந்துவிட்டது.

அவர்களது ஜூனியர் உதயம்.

தொடரும்…

One comment

Leave a Reply