என்னைத் தந்தேன் வேரோடு 9 (7)

விருந்து ஹாலிற்குள் நுழைந்தாள் மிர்னா.

விருந்தில் சிலர் ஜோடியாக ஆடிக்கொண்டிருக்க, உயர் தர மது வகை வகையாய் பரிமாறப்பட, கரை மீது மீனாய் தோன்றிற்று மிர்னாவிற்கு.

சில அறிமுகங்கள், சில உபச்சார உரையாடல்கள். சிறிது நேரம் செல்ல திரும்பிப் பார்த்தாள் இவளுடையவர்கள் யாரும் இவள் பார்வையில் இல்லை.

மிஹிரும் மின்னியும் எதாவது தனி டேபிளில் இருக்கலாம். வியன் ஸ்பான்ஸ்சர்ஷிப் குறித்து பேசப் போயிருக்கலாம். காரணம் புரிந்தாலும் ஏனோ கைவிடப் பட்டவள்போல் உணர்ந்தாள் மிர்னா.

தனியாக மேஜையில் உம்மென்று அமர்ந்திருந்தவளிடம் வெகு நேரம் கழித்து வந்தான் வியன்.

“எனக்கு வீட்டுக்கு போகனும்,”

அம்மா வேணும் என சிணுங்கும் மழலையின் தொனி அதில்.

உருகிப் போனான் வியன்.

இவளருகிலிருந்த நாற்காலியில் வேகமாக அமர்ந்தவன் “சாரிடா, தெரிஞ்ச ஒருத்தங்க பிடிச்சுகிட்டாங்க, அடுத்து ஸ்பான்சர் பத்தி பேச ஆரம்பிச்சாங்க, நேரமாயிட்டு, உன் மேல கோபத்துலலாம் உன்னை விட்டுட்டு போகல”

அவள் மனம் எதில் குழம்பி இருக்கும் என அவனுக்கு தெளிவாக தெரிந்திருக்கிறது.

“நான் சும்மா தான் அந்த ரெட் ட்ரஸ் போட்டேன், இந்த டிரஸ் உங்களுக்காக தான் போட்டேன், இது எனக்கு ரொம்பவும் பிடிச்சிருக்கு” அவசர அவசரமாக அவள் விளக்க

அவன் பார்வையில் என்ன பாசமா?

“தெரியும், உனக்கு என்னை சீண்டி பார்க்க ஆசை, நம்ம பொண்ணு ஆசைப்படுதே, நம்மள தவிர யார் அத நிறைவேத்த முடியும்னு  நானும் கொஞ்சம் மூஞ்ச தூக்கிட்டு இருக்கிற மாதிரி அமைதியா இருந்தேன்”

“பேட் பாய்!!!” அவனை சர்டிஃபை செய்தவள் “நாம கிளம்புவமே, எனக்கு வீட்டுக்கு போகணும்”  என்று பழைய பல்லவியே பாடினாள்.

“பாதில போனா நல்லாருக்காதுமா ,இந்த ஜூசையாவது குடி, உனக்கு பசிக்க ஆரம்பிச்சிருக்கும், கர்டஸிக்காகவாவது எல்லோர்ட்டயும் பேசு, பார்டி முடிஞ்சவுடனே கிளம்பிருவோம்”

அவன் நீட்டிய ஜூஸை பிடிக்காமல் அதை நீட்டிய அவன் கையை பிடித்துக்கொண்டாள்.

“ப்ளீஸ்பா, எப்படியாவது என்னை இங்க இருந்து வெளிய கூட்டிட்டு போய்டுங்க, இந்த ஸ்பான்சரும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம்” அவள் கை காயம் மீறி, அழுத்தி பிடித்தவிதம் வியனை அவள் கோரிக்கையை நிறைவேற்ற உந்தியது.

“சரிமா” சுற்று முற்றும் பார்த்தபடி என்ன செய்யலாம் என யோசித்தபடி வியன் சம்மதிக்க, அவன் கையிலிருந்த பழரச கோப்பையை வாங்கி பருகும் நோக்குடன் மிர்னா வாயில் வைத்த  நேரம் ஒரு வழுக்கை தலை கிழவன் வந்து சேர்ந்தான்.

அவன் கோட்டும் சூட்டும் பெரும் பணக்காரன் என காண்பித்தாலும் அவன் இளிப்பும் முழிப்பும் பெண்பித்தன் என தெரிவித்தது. நடை அவன் மதுவுக்கு அடிமை என்றது.

“ஹழோ பேழ்பி யூ ழுக்க் ழ்ழாட்,” என்றபடி இவளைப் பார்த்து இழித்தவன்

“ழ்ழுவர் ழ்ழிங் இஸ் ப்ழெஷிழெஸ்” சொல்லியபடி இவள் எதிர்பார்க்காத வண்ணம் இவள் கையிலிருந்த பழரச கோப்பையை பறித்தான்.

கோப்பைக்கு ஒரு அழுக்கு முத்தம் வைத்து, ஜூஸை ஒரே மூச்சில் அவன் பருக குமட்டியது அதை பார்த்திருந்தவளுக்கு.

ஆனால் அடுத்த நிமிடம் அந்த கிழவன் கால் சருக்கி, முகம் கோணி கீழே விழும்போது கூட “ஹே ழ்ழ்ழிஃஸ் இஸ் ஃபழ்ழ்ழ்ழ்னி” என்றபடி சிரித்ததால் போதையின் விளைவு என்றுதான் எண்ணினர் அனைவருமே.

ஆனால் அடுத்து அவன் வாயில் நுரை தள்ள, காலும் கழுத்தும் கைகளும் கட்டுபாடின்றி வெட்ட தொடங்கியதும் தான் அது விஷ விஷயம் என புரிந்தது. மருத்துவமனை கொண்டு செல்லபட்டான் அந்த கிழவன்.

அப்பொழுதுதான் மரணத்தின் முகத்தில் தான்  நிற்பதை உணர்ந்தாள் மிர்னா. அவளை யார்?? ஏன்? எதற்காக கொல்ல வேண்டும். எதுவும் புரியவில்லை அவளுக்கு.

ந்த நிகழ்விலிருந்து அவளுக்கான ஒவ்வொரு வேளை உணவையும் முன்திட்டமிடல் ஏதுமின்றி ஒவ்வொரு இடத்திலிருந்து வாங்கி வரத் தொடங்கினான் வியன்.

அதோடு உள்ளூர் காவல் துறை ஏற்பாடு செய்திருந்த பாதுகாப்புடன் இரண்டு பாடி கார்டுகளையும் இவளுக்காக ஏற்பாடு செய்தான் அவன்.

இதெற்கெல்லாம் எவ்வளவு செலவாகும்? அவள் மனம் உழல

என்னை நம்புறதான? அவன் கேட்ட கேள்வி ஞாபகம் வர அவனது அத்தனை முயற்சிகளும் இவளது லட்சியத்திற்காகவே என்ற ஞாபகத்துடன் போட்டியில் மாத்திரம் கவனம் செலுத்தினாள் மிர்னா.

அடுத்து தங்க பதக்கத்துடனும் சாதனை பட்டியலுடனும் ஏதென்ஸிலிருந்து, அடுத்த போட்டிக்கான பயிற்சிகாக ஜெர்மனியின் கலோன் நகர்  கிளம்பி சென்ற போது அங்கு அவளுக்கு அடுத்த ப்ரச்சனை காத்திருந்தது.

அடுத்த பக்கம்