என்னைத் தந்தேன் வேரோடு 9 (4)

அதுவரை வார்த்தையில் இருந்த திருமணம்,  வைபவமாய் அரங்கேற்றம்.

காதல் கடுமழை முடிந்த சாரல் பொழுதில், தன்னவன் தோளில் தலை வைத்து  அவன் மார்பிலாடிய சிறு பொன் சங்கிலியை உருட்டியபடி கேட்டாள் வேரி,

“கொஞ்ச நாள் போகட்டும்னு சொன்னீங்க,”

“அதான் நம்பிக்கை கூடிகிட்டேதான் இருக்கும்னு சொல்லிட்டீங்களே, என் கல்யாணம் என் பேரண்ட்ஸ் இஷ்டபடி அதுக்குபிறகு ஒவ்வொன்னும் என் செல்ல பொண்டாட்டி இஷ்டபடின்னு முதல்லயே முடிவு செய்து வச்சிருந்தேன்,

பெரியவங்க நீங்களே பெரிய மனசுபண்னி க்ரீன் சிக்னல் காமிச்ச பிறகு, செய்றத திருந்த செய்தடுனுமில்லையா, கல்யாணத்துல தான் உன் இஷ்டம் எதுன்னு பார்த்து செய்ற சூழல் இல்ல, இதுலயாவது இருக்கணுமே” இவள் நெற்றி வாசம் முகர்ந்த வண்ணம் அவன் சொல்ல,

“என்னை எதுக்காக கல்யாணம் செய்தீங்க?” அவள் குரல் குழைந்தது.

“இன்னுமா உனக்கு தெரியலை?”

“ம்,புரியுது, ஆனாலும் நீங்க சொல்லி கேட்டா அது ஒன்னும் கசக்காது” அவள் சலுகைப்பட,

அவளை தேடி எதற்காக சென்றான், அவள் ஜெபம் இதை குறிப்பிட்ட கவின் தொடர்ந்தான்.

“எனக்கு அம்மா அப்பா மேரேஜ் லைஃபை பாத்துதான் கல்யாணத்துல மேல ஆசை மரியாதை எல்லாமே. அதனால அவங்களே எனக்கான பொண்ணை முடிவு செய்யனும்னு முதல்ல இருந்தே ஒரு எண்ணம்.

நம்ம ஃப்யூயல் ஃபாக்ட்ரினால ரொம்ப டைட்டான இந்த சிஷுவேஷன்ல அவங்க பொண்ணு பார்த்திருக்கோம்னு சொல்லுவாங்கன்னு நான் எதிர் பார்க்கலை, ஆனா அதைத் தடுக்கவும் விருப்பம் இல்ல,

சரின்னு சொல்லிட்டேன், ஆனா அதைத் தாண்டி எதையும் யோசிக்க கூட எனக்கு டைம் கிடையாது,

அம்மா அப்பாக்கு கல்யாணத்துக்கு முன்னால பேசிக்கிறது பிடிக்காது, தேவையில்லாத குழப்பம் வரும்னு சொல்லுவாங்க, இல்ல நான் பேசுவேன்னு சொல்லிருந்தாலும் ஒன்னும் சொல்லி இருக்க மாட்டாங்க, ஆனா நான் செய்யலை,

உண்மைய சொல்லனும்னா மனசு முழுக்க ஃபாக்ட்ரில, எதையும் கண்டுக்க முடியலை,

அடுத்து அன்னைக்கு உன்னை பார்க்க வந்த அந்த நேரம், என்னமோ இதுதான் உனக்கானவன்னு ஒரு இன்னர் வாய்ஸ், instinct is from the LORDனு சொல்லுவாங்க, என்னமோ என் மொத்த எதிர்காலமும் நீ தான்னு ஒரு உணர்வு, அடுத்து உன்னை இழக்க எனக்கு பெலம் இல்ல,

அப்பதான் இது மாதிரி எதுவுமே அதுவரை எனக்கு ஏற்பாடு செய்திருந்த போண்ணு மேல தோணவே இல்லங்கிறதும் புரிஞ்சிது,

அதே நேரம் உன்னை குறைவா நினச்சுதான் உனக்கு கல்யாணத்து மேல பயமே தவிர, தனிப்பட்ட வகையில் என் மேல எந்த வெறுப்பும் இருக்க மாதிரியும் படல,

உன் அக்கா அம்மா அப்பா நான் எங்க வீடுன்னு எல்லாருக்கும் அக்கறையா ப்ரேயர் பண்ணுன, அடிப்படையில் அன்பான சுபாவம்,

கல்யாணம் பிடிக்கலைனாலும் உன் அம்மா அப்பாட்ட உன்னால நோ சொல்ல முடியாதுன்னும் புலம்பிகிட்டு இருந்த,

யார ஹர்ட் செய்றதும் உனக்கு கஷ்டம்ன்ற அளவு மென்மையான மனம்னு புரிஞ்சுது. என் அன்ப ரொம்ப ஈசியாவே புரிஞ்சுப்பன்னு பட்டுது.

அதேநேரம் எப்படியும் இந்த கல்யாணத்தில் உனக்கு இஷ்டம் இல்லையேன்னு இருந்துச்சுதான்.

ஆனா அதுக்காக நான் இந்தக் கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டா, காசு மட்டும்தான் குறிக்கோள்னு நினைக்கிற உன் அம்மாப்பா உன்னை எப்படிபட்டவன் கைல தூக்கி குடுப்பாங்களோன்னு யோசிக்கவும்,

அதுக்கும் நீ இப்படித்தான் ஒன்னும் சொல்லாம அழுதுட்டே சரின்னு சொல்லுவன்னு புரியவும், நம்ம மேரேஜ் நடக்கட்டும்னு பட்டுட்டு எனக்கு.

சாரிடா, உன் இஷ்டம் இல்லாம நடந்த கல்யாணம்தான், ஆனா காதலில்லாம நடக்கலை, அதோட…” அவன் தன் மனதை வார்த்தைகளில் திறக்க,

“அப்ப நீங்க என் கால பத்தி யோசிக்கவே இல்லயா?” இடையிட்டாள் மனைவி. அவன் சொன்ன அந்த நேரத்தில் இவள் தன் காலை குறித்து புலம்பிய ஞாபகம் நன்றாக இருக்கிறது வேரிக்கு.

எல்லா காரியங்களையும்விட இதை தெரிந்தும் இவன் எப்படி இவளை ஏற்றான் என்பதுதான் இப்போது வரைக்குமே இவளுக்கு அதிசயமாக இருக்கிறது.

இந்த இவள் குறைபாடு வெளியில் தெரிவதே அவமானம் என்பது போல் பூட்டி வைத்தல்லவா இவளை வளர்த்தார்கள் இவள் வீட்டில்.

“கல்யாணத்துல உனக்கு இஷ்டம் இல்லாததற்கு காரணம் உன் கால் பத்தின உன் எண்ணம்தான், என்னை புரிஞ்சிகிறப்ப அந்த குழப்பம் உனக்கு சரியாகிடும்ங்கிற அளவுக்கு அதை பத்தி யோசித்தேன்தான், மத்தபடி இப்ப எனக்கு எதாவது ஆகிட்டுன்னு வையேன்…” அவன் இதையும் சாதரணமாகவே சொல்லிக் கொண்டு போக,

சட்டென அவன் வாயில் ஒரு அடி வைத்தாள் வேரி “இதென்ன பேச்சு, ஒழுங்கா பேசுங்க” என்றபடி.

“ஷ், ஆ” என முகம் சுழித்தவன்,

“ஏடி, நியாயப்படி, இந்த சிட்டுவேஷன்ல, ஐயோ, ஏங்க இப்படில்லாம் பேசுறீங்கன்னு நீ சோக பாவத்தோட என் வாய மூடி இருக்கனும், நான் ஒரு ரோமாண்டிக் லுக்கோட மெல்ல உன் கைய விலக்கிட்டு பேசுறதை கன்டின்யூ செய்திருக்கனும், இங்க என்னன்னா எடுத்தவுடனே அடி விழுது” மெல்ல தன் உதடுகளை தேய்த்துக்கொண்டான்.

“ம், அது நேத்துவரைக்கும் உள்ள கதை, இனிமே இது இப்படித்தான், சொல்ல வந்தத ஒழுங்கா சொல்லுங்க” இப்பொழுது அவள் அடித்த இடத்தை அவளே தேய்த்துவிட்டாள்.

உலகில் யாருடனும் தோன்ற முடியாத மன இணைவு எப்படி திருமணத்தில் உண்டாகிவிடுகிறது? அவன் அடுத்த உயிராகவே தோன்றவில்லை, அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

அவள் கையை மெல்ல நீக்கினான் “.சொல்ல வந்ததை சொல்லி முடிச்சுறேன், அப்புறமா அடிக்கிற கைதான் அணைகும்னு ஃப்ரூஃப் பண்ணு” என்றவன்

“இப்ப எனக்கு எதாவது ஆயிட்டுன்னா, அப்ப உனக்கு என்னை பிடிக்காம போயிடுமா? , அன்னைக்கு மனசுல இதுதான் உன் வைஃப்னு தோணின பிறகு, உன் ப்ரச்சனைகள பத்தி வேற எப்படி யோசிக்க தோணும்னு நீயே சொல்லு” அவன் சொல்ல அடித்த கை அணைத்தது

அடுத்த பக்கம்