என்னைத் தந்தேன் வேரோடு 9 (2)

கவினின் பிடியை மீறி துள்ளி எழுந்தவள், கைகளால் படுக்கையை துளாவ, அதற்குள் கவினும் விழித்து எழுந்தான்.

“என்ன குல்ஸ், இந்நேரம் என்ன தேடுற?”

வேரிக்கு பக்கென்றது, அவன் இவள் பொய் சொல்லிவிட்டதாய் நினைப்பானோ? என்று பயந்தாள்.

ஆனால் இன் நினைவே அவளுக்கு இன்னும் அவன் மீது முழுநம்பிக்கை வரவில்லை என்பதன் அடையாளம் என்பதை அவள் உணரக் கூட இல்லை.

“அ…து” இவள் தடுமாற, அதற்குள் சூழலை உணர்ந்திருந்தவன் அவளை அள்ளிக்கொண்டு கட்டிலுக்கு நடந்தான்.

“நைட் ஃபுல்லா நீ என் கைக்குள்ள இருந்தல்ல, அந்த போஷ்சருக்கு போயிருக்க மாட்ட, அதான், சோ, பொண்ணு தினமும் இனி என் கைக்குள்ள தான்”

கட்டிலில் அவளை மீண்டுமாய் தன்னுள் புதைத்தபடி தூங்கிப்போனான் கவின்.

விடிந்து எழுந்த பின்புதான் வேரிக்குமே மொத்தமாக அவ்விஷயத்தின் வீரியம் புரிந்தது.

நிஜம்தானா??அவள் ப்ரச்சனைக்கு உண்மையிலேயே முடிவு காலம் வந்துவிட்டதா??? இல்லை இன்றைய ஒரு நாளை வைத்து இப்படி கனவு காண்பது சரியா?

மிர்னா, மிஹிர், வியன் மற்றும் அம்மச்சி அதாங்க ரஜத்தின் அம்மா புடை சூழ ஏதென்ஸை சென்றடைந்தபோது இயல்பான உற்சாகத்தைவிட இன்னும் 50 சதவீதம் அதிக உற்சாகத்தோடும்,

அதனால் இன்னுமாய் எகிறி குதித்த குறும்புத்தனத்தோடும் இருந்தாள்.

அன்று தன் பிஸினஸ் சம்பந்தமாக ஒரு க்ளையண்டை சந்திக்க வியன் சென்றுவிட, அம்மச்சியை அவளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த குவார்டஸில் விட்டுவிட்டு,

மிர்னா மிஹிருடன் மலையேறும் பயிற்சிக்கு அக்ரொபொலிஸ் சென்றாள்.

அக்ரபோலிஸ் மலை சிறியது அதோடு இவர்கள் பயிற்சி செய்ய விரும்பிய இடத்தில் அதன் அடிவாரம் செல்ல வழியும் இல்லை.

ஆக இவர்கள் பயிற்சியின் போது முதலில் மேலிருந்து தொங்கும் கயிறை பிடித்துக்கொண்டு முடிந்த அளவு கீழிறங்கி, அதை பிடித்த வண்ணம் மேலே ஏறவேண்டும் என திட்டமிட்டனர்.

அதன்படி மிஹிர் ஒரு கயிற்றிலும், அவனுக்கு இணையாக இவள் ஒரு கயிற்றிலும் இறங்கிக் கொண்டிருந்தனர்.

சுண்டைக்காய் சமாசாரத்திற்கெல்லாம் போட்டி போடும் மிர்னா, அவளை சீண்டி விடும் மிஹிருடன் போட்டி போடாமல் இருப்பதாவது!!

அவனுடன் போட்டியிட்டவாறே வேகமாக இறங்கிக்கொண்டிருந்தாள் அந்த செங்குத்து மலையில்.

“மிர் நீ நல்லா பாடுவியாமே, வியன் சொன்னார், ஏதாவது பாடேன்” மிஹிர்தான் இவளை வம்பிழுத்தான்.

பி.கே இதெல்லாம் உன் வேலைதானா? இரு இரு இதுக்கெல்லாம் சேர்த்து முக்கியமான நேரத்துல முக்கால் மணி நேரம் பாட்டு கச்சேரி பண்றேன்.

எடுத்த சபதம் முடிப்பேன்ன்ன்ன்ன்,

மனதிற்குள் பாடத்தொடங்கியவளுக்கு அன்று விழுந்த பாறை ஞாபகம் வர மனம் கூட  கப்சிப்.

“இருந்தாலும் என் புகழ நிலை நிறுத்துறதுல உங்களுக்கு இவ்ளவு வெறி ஆகாது தயிர், சாரி, மிஹிர், ஆனானப்பட்ட அக்ரபோலிஸையே அசைச்ச இரும்பு மங்கை மிர்னான்னு என்  பேர் பேப்பர்ல வரனும்னு நீங்க ஆசைப்படுறது எனக்கும் புரியுது,

ஆனால், அந்த நியூஸை படிக்க நாமும் உயிரோட இருக்கனுமே” உரிய ஏற்ற இறக்கத்துடன் அவள் சொல்ல,

“ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது மிர், நீ பாடி மலை ஆடிச்சுன்னு சீன் போடுறதுக்கு வேற ஆளப் பாரு, இங்க உனக்கு பாட முடியலை. பயத்துல வாய் தந்தியடிக்குதுன்னு உண்மைய ஒத்துக்கோ” மிஹிர் எப்பொழுதும் போல்  அவளைச் சீண்டினான்.

பாடாத பாட்டெல்லாம் பாட வந்தேன், டின் டின் டின்

பாவை உன்னை ஓட ஓட துரத்த வந்தேன், டின் டின் டின்

பாட தொடங்கினாள் மிர்னா.

சட்டென இறுகியது அவள் பிடித்து இறங்கிக் கொண்டிருந்த கயிறு. நொடி நேரத்திற்குள் விஷயம் புரிந்துவிட்டது மிர்னாவிற்கு. அவளது கயிறு அறுந்து கொண்டிருக்கிறது.

70மீட்டர் உயர அந்த மலையில், ஏறத்தாழ பாதியில் இருந்தனர் மிஹிரும் மிர்னாவும்.

தரையிலிருந்து கிட்டதட்ட பத்தாவது மாடியிலிருப்பதற்கு சமம். கயிறு அறுந்து விழுந்தால் எலும்பும் மொத்த உடம்பும் நிச்சயம் திரும்ப கிடைக்கும்தான்.

உயிர் மட்டும்தான் ஓடிப்போயிருக்கும்.

நொடி கூட விரயம் செய்யாமல் பாறையில் வலுகொடுத்து மிதித்து,  தன் கயிறை ஊசலாட செய்தாள் மிர்னா.

கயிறு இப்பொழுது வலபுறமாக மிஹிரின் கயிறுக்கு மிக அருகில் செல்ல, அவனை விட சற்று முன்னதாக கீழிறங்கிக் கொண்டிருந்தவள், அவனுக்கு கீழாக தொங்கிய அவனது கயிறை பற்றிக்கொண்டு தன் கயிறை விட்டாள்.

அடுத்த பக்கம்