என்னைத் தந்தேன் வேரோடு 7 (5)

சில மணி நேரம் முன்புதான் மிர்னா வியன் விபத்து தொடங்கி ஊர் பஞ்சாயத்து வரை அவர்களுக்கு  நடந்த அனைத்தையும் அவளிடம் சொல்லி இருந்தான் கவின். இதில் இந்த கல்யாணம்???

“என்னாச்சுடா?” அவள் முக மாற்றத்தைப் பார்த்து கேட்டான் கவின்.

“அது… அது, அத்தையும் மாமாவும், தப்பா எடுத்துகிடாதிங்க, குறை சொல்றதா இல்ல, ஆனா அவங்களுக்கு எங்கள பிடிக்காதுதான, நானே அவங்க இஷ்டம் இல்லாம உள்ள வந்து இருக்கேன், இதுல மிர்னா, அவள எப்படி ஒத்துப்பாங்க?

ஒரு மகன் கல்யாணம்தான் அத்தை மாமவுக்கு பிடிக்காத கல்யாணமாகிட்டு, அடுத்த மருமகளாவது அவங்களுக்கு பிடிச்சவங்களா வரனுமே,

அத்தை மாமாவுக்கு பெண் குழந்தைங்க வேற இல்ல, எப்படியும் வயதான காலத்தில பொண்ணுங்க மட்டுமே செய்ய முடியுற சில ஹெல்ப் தேவைபடும்,

மகளும் இல்லனா, மருமகள்தான அதெல்லாம் செய்ய முடியும், அதுக்காகவாவது அவங்களுக்கு பிடிச்ச மாதிரி ஒரு மருமகளாவது வரனுமே,

அதோட என் அம்மா அப்பா கூட…” வேரி தவிக்க தயங்க சொல்லிக் கொண்டிருக்க,

பாசமாய் ஆசையாய் அதுவரை பார்த்துக்கொண்டிருந்தவன் முகம் இறுகியது.

“ஆன், அவங்க செய்தது ரொம்ப பெரிய தப்புதான், நான் நியாயபடுத்தல, ஆனா எது எப்படியோ, நான் அவங்களுக்கு இல்லனு ஆகிட்டு, அவங்களுக்கும் முதுமை வரும், படுக்கைல விழுந்தாங்கன்னா பார்த்துக்க மிர்னா மட்டுமாவது மிச்சமிருக்கனுமே” அவள் சொல்லி முடிக்க,

அவன் முகம் கனிந்திருந்தது.

“இங்க உங்க தம்பிய கல்யாணம் செய்து மிர்னாவை கூட்டி வந்துட்டு அப்பா அம்மா கூட சேர கூடாதுன்னுட்டா? ஆனா மிர்னாவுக்கும் உங்க தம்பிக்கும் இஷ்டம்ங்கிறீங்க அதுவும் நடக்கனுமே”

அவனது இரு கை ஆட் காட்டி விரலையும் தன் இரு கைகளாலும் பிடித்து வைத்துக்கொண்டு,

சற்றே முகம் சுருங்க அத்தனை பேரின் நன்மைக்காகவும் அவள் பேசிக்கொண்டிருக்க,

அருகிலிருந்தவன் மனம் அவள் புறமாக பலமாக சரிய,

அவன் விரல்களை பற்றி இருந்த அவள் இரு கைகளையும் தன் மற்ற விரல்களால் பிடித்தவன் அவளை தன் புறமாக மென்மையாக இழுத்தான்.

இதை எதிர்பாராதவள் மெத்தென அவன் மார்பில் வந்து விழ, மெல்ல அவளை அணைத்தவன், அவன் முகம் நோக்கி சிறு மிரட்சியோடு விரிந்திருந்த அவள் கண்களில் இதழ் பதித்தான்.

பாசமாக தொடங்கியதுதான்,

அவன் பிடி இறுகியது.

மீண்டுமாய் அவள் முகம் நோக்கி குனிந்தவன் கண்ணில் மட்டுமல்ல கருத்திலும் பட்டது அவள் கண்கள்.

இன்று காலை போல் இறுக்கி மூடி இருந்தாள். மூடிய இமைகள் துடித்துக் கொண்டிருந்தன.

மெல்ல அவளை தன்னை விட்டு விலக்கினான்.

“சாரி” அவன் சொல்ல இல்லை என்பதுபோல் இட வலமாக தலையாட்டினாள் வேரி.

“நீ இப்படியே லைஃபை கன்டின்யூ செய்யலாம்னு நினைக்கிற, ஆனா எனக்கு நீ முழுசா வேணும் குல்ஸ்” சொல்லியவன் மன கண்களில் அவள் முந்திய இரவு தரையில் படுத்திருந்த காட்சி.

தன் இறுக்கையில் போய் அமர்ந்துகொண்டான்.

முழுதாகவா?? உண்மை தெரிந்தால்??

வியனின் நண்பன் ரஜத்தின் வீடை இவர்கள் அடையும் போது வாசலில் நின்றிருந்தனர் வீட்டில் இருந்த அனைவருமே.

அவர்கள் இவர்களை வரவேற்ற விதத்தில் ஒன்று தெரிந்துவிட்டது மிர்னாவிற்கு. இவர்கள் வீட்டில் தங்கி இருக்க நேரிட்டால் அந்த காலம் நிச்சயமாக கஷ்டமானதாக இராது அவளுக்கு.

ரஜத்தின் மனைவி ப்ரிஸில்லா மிர்னாவை விட சில வயது மூத்தவளாக இருக்க வேண்டும். ஏறத்தாழ ஒத்த வயது, இயல்பான நட்பும், வாய் ஓயாத பேச்சுமாய் இருந்தவளை மிர்னாவுக்கு பிடித்ததில் ஆச்சர்யமில்லை.

ரஜத்தின் அன்னையைப் பார்க்க மட்டும் கொஞ்சம் பயமாக உணர்ந்தாள்.

தன் பாட்டி வயது அவர்களுக்கு இருக்கும் என்று தோன்றியது. ரஜத் வெகு நாள் கழித்து பிறந்த மகனோ?

தன் பாட்டியை பார்த்து இயற்கையாக முதியவர்கள் பால் ஒரு சிறு அச்சம் அவளுக்கு. எதற்கு கோபப்படுவார்களோ என்ற ஒரு எண்ணம்.

ஆனால் அவரோ அவள் வாசல் தாண்டி வரவேற்பறையை அடைந்ததும்

“கொச்சு மோளே” என்று இவள் கை பிடித்து தன் அருகில் நிறுத்தியவர்

“என்ட ஏசுவே எந்த தீங்கண் வன்கண் பொறாமை கெட்ட எண்ணம் எதுவும் மோள தொடாம உங்க ரத்தத்தால மூடி பாதுகாத்துகனும்” என்று தமிழிலும் மலையாளத்திலுமாக ஜெபித்துவிட்டு அவளது நெற்றியில் முத்தமிட்டார்.

இத்தனை நேரம் ஒருவர் கூட தன்னை தன்னவராக உணர்ந்து உரிமையுடன் பாராட்டவில்லை என்று அவள் மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்த ஒரு ஏக்கம் அணைந்தது அந்நொடி.

அடுத்த பக்கம்