ஃபார்மாலிட்டீஸ் ப்ரோஷீஜர்ஸ் எல்லாம் முடிந்த நேரம் வியனின் நண்பன் ரஜத் அவர்களை அழைத்துச் செல்ல வந்து சேர்ந்தான்.
வியனின் நண்பன் என்றாலும் ரஜத் அவனை விட சில வருடங்கள் மூத்தவனாக இருப்பான் என்று பட்டது மிர்னாவிற்கு.
ரஜத் தன்னை அறிமுக படுத்திக்கொண்ட விதமும் அவன் பாச பார்வையும் பழக்கத்தின் பாங்கும் அண்ணா என் அவனை அழைக்க வைத்தது மிர்னாவை.
ரஜத்தின் காரில் பின்கதவை இவளுக்காக திறந்துவிட்டான் வியன்.
ஹேய், இது அழுவினி ஆட்டம் பி.கே ,நீ ரெடி ஸ்டெடி ஒன் டூ த்ரீ ஒன்னுமே சொல்லலை, சோ இந்த கேம் கணக்கில கிடையாது, இன்னும் நான் 98 நீ லவ் தான், சேம் ஸ்கோர், யார்ட்ட?
சீட்டில் ஏறியபடி மிர்னா இதைத்தான் மனதிற்குள் பேசிக் கொண்டிருந்தாள்.
அவளைத் தொடர்ந்து வியனும் பின் சீட்டில் அமர ஹேய் அப்படின்னா நான் தான் ஃபர்ஸ்ட் உள்ள ஏறினேன், நீ தோத்துட்ட, சோ என் ஸ்கோர் 99 நீ லவ், அடுத்து சென்ஞ்சுரிக்கான கேம் ரொம்ப ஸ்பெஷலா இருக்கனுமே என்ன வைக்கலாம்?. தீவிரமாக சிந்திக்க தொடங்கினாள்.
“அண்ணி உங்ககிட்ட பேசனும்னு சொன்னாங்க, நீங்க ஃப்ரீ ஆனதும் கூப்பிடுறேன்னு சொன்னேன், பேசுறீங்களா மிர்னா?”
வியன் பேச்சில் தன் அதி முக்கிய யோசனையை பாதியில் விட்டுவிட்டு அவனை ஒரு பார்வை பார்த்தவள் அவன் மொபைலுக்காக கை நீட்டினாள்.
இவன் எப்பொழுது ஒருமைக்கு வருவான்? பின் எப்போது மரியாதை பன்மைக்கு தாவுவான்? ஏன்?
வியன் கவினின் எண்ணைத்தான் அழைத்தான். கவின் சில நிமிடம் வியனிடம் பேசிய பின்பு மொபைல்ஸ் சகோதரிகள் கைகளுக்கு இடம் மாறியது.
“ஏய்!!! மிர்னா,கங்ராஷுலேஷன்ஸ்”
“தேங்க்ஸ் வேரு, நீ எப்படி இருக்க?”
“ம்”
“அப்படின்னா என்ன அர்த்தம்? “
“ம்”
“கவின் பக்கத்துல இருக்காங்களா?”
“ம்”
“ஃபோனை அவங்கட்ட குடு, நான் பேசிக்கிறேன்”
“ஐயோ!! வேண்டாம், பாவம் அவங்க, எதாவது சொல்லிராத”
“ஹை, இது எப்ப இருந்து?”
“…“
“வியன் சொன்னப்ப கூட நம்பவே முடியலை”
“…”
“ஒரு வேளை உன்னை மிரட்டி இப்படி பேச சொல்றாங்களோ? நான் இப்பவே அங்க வந்து உன்னை கூட்டிட்டு வந்துடுறேன்”
“ஐயோ!!! வேண்டாம், நான் நல்லாத்தான் இருக்கேன்”
“முதல் தடவை உன்ட்ட இருந்து இதை கேட்கிறேன், ஆக கவின் ஒரு மந்திரவாதின்னு. தெரிஞ்சு போச்சு”
வேரி மெல்ல திரும்பி அருகிலிருந்த கவினின் முகத்தைப் பார்த்தாள். இருவரும் அவனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தனர். அவன் முகத்தில் இளம் புன்னகை. இவளை ரசனையோடு பார்த்துக் கொண்டிருந்தான்.
இவன் மந்திரவாதி போலவா இருக்கிறான்? எதிர் புறம் திரும்பிக்கொண்டாள் வேரி.
“இல்ல மிர்னா, அவங்கள பத்தி நீ தப்பா புரிஞ்சு வச்சுருக்க, அவங்க நல்ல டைப்தான” சிறு குரலில் சொன்னாள்.
மிர்னாவிற்கு கேட்க வேண்டும் அதே நேரம் கவினுக்கு கேட்க கூடாதே என்ற ஒரு தவிப்பு அவளுள்.
“அதெப்டி ஒரே நாள்ல உனக்கு தெரிஞ்சிட்டாம்?”
“இரெண்டு நாள் ஆச்சே !!!”
“ஹப்பா, எவ்ளவு நாள் ஆச்சு, இது ரொம்ப ஜாஸ்திதான் ஒத்துகிறேன்பா”
“போ மிர்னா, நீ கிண்டல் பண்ற, இதுல உன்ட்ட சொல்ல வந்த விஷயமே மறந்து போயிடும்” சிணுங்கினாள் வேரி.
“சரிப்பா சொல்லு,”
“அது வந்து சாரி மிர்னா, நான் உன்னை கூட இவ்ளவு நாளா நம்பலையோன்னு இப்ப தோணுது, நீ எல்லாத்தையும் என்ட்ட மனம் விட்டு பேசி இருக்க, நான் எதையும் உன்ட்ட சொல்லலை”
“ஹேய், என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை? இப்படில்லாம் பேசினா பேசுறது வேரின்னு நான் எப்படி நம்ப?”
“ப்ளீஸ் மிர்னா, பேசவிடு என்னை, இல்லனா எனக்கு ஃப்ளோ போய்டும்”
“சரிங்க மேடம் சொல்லுங்க”