என்னைத் தந்தேன் வேரோடு 6 (6)

வியனிடம் இதை சொன்னபோது அவன் முதல் கட்டத்தையே மறுத்தான்.

இந்த இரவில் நேரடியாக அறிமுகமில்லாதவர் வீட்டை தேடி கண்டு பிடித்து தட்டவேண்டாம்.

காலையில் பார்த்துக்கொள்ளலாம், இப்பொழுது அருகிலிருக்கும் ஹோட்டலில் தங்குவோம் என்றான்.

அங்கு அடுத்த அடுத்த அறை எடுத்தான். அவள் அறைக்குள் நுழைந்து உள்ளே பூட்டிக்கொள்வதை உறுதி செய்யும் வரை தன் அறை வாசலில் நின்றவன்,

”குட் நைட்”  என்றபடி விடை பெற்றான்.

காலை உணவு இருவரும் இணைந்து உள்ளிருந்த ரெஸ்டரண்டில் சாப்பிட்டனர். அப்பொழுது அவன் தன் திட்டத்தை தெரிவித்தான்.

தகுதி சுற்று முடியும் வரை தன் நண்பன் ரஜத் வீட்டில் தங்கலாம் என்றான் வியன். அந்த ரஜத் தன் மனைவி குழந்தை தாய் என குடும்பமாக வசிப்பதாக சொல்ல மிர்னாவிற்கும் சம்மதமாக பட்டது.

காரணம் முழு விஷயமும் தெரிந்தால் ரஞ்சனி மிர்னாவை எப்படி புரிந்து கொள்வார் என தெரியவில்லை.

செய்வது தப்பில்லை எனினும் விஷயம் சொல்லாமல் அவர்கள் வீட்டில் தங்குவது அவளுக்கு  மனதிற்கு உறுத்தலாக இருக்கிறது.

ஆனால் இங்கு அந்த ப்ரச்சனை இல்லை. ரஜத்திற்கும் அவன் வீட்டினருக்கும் விஷயம் தெரியுமாம்.

கிளம்பிச்சென்று அனுத்திகா வீட்டிலிருந்து அவளது உடைமைகளை எடுத்துவர வியனுடன் இவள் சென்றாள்.

தொடர்பு முகவரியாக அனுத்திகாவின் வீட்டு முகவரியே விளையாட்டு போட்டிக்கான அப்ளிகேஷனில் கொடுத்து இருந்ததால்,

இந்தியன் ஒலிம்பிக் கமிட்டியிலிருந்து தகுதி போட்டியில் கலந்து கொள்ளும் இவளுக்கான அனுமதி கடிதம் அங்கு தான் வந்திருந்தது.

ஆனால் சில தினங்கள் முன்பு மற்றொரு கடிதம் ஒலிம்பிக் கமிட்டியிலிருந்து இவளுக்கு வந்திருந்தது. அதை பிரிக்காமல் இவளுக்காக வைத்திருந்தாள் அனுத்திகா.

அதையும் தன் உடைமைகளுடன் பெற்று கொண்டவள் கிளம்ப எத்தனிக்க,

“அத முதல்ல பாருங்க மிர்னா” என வியன் சொன்ன காரணத்திற்காக பிரித்துப் பார்த்தாள்.

வியனை இயல்பாக அனுத்திகாவிடமோ அவளது அம்மாவிடமோ அறிமுக படுத்த முடியவில்லை மிர்னாவால். என்னவென்று சொல்வாள்? என்ன நினைப்பார்கள்? அதனால் கிளம்புவதில் குறியாக இருந்தாள் அவள்.

அவன் சொன்னதற்காக பிரித்தால் அது தெரிவித்த தகவலில் அஸ்திவாரம் ஆடியது மிர்னாவிற்கு,

ந்த கடிதம் நடக்கவிருக்கும் தகுதிப்போட்டி சில பலகாரணங்களால் முன்பு அறிவித்த  நாளுக்கு முன்னதாகவே நடத்தபட இருப்பதாக அறிவித்தது. அதாவது இன்று.

அங்கு போட்டிகள் நடந்து கொண்டிருக்கிறது. இவள் இங்கு நின்று கொண்டிருக்கிறாள்.

இந்த முறை தவறவிட்டால் இன்னும் 4 வருடம் காத்திருக்க வேண்டும்.

இவள் சூழல் அதற்கு சம்மதிக்காது.

எத்தனை முயற்சி, போராட்டம், இழப்பு எல்லாம் சந்தித்து இங்கு வந்தால், இப்படியா? இதற்காகவா?

எதற்கும் சோர்ந்து போவது மிர்னாவிற்கு பிடிக்காது. ஆனால் இதற்கு எப்படி உணர வேண்டும் என புரியவில்லை.

அவள் முகபாவத்தைப் பார்த்த வியன் அவசரமாக அதை வாங்கிப் பார்த்தான்.

“ஜெனரலா ஒரு ஈவென்ட்க்கு எவ்ளவு நேரம் லேட்டா போக பெர்மிஷன் உண்டு?”

அஸ் பெர் த புக் 30மினிட்ஸ் என இவள் கேள்விபட்ட ஞாபகம். அது உறுதியான தகவலா என்று கூட தெரியாது.

சொன்னாள்.

அதுவும் முக்கால் மணி நேரத்திற்குள் இவர்கள் ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் சென்று அங்கு குறிப்பிட்ட அந்த அலுவலகர்களை சந்தித்து?

நடைமுறையில் டெல்லி ட்ராஃபிக்கில் சாத்தியமில்லாத ஒன்று. நெவர்.

“வா மிர்னா” .இவளை இழுத்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தான் வியன்.

தோளில் மாட்டி இருந்த பேக்கை விட கனத்தது இவள் மனது.

“ஹவ் ஃபெய்த்,  ப்ரே, நீ விளையாடுறது கடவுளுக்கு விருப்பம்னா அவர் அதுக்கு வழி திறப்பார்” சொல்லிக்கொண்டே அவன் லிஃப்டிற்குள் இவளை இழுக்க,

இழுத்த இழுப்பிற்கு உள்ளே வந்தவள் மனம் சமநிலைக்கு வந்தது,

இவள் விளையாடுவது கடவுளுக்கு விருப்பம் எனில் இந்த போட்டியில் கலந்து கொள்ள அவர் எப்படியும் வழி செய்வார். அது அவரால் முடியும்.

அவருக்கே – இவளுக்காக இறந்த அவருக்கே- அதில் விருப்பம் இல்லை எனில் இந்த வாய்ப்பு இவளுக்கு கிடைக்காமல் போவதே இவளுக்கு நல்லதாக இருக்கும்.

அதன்பின் அவள் தவித்து துடிக்கவில்லை.

அந்த அப்பார்ட் மென்டைவிட்டு கேட்டை தாண்டி வெளியே  ஓடி வந்தார்கள்.

அடுத்த பக்கம்