என்னைத் தந்தேன் வேரோடு 6 (5)

இடையிடையே அவன் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசிக்கொண்டாலும் எதுவும் இவள் காதில் விழவில்லை.

வழியில் உணவு, மதுரையில் உடனடி தேவைக்கு என ஒரு குட்டி ஷாப்பிங் எல்லாம் முடித்து விமானநிலையம் அடைய மதியமாகிற்று.

இவளிடம் “3.15க்கு ஃப்ளைட்” என்றவன்,

டாக்ஸியை செட்டில் செய்து அனுப்பியது கூட அவளுக்கு உறுத்தவில்லை. திரும்பும் போது வேறு கார் எடுத்துக்கொள்வானாக இருக்கும் என எண்ணிக் கொண்டாள்.

ஆனால் ஏர்போர்ட்டில் அவளோடு சேர்ந்து வியனும் செக்கின் செய்தபோது மிரண்டு போனாள்.

தன் மொபைலிலிருந்த டிக்கெட்டின் மெயில் காபியை காண்பித்து அவன் இருவருக்குமாக போர்டிங்க் பாஸ் வாங்க இவள் பதறினாள்.

“என்ன ஆச்சு வியன்? நீங்க ஏன் டெல்லிக்கு வர்றீங்க? எனக்காகவா? உங்களுக்குன்னு அங்க எதாவது வேலை இருந்தா வாங்க, இல்லனா எனக்காகன்னா தேவை இல்லாம இதுக்குன்னு அலையாதீங்க” கெஞ்சலாய் தடுத்தாள்.

ஏற்கனவே வீட்டோடு இத்தனை சண்டை என ஆன பின் இன்னும் அவன் இவளோடு வந்து கொண்டிருந்தான் எனில், அவன் வீட்டோடான பிளவு அவனுக்கு பெரிதாகிக் கொண்டே போகுமே என பெரும் தவிப்பு மிர்னாவுக்கு.

ஆனால் அவனோ, “ஏன் உனக்கும் நான் வேண்டாமோ?”  என்றான் இவள் கண்களைப் பார்த்து வெகு அழுத்தமாய்.

அவ்வளவுதான் அந்த ஒரு கேள்வியில் மிர்னா அந்த பேச்சை முழுதாக நிறுத்திவிட்டாள்.

இவன் திட்டம் என்ன?

அவன் வர வேண்டாம் என அறிவு ஆர்ப்பாட்டம் செய்தாலும் மனம் அவன் வருகையால் மேக கூட்டத்திற்கு மேலாக மிதந்தது.

மதுரையில் காத்திருந்த நேரத்திலும், மற்றும் சென்னை விமான நிலையத்தில் காத்திருந்த வேளையிலும், ஏன் உணவு உண்ட நேரத்திலும், பலருடனும் அலைபேசியில் பேசுவதிலேயே அவன் நேரம் செல்ல,

அவன் பேசிய பாஷை மிர்னாவுக்கு அரை குறையாய் புரிய,

ஸ்பானிஷ் போன்ற அந்த மொழி போர்ச்சுகீஸ் என புரியவில்லை எனினும் அவன் பேசும் விஷயங்கள் அவன் பிஸினஸை ஹாண்ட் ஓவர் செய்வதை பற்றியோ என புரிந்து மனதை கலக்கியது.

நடந்த விஷயங்களில் அவன் பெற்றோருக்கு மகன் மீது நம்பிக்கை என்பது இவளுக்கு தெளிவாக புரிந்தது. அப்படி இருக்க ஊர்காரர்களுக்காக கொடுத்த வாக்குறுதியை இவ்வளவு ஸ்ட்ரிக்ட்டாக பின்பற்றுவார்களா??

இவனுக்கு அவன் பெற்றோர் கொடுத்த எல்லாத்தையும் இவன் திருப்பி கொடுக்கவேண்டுமா? அப்படியானால் இனி இவன் நிலை???

ஆனால் அவனிடமிருந்த அமைதி அவனுக்குள் இதைப் பற்றி ஏதோ திட்டமிருக்கும் என்று ஒரு அரை ஆறுதலை தர, இதுவரை வந்த தெய்வம் இனியும் வரும் என்ற நினைவு முழு சமாதானம் செய்வித்தது.

விமானத்தில் இவளுக்கு ஜன்னலோரம். அடுத்து அவன்.

அமர்ந்ததும் தூங்கிப்போனான் அவன். முந்திய இரவு தூங்காதது காரணம் என அவளுக்கு புரிந்தது. ஆனாலும்  உறக்கத்திற்குள் செல்ல இவள் மனம் இவளை அனுமதிக்கவே இல்லை.

மேகத்தை பார்க்காமல் இவன் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தாள் பெண்.

இவன் மனதில் என்ன? இவள் மீது இவன் அக்கறை காட்டுவது எதனால்? காதலா?

இல்லை இவை எல்லாம் இவன் குடும்பத்தால் இவளுக்கு ஏற்பட்ட இழப்பை சரிகட்ட செய்யும் செயல்களா?

அவர்கள் ஒன்றும் பெரும் பாவம் செய்து இவள் வாழ்வை சீரழிக்கவில்லையே, அனைத்து தவறுக்கும் காரணம் இவள் பெற்றோர் மட்டுமே அல்லவா? .பின் இவன் ஏன் சிலுவை சுமக்கிறான்??

டெல்லி ஏர்போர்ட்டிலிருந்து அவர்கள் வெளியே வந்த நேரம் இரவு.

தன் ஃப்ரெண்ட் வென்யாவின் கசின் அனுத்திகா வீட்டில் வரும் தகுதிப்போட்டி முடியும் வரை தங்குவதாக திட்டம் மிர்னாவிற்கு.

அங்குதான் தன் பொருள்களை முன்னேற்பாடாக அனுப்பி இருந்தாள்.

அனுத்திகாவின் தாய் ரஞ்சனி ஒரு மருத்துவர். தன்  மகளோடு மருத்துவமனைக்கு அருகிலேயே தங்கி இருந்தார். அனுத்திகாவின் தகப்பனார் தற்சமயம் உயிரோடு இல்லை.

ரஞ்சனியிடம் பேசி மிர்னா தங்க ஏற்பாடு செய்ததெல்லாம் வென்யாவும் அனுத்திகாவும் தான்.

இந்த மிர்னா கல்யாண கதை, தப்பித்து வரும் காதை எதுவும் ரஞ்சனிக்கு தெரியாது.

போட்டிக்காக தனியாக வருகிறாள். தங்க பாதுகாப்பான இடம் வேண்டும். போட்டி முடிந்ததும்  போய்விடுவாள். இப்படித்தான் மிர்னா பற்றி ரஞ்சனியிடம் சொல்லி இருந்தனர்.

இதற்குள் அனுத்திகா தன் தோழி ரொமோனா மூலமாக ரெமோனாவின் தந்தைக்கு சொந்தமான பள்ளியில் ஆசிரியை பணிக்கு சொல்லி வைத்திருந்தாள்.

பயிற்சி செய்ய விளையாட்டு திடலோடு ஒரு வேலை. அந்த வேலை கிடைத்தால்  திட்டமெல்லாம் சொதப்பலின்றி செல்லும் என்ற நம்பிக்கை மிர்னாவிற்கு.

அந்த வேலை இல்லை எனினும் அதே போல் வேலை தேடிக்கொள்ளலாம் என்ற உறுதியும் அவளிடம் இருந்தது.

அடுத்த பக்கம்