என்னைத் தந்தேன் வேரோடு 5 (6)

சற்று நேரத்தில் அந்த இரைச்சலும்,  அவள் திரும்பிய பக்கமெல்லாம் பார்வை மறைத்த அந்த இயந்திர சூழலும் தலை சுற்ற வைத்தது.

இயந்திரத்தோடு இயந்திரமாய் தனிமையாய் உணர்ந்தாள்.

தேடிய கண்களுக்கு அருகிலிருந்த இரும்பு படிகட்டுகளும் அதன் முடிவில் முதல் தள உயரத்தில் இருந்த அந்த அறையும், அதில் எழுதி இருந்த எம்.டி என்ற எழுத்தும் தெரிய,

எதோ அவளுக்கு மிகவும் பரிட்சயமான ஒன்றை பார்த்துவிட்ட மகிழ்வுடன் படியேறி அறைகதவை தள்ளினாள்.

திறந்தது.

ள்ளே சென்றால் பார்வையில் பட்டது கவின் சத்யா எம்.டி என்ற பெயர் பலகை.

அதுவரை தோன்றிய தனிமை ப்ளஸ் வெறுமை காரணமாக இப்போது இந்த பெயரே மிகவும் சொந்தமான ஒன்றாக தோன்றியது போலும்.

அவனது இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டாள்.

மேஜை மீது ஒரு ஃபைல் இருந்தது. அதை திறந்து வாசிக்க ஆரம்பித்தாள்.

இத்தாலியுள்ள ஒரு நிறுவனத்துடனான தொழில் தொடர்பு பற்றிய ஃபைல் அது.

பல தரபட்ட ஆடைகள் ஏற்றுமதி செய்யபட்டிருந்தன. ஆனால் எல்லா ஆர்டரும் ஆகஸ்ட் செப்டம்பர்  வாக்கில் பெறபட்டவைகள் உட்பட ஃபெப்ரவரி மார்ச்சில் தான் ஏற்றுமதி செய்யபட்டிருந்தன. அதுவும் சொற்ப மார்ஜினில்

‘முட்டாள்’ என்ற விதை மலையளவு பெரிதாக தெரிந்தது இப்பொழுது.

அத்தனை மாதம் வேலை செய்து இவ்வளவு குறைவான மார்ஜினில் விற்பனை செய்தால் என்ன லாபம் வரும்?

எரிச்சலும் வலியும் மனதில் எழும்ப கடமைக்காய் இன்னும் பக்கங்களை புரட்டினாள்.

“எதாவது ஏமாந்தவன் கிடச்சாதான இவளுக்கு கல்யாணம், இவள் அவ்வப்போது கேட்டு வளர்ந்த வார்த்தை ஞாபகம் வர கண்ணில் அதுவாக நீர்கட்டியது.

மனம் ஒரு நிலையில் இல்லை. எழுந்து கேபினை விட்டு வெளியில் வந்தாள். அதே நேரம் அவள் முன் வந்து நின்றான் ஒருவன்.

காக்கி யூனிஃபார்மில் முறுக்கு மீசையுடன்.

“ஏய், யார் நீ? எம் டி ரூம்ல உனக்கென்ன வேலை? உள்ள இருந்து என்னத திருடுன?” பெரிதாய் அதட்டினான்.

செய்யாத தப்பிற்கு குற்றம் சுமத்தியவுடன் கொதிக்க இவளென்ன மிர்னாவா?

என்ன பார்க்க திருடி மாதிரியா இருக்குது? எம்.டி வைஃப்னு தெரியலனாலும் அவ்வளவு கேவலமாவா இருக்கேன்? மனம் இப்படி ஓட,

இவளுக்கு சுய இரக்கமும் அதோடு சேர்ந்து அழுகையும் வந்தது.

“ஏய்,என்ன மாட்டிகிட்டவுடனே டிராமாவா? என்ன எடுத்த காமி” மிரட்டியவன் இப்பொழுது அவளை பிடித்து வேகமாக கேபின் சுவரில் சாய்த்தான்,

“சொல்லு?”

“ஏய், விடு அவளை”  வேகமாக ஓடி வந்தான் கவின்.

அவன் முக தவிப்பை பார்த்த வேரிக்கு இன்னுமாய் அழுகைதான் வந்தது.

“இல்ல சார், ரூமுக்குள்ள இருந்து வந்தாங்க இவங்க” இதற்குள் கவின் இவளை அடைந்திருந்தவன் அவளை அரவணைப்பாய் தன்னோடு சேர்த்தான்.

“நான் இவங்க வைஃப்”  மெல்லியதாய் வந்தது அவள் வார்த்தை,

அவ்வளவுதான்

“ஐயோ அம்மா, நீங்க ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்ல,யாரும் நீங்க இன்னைக்கு இங்க வாரீங்கன்னு சொல்லலையே, பெரிய மனசு பண்ணி மன்னிச்சிடுங்க” அந்த காக்கி உடைக்காரர் அலற

“பரவாயில்ல” என இவள் தொடங்கும் போதே,

“டியூட்டி நேரத்துல எங்க போனீங்க, இங்க வாசல்ல தான உட்கார்ந்து இருக்கனும்? உள்ளபோறப்ப பார்க்காம வெளிய வந்த பிறகு பிடிச்சு வச்சுகிட்டு, உள்ள வாங்க”

அந்த மீசைக்காரரை கேட்ட கவின், இவளை அப்படியே அறைக்குள் அழைத்துச்சென்றான்.

வேடிக்கை பார்த்த இரண்டு மூன்று பேர் கலைந்து சென்றனர்.

“சார், தப்புதான் சார், எனக்கு இது உங்க வீட்டம்மான்னு தெரியலை சார், அதுக்காக எதுவும் செய்துடாதீங்க சார், மூனு பிள்ளைங்களுக்கு ஃபீஸ் கெட்டனும் சார்” கெஞ்சியபடியே உள்ளே வந்தான் அந்த நபர்.

“ராஜுண்ணே, நான் அதுக்காக செய்யலை, டூட்டி நேரத்துல வேலையவிட்டுட்டு போனது உங்க தப்புதான?  இன்னைக்கு உங்களை சும்மா விட்டா, நாளைக்கு மத்தவங்களும் இப்படியே செய்வாங்கல்ல? அதான் மெமோ, சம்பளத்துல இரநூறு ரூபா கட் பண்ணுவாங்க”  கவின் முடிவு சொல்ல,

அவன் சொல்வதில் நியாயம் இருந்தாலும் வேரிக்கு மனம் ஒப்பவில்லை.

“ஐயா” என்று கெஞ்சிய அந்த ராஜுவின் குரல் இன்னுமாய் மனதை பிசைந்தது.

“நம்ம எஜுகேஷன் ட்ரஸ்ட்ல போய் அப்ளிகேஷன் குடுங்க, ஃபீஸுக்கு லோன் சாங்க்ஷன் செய்ய சொல்றேன்” என்றபடி கவின் இப்போது அவன் இருக்கையில் அமர்ந்து, அவன் மேஜை ட்ராயரை குனிந்து திறந்தான்.

“சார் ரொம்ப நன்றிங்க சார்”  ராஜு இப்போது வெகுவாக குளிர்ந்து போனான் போலும்,

அவன் திரும்பிச் செல்ல துவங்க,  ஒரு வெள்ளை கவரில் சில  ரூபாய் நோட்டுகளை எடுத்து வைத்த கவின் வேரி கையில் கொடுத்தான்,

“ராஜுண்ணா, என் வைஃப் உங்களுக்கு எதோ தரனுமாம்” கவின் சொல்ல,

சட்டென விஷயம் புரிந்து அந்த ராஜுவிடம் அந்த கவரை நீட்டினாள் வேரி,

“எங்க கல்யாணத்துக்காக” பலமாய் நன்றி சொல்லிவிட்டு போனார் அந்த ராஜூண்ணா.

அடுத்த பக்கம்