என்னைத் தந்தேன் வேரோடு 5 (4)

“ஊர்ல நல்லது கெட்டதுல உன் வீட்டு ஆட்களுக்கு இனி இடம் கிடையாது” ஊர்ப்பேச்சு பிரளயம் பிழையின்றி தொடர்ந்தது

திரும்பி தந்தை முகம் பார்த்தான் மகன்.

மனோகரின் தவிப்பு மிர்னாவுக்கும் புரியாமல் இல்லை.

“ நீங்க சொல்ற காரணத்தை ஏத்துகிறது என் தலைமுறைக்கே அவமானம், அதுக்கு  ஒரு நாளும் நான் சம்மதிக்க மாட்டேன்” ஆணித்தரமாக சுற்றி இருந்தவர்களிடம்  சொல்லிய வியன் இவளிடமாக திரும்பி,

“உள்ள போய் டிரஸ் மாத்து நாம கிளம்புறோம்” என்றான். அத்தனை அழுத்தம் அக்குரலில்.

அவனின் அடுத்த பரிமாணம்.

அவன் குரலின் தீவிரம் அவளை உள்ளறை செலுத்தி உட் தாழிட வைத்தது. இரண்டாம் நிமிடம் சல்வாரில் இருந்தாள்.

வெளி வந்தவள் கரத்தை அழுத்திப் பிடித்தான். அதிலிருந்த உரிமை மொழி பெண்மைக்குள் உலகோடு இருந்த சில கட்டுகளை உடைத்து அவனோடு ஒன்றாக ஒட்டி கட்டியது.

“உன் சர்டிஃபிகேட்ஸை எடுத்துகிட்டியா?”

சம்மதமான அவள் தலையாட்டலின் பின், அவளை தன்னோடு சேர்த்து நடத்தியபடி கூட்டத்தின் முன் வந்தான்.

“நேத்து நைட் இரண்டு பெரும் சேர்ந்து இருந்திருக்கீங்க, அது தப்பு இல்லையா? தப்பான எண்ணமே இல்லைனு நீங்க சொன்னாலும் கல்யாணம் ஆகாத ஆணும் பொண்ணும் ராத்தங்கிறது சரியா?  நம்ம ஊர்ல அதுக்கு என்ன தண்டணை தெரியுமா?” கூட்டம் அடுத்த குற்றத்தை சுட்டியது.

மிரண்டாள் மிர்னா. இவள் விருப்பத்திற்காக தேவையற்று செய்த செயல்,

“உன் அப்பா வார்த்தை தான் இதுவரை இங்க வேதம்,”

“நீங்களே தப்புக்கு தண்டனை கிடையாதுன்னா?”

“யாரு இனிமே இங்க ஒழுங்கா இருப்பா?”

“இனி இந்த ஊரோட சுத்தம் செத்த பிணம்” தந்தை முகம் பார்த்தான் வியன்.  அவர் கண்களில் வலி.

சுற்றி இருந்தவர்களை பார்த்தான் வியன்,

“ நீங்களா ஒத்துக்ற வரை என் அப்பாட்ட நான் எந்த கொடுக்கல் வாங்கலும் வச்சுகிட மாட்டேன், அதாவது உங்கள பொறுத்தவரைக்கும் என்னை என் அப்பாவைவிட்டு, இந்த ஊரைவிட்டு  ஒதுக்கி வச்சிருக்குது”

“என் அப்பா எப்பவும் ராஜா,அவர் தலை குனிய நான் விட மாட்டேன், அதோட இவ இனியும் இங்க வருவா, தப்பெல்லாம் என் கணக்குலயே இருக்கட்டும்  தண்டணையும் எனக்கு மட்டுமா இருக்கட்டும்”

அரண்டு போனாள் மிர்னா.

“வியன், நீங்க எனக்காக எதெல்லாம்? ஐயோ வேண்டாம் வியன்,

“என் குடும்பம் உன் கனவுக்கு எதிரா வந்ததா இருக்க கூடாது மிர்னா, முதல்ல கவின், இப்போ நான், வேண்டாம், எங்களால நீ வாழ்ந்தன்னு இருக்கனும், அழியகூடாது” அவள் கண்பார்த்து பேசியவன்,

கடைசி வரியில் அவள் உச்சந்தலையில் கைவைக்க,

முதுகெலும்பு மெழுகாக, இவள் திரவமாய். இதயமோ எக்கிரும்பாய். ஜெயிக்க வேண்டும், என ஒரு வெறி பிறந்தது அவளுள்.

 இவள் கனவிற்காய், இவளுக்காய்  எத்தனை பெரிய பலி?

தெய்வமே இந்த உறவிற்கு பெயரென்ன?

அவன் முக தீவிரம் கண்ட கூட்டம் விலகி வழிவிட, இருவரும் நடந்து முற்றம் கடந்தவர்கள் கண் எட்டிய தொலைவு வரை அவர்கள் வந்த டாக்ஸி இல்லை.

இனி?????

தூங்கி எழுந்த வேரி சில நொடி தரையைப் பார்த்திருந்தாள். பின் தான் பயன்படுத்திய அனைத்தையும், மொத்த அறையையும் சுத்த படுத்திவிட்டு குளித்துவிட்டு வர

இன்டர்காம் சிணுங்கியது. அப்பொழுதுதான் அது இருப்பதை கவனித்தவளுக்கு அழைப்பது கவினாய்த்தான் இருக்கும் என தோன்ற எடுக்கலாமா வேண்டாமா என ஒரு சிந்தனைப் போராட்டம்.

முடிவாக அதை எடுக்காமல் சென்று கதவை திறந்து வெளியே வந்தாள்.

“சாப்பிட்டுட்டு தூங்கு“ என்றபடி எதிரில் நின்றான் கவின்.

அலுவலகம் சென்று வந்திருப்பதன் அடையாளம் அவன் உடை உடைமைகளில்.

நிமிர்ந்து முகம் பார்த்தாள்.

சற்று களைத்திருக்கிறானோ?

காலை ரூலரை எடுத்து அவன் நீட்டிய காட்சி காரணம் இன்றி மனதில் வந்து போனது,

“வாங்க சாப்டலாம்” உணவு அறையை நோக்கி நடக்க தொடங்கினாள்.

இவளை ஒரு பார்வை பார்த்தவன், “நீ சாப்டு நான் அப்புறம் வரேன்” என்றுவிட்டு திரும்ப எத்தனித்தான் அவன்.

“இல்ல, சாரி, என்னதான் இருந்தாலும் நான் அடிக்க கை ஓங்குனது தப்பு”  தலை குனிந்து சொன்னவள் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள்.

சிறு முறுவல் அவன் இதழில்.

“அதுக்கு இல்ல, நீ என்ன பார்த்து பயப்படுற, நான் இருந்தா சரியா சாப்டமாட்ட”

“இல்ல சாப்டுவேன்” ,அவள் குரல் உள்ளே போயிருந்தது. பயமில்லை என்று சொன்னால் அது பெரும் பொய். ஆனாலும்,

ஆச்சர்யமாக பார்த்தவன் அவளுடன் உணவு மேஜைக்கு நடந்தான்.

பெரும்பாலும் மௌனமாக கழிந்தாலும் உணவுப் பொழுது மனதிற்கும் உணவிட்டது.

உணவு அவளுக்கு பிடித்தது போல் மித காரமாக, இனிப்புகளும் கடும் இனிப்பாக இல்லாமல் இவளுக்கு பிடித்த விதமாக மென் இனிப்போடு,

எதிரில் அவனும் காரா சாரமாக எதையும் சொல்லாமல் செய்யாமல் அவ்வப்போழுது அவளுக்கு பரிமாறியதோடு மௌனமாக, இதழ் செய்யா புன்னகையுடன்.

மனதிற்குள் காரம் குறைந்து மித உணர்வு. சாப்பாடு விஷயமாவது ரெண்டு பேருக்கும் ஒன்னு போல இருக்குதே!

அடுத்த பக்கம்