என்னைத் தந்தேன் வேரோடு 5 (3)

பார்வையை சுழற்ற விடாமல், முதல் பார்வையையே சிறை பிடித்தது அங்கிருந்த அவ்வூஞ்சல்.

மனம்  மொத்தமாய் சென்று சேர்ந்தது அந்த அறை உயர ஆடும் ஊஞ்சலில்.

விஸ்தாரமான வரவேற்பறையில் கம்பீரமாய் அது

“வாவ், எவ்ளளளளளவு பெரிசு, முழு கண்ணை திறந்து இவள் வியக்க

“ம், நாலு தலமுறைக்கு முன்னாலயே இது இங்க இருக்காம்” ஒரு நொடி இவள் முகம் ரசனையாய் பார்த்தவன், பார்வை விலக்கி ஊஞ்சலைப் பார்த்தான்.

இரண்டு தூண்களை இணைத்தபடி குறுக்காக ஒரு மர உருளை கம்பம். அதிலிருந்து தொங்கிய நான்கு கம்பிகளில் தொங்கியது அந்த ராட்சச ஊஞ்சல்.

“சூப்பரா இருக்குது, நான் ஆடப் போறேனே” குழந்தையின் குதுகலம் அவளுள்.

அதைப் பார்த்து வேகமாக  ஓடியவளின்  கை பற்றி அவசரமாக இழுத்தான். முன்னால் போன வேகத்தில் பின்னால் வந்தவள் கண்ணில்பட்டது அவன் கண்கள்.

ஆள்முழுங்கி, மனதிற்குள் முனங்கிக் கொண்டவள், பிடித்திருந்த அவன் கையை காட்டினாள் கண்களால்.

“மேலே மரம் விலகி இருக்குது.” அவன் காண்பித்த பின்புதான் அதை அவள் கவனித்தாள். கையை விட்டிருந்தான் அவன்.

முன்பு நல்ல நிலையில் இருந்திருக்கும் போலும். இப்பொழுது மேலிருந்த குறுக்கு மரம் அதாவது ஊஞ்சல் தொங்கிக் கொண்டிருந்த மரகம்பம் பக்கவாட்டு தூண் ஒன்றில் சரியாக பொருந்தி இருக்க அடுத்த தூணில் சரிந்து பெயரளவிற்கு அமர்ந்திருந்தது.

என் நேரமும் கீழே விழும்.

சுற்று முற்றும் பார்த்தவன் பின் புறமிருந்து அந்த 8 அடி உயர மர நாற்காலியை எடுத்து வந்தான்.

“ஹே, என்ன பண்றீங்க நீங்க, பார்த்து, மேல போட்டுகிடாதீங்க, இப்படி, இந்த பக்கம்”  அவள் சொல்லச் சொல்ல அதை அந்த ஊஞ்சல் அருகில் கொண்டு வாகாக வைத்தவன்

“மேடம்ஜி ஆக்சிடெண்ட் செய்ததுக்கு பழி வாங்குற எண்ணம் இருந்தா நான் மேல ஏறுனதும் இதை விட்டுடுங்க, ஆக்ஸிடெண்ட்டை விட அதிகமா அடிபடும், அதுக்கு நான் கியாரண்டி”

சொல்லிக் கொண்டே அந்த பழைய நாற்காலியின் மேல் ஏறி நின்றான்.

படு பத்திரமாக அதை பிடித்தபடி நின்றாள் மிர்னா.

ஆனாலும் வயதான அந்த நாற்காலி ஆட்டம் காண்பித்துக் கொண்டே இருந்தது. சில நிமிடங்களில் டம்…டி…டொம் ஒரு கால் உடைந்து நாற்காலி சரிய

“ஹேய், மிர்னு” என்றபடி விழத்தொடங்கிய வியன்,

அவள் மேல் அந்த ராட்சச மர உருவம் விழுந்து விடக்கூடாதே என அவள் இருந்த பக்கமாகவே அவளுக்கும் அந்த நாற்காலிக்கும் இடையிலுமாக குதிக்க முயன்றவன்,

பிடி விலகி குறி தவறி அவள் மீதே சென்று விழ, அவன் மீது விழ வேண்டிய நாற்காலி அருகிலிருந்த ஊஞ்சல் தட்டி சற்று சரிந்த நிலையில் பைசா கோபுரம் போல் நின்றிருந்தது.

முதலில் தரையை தொட்ட மிர்னா மனித இயல்பின் படி தன்னை நோக்கி திடப்பொருள் விழப்பார்த்து கண்மூட, அவள் மீதாக விழ வேண்டிய வியன் கடைசி நொடியில் சுதாரித்ததன் விளைவாக அவள் அருகில் விழுந்தவன்,

அவசரமாக அவளை தனக்குள் இழுத்து மறைத்தான். சரியும் நாற்காலி அவள் மீது விழுந்துவிடக் கூடாதே என்ற தவிப்புதான் காரணம். .

ஒரு நொடி இருவரிடமும் எந்த அசைவும் இல்லை. காரணம் இருவரும் சரிந்து வந்த நாற்காலி தங்கள் மீது விழும் தருணத்தை எதிர்பார்க்க அப்படி எதுவும் நிகழவே இல்லை.

இப்பொழுது எந்த பக்கம் உருண்டால் காயம் படாமல் தப்பிக்கலாம்?.

மெல்ல தலை தூக்கி பார்த்தவன் கண்களின் இட ஓரம் ஷூக்கால்கள். இவர்கள் இருக்கும் கோலம்? அவசர அவசரமாய் எழுந்தான்.

அங்கு நின்றிருந்தது அவனது அப்பா. அருகில் அம்மா.

நிச்சயமாக அவர்களை அங்கு எதிர்பார்க்கவில்லை அவன்.

“அப்பா, நீங்க” அவன் வார்த்தை வெளிப்பட்ட அதே நொடி

“என்னடா நடக்குது இங்க?” அவனது அப்பா மனோகரின் கர்ஜனை வீடு முழுவதும் எதிரொலித்தது.

மிர்னாவுக்கோ நாற்காலி சரியும் என நினைத்து கண்மூடி இருந்தவள் மீது மொத்த பூமியும் வந்து விழுந்தது போல் உணர்வு.

கண்விழித்து துள்ளி எழுந்தவளுக்குள் உணர்ச்சி ப்ரளயம். அவமானம். ரோஷம். உடல் சூழ்நிலையின் கடுமை கண்டு கிடுகிடுவென உணர்ச்சி வேகத்தில் நடுங்க, தன்மானம் அக்கினியாய் அபிஷேகம் அவள் மேல்.

“ஒரு தப்பும் இங்க நடக்கல”உறுமினாள் மிர்னா,

அதே நேரம் “நீங்க நினைக்கிற மாதிரி ஒன்னும் இல்லை” கண்டனமாய் வெளிப்பட்டது வியனின் குரலும்.

“பெரியவன் இன்னைக்கு பொண்ணு மாப்பிள்ளையா மதுரை வீட்ல தங்குவான்னு அத்தனை ஏற்பாடும் செய்திருந்தோம், அலங்காரத்தோட வெற்று வீட்டை பார்க்க கஷ்டமா இருக்குன்னு இங்க வந்தா, என்னடா இது?”

இதை கேட்கும் போது அவன் தந்தை மனோகரின் குரலில் குற்றபடுத்தும் தொனி எதுவும் இல்லை.

“நீ மிர்னிய எங்கயோ கொண்டு போய் விட போயிருக்கிறதால்ல கவின் சொன்னான்?” அவன் அம்மா நீலாவோ பரிதாபமாக கேட்டார்.

“தப்பா ஒன்னுமே இல்லப்பா, அந்த ஊஞ்சலை சரி பன்ண ட்ரை பண்ணினோம், அதுல விழுந்துட்டோம்” வியன் விளக்க,

பெற்றவர்கள் மகனை நம்பினாலும், அதிகமாக கொதித்தது அவன் பெற்றவர்கள் அருகில் இருந்த இன்னும் சிலர்.

அதாவது அந்த ஊர்காரர்கள்.

“இன்னும் என்ன நடக்கனும், அதான் பார்த்தோமே, பட்ட பகல்ல, திறந்த வீட்டுக்குள்ள, கல்யாணம் ஆகாத ரெண்டு பேரு ,தாலி கட்டாம இங்க இருந்து கிளம்ப விட மாட்டோம், அதோட ஊர களங்க படுத்துனதுக்கு தண்டணை கண்டிப்பா சுமக்கனும்,

இந்த ரீதியில் அவர்கள் பேசிக்கொண்டு போக, வீட்டின் முற்றம் உள்ளூர்காரர்களால் நிறைந்து வழிந்தது.

“இங்க எந்த தப்பும் நடக்கலை, தப்பு பண்ணாதவங்களுக்கு தண்டணை கொடுக்குறதுதான் உங்க ஊர் நியாயமா? நான் உங்க ஊரே கிடையாது எனக்கு எப்படி தண்டணை தருவீங்க?” மிர்னா கோபமாக அலறிக்கொண்டு இருந்தாள் அத்தனை பேருக்கும் மேலாக,

“அப்படின்னா, கல்யாணம் வேண்டாம், ஆனா இனிமே இந்த பொண்ணு இந்த ஊருக்குள்ள கால் வைக்க கூடாது,

“ஆனா மனோகரன் மகன் தண்டணை சுமக்கனும்,

“மனோகரா உன்னையும் ஊரையும் களங்கபடுத்துனதுக்கு நீயே உன் மகனுக்கு என்ன தண்டணைனு  சொல்லிடு, எப்படியும் இங்க இருக்கிறதுல நீதான் பெரிய ஆளு, நீ இல்லாம ஊரு ஒன்னும் கிடையாது”

ஊர்காரர்களின் பிடிவாதம் பற்றி அறிந்திருந்த மனோகரன் மௌனமாகிப் போனார்.

அடுத்த பக்கம்