சிலிர்த்தது அவளுக்கு.
சுய நினைவிற்கு வந்தாள். அவள் காலில் விழுந்த ஒரு திரவத்தினால் விழுந்த சிலிர்ப்பு அது.
“தேய்ச்சுகோங்க, ஃபீட் குளிராம இருக்கும். மத்த நேரம்னா உங்க ஐடியாக்கு ஒத்துகிட்டு இருக்க மாட்டேன், இப்ப குளிர் ரொம்ப குறைவா இருக்கிற சீசன்.
அதோட இன்னும் எவ்ளவு தூரத்தில் ரோடு இருக்குன்னு தெரியலை. அதனாலே நைட் இங்கே தங்கிட்டு வெளிச்சம் வந்ததும் காலைல கிளம்பலாம். பாதை கண்டு பிடிக்க வசதியா இருக்கும்”
அவனது நீங்க போங்க என்ற அன்னியமும், பிரிவிற்காய் வழி தேடும் என்னமும் இப்பொழுது இவள் மனதிற்குள் உறுத்துகிறது.
இவள் அவனை தன்னவனாக மனதில் கண்டால் அவனும் அப்படியே உணர வேண்டும் என எதாவது கட்டாயமா என்ன?
அருகில் தீயின் சூடு இதம் தர பார்த்தால் அவன் சுள்ளி சேர்த்து தீயிட்டுக் கொண்டிருந்தான்.
புத்திக்கு இப்பொழுதுதான் உறைக்கிறது சூழல்.
“இதெல்லாம்?” ஆச்சர்யமாகக் கேட்டாள்.
“கார்ல ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் வச்சிருப்பேன், அந்த ஆயில், இந்த மேட்ச் பாக்ஸ் மாதிரி சிலதை அதில இருந்து எடுத்து பாக்கெட்ல போட்டு வந்தேன்,
ஆயின்மெண்ட் இருக்குது, எங்கயாவது காயம் பட்டிருந்த போட்டு கோங்க, என் சாக்ஸை தாரேன் போட்டுகோங்க, என் ஷூஷ் உங்களுக்கு வசதியா இருக்காது”
அவன் விளக்க, என்னதான் விளையாட்டுத்தனம் இருந்தாலும் மிகவும் பொறுப்பானவனும் போலும் என ஆராதித்தது காதல் கொண்ட இவளது மனது.
விளையாட்டுத்தனமா? இடித்தது ஒரு மனது.
அவன் அண்ணன்ட்ட விளையாட நினைத்ததாலதான இந்த பள்ள பிரவேசம்.
மூன் லைட் ஹங்கர், பசிக்கிதுடி மிர்னி, சத்தமிட்டது அவளது மைன்ட் வாய்ஸ்
“ப்ரேயர் பண்ணிட்டு படுங்க, நான் விழிச்சுதான் இருப்பேன், பயப்படவேண்டாம்” அவனோ தூங்க வழி சொன்னான்.
“ம்” தலை அசைத்தாள்.
எப்பொழுது தூங்கினாளோ மீண்டும் விழிப்பு வந்தபோது இன்னும் இருட்டாகவே இருந்தது இடம்.
அருகில் அமர்ந்திருந்த வியன் எதோ ஒரு பாஷையில் படு உற்சாகத்துடன் மொபைலில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தான்.
சத்தம் இவளுக்கு தொந்திரவாகக் கூடாது என மெல்லிய குரல் என்றாலும் உற்சாக ஊற்று.
அருகிலிருந்த சிறு பாறை மேல் அமர்ந்து, பௌர்ணமி நிலவை பின்புலமாக கொண்டு, மிளிர்வில் ஒளிர்ந்த முகத்துடன், அவன் பேசிக் கொண்டிருந்தது மனோரம்யம்.
அப்படியே அவளுக்குள் அலையின்றி நுரையின்றி ஆழ இறங்கியது அக் காட்சி.
அதன் விளைவாய் மூச்சுவிடுவதே கஷ்டமாக தோன்றியது அவளுக்கு.
எழுந்து அமர்ந்தாள்.
அவனும் உடனே பேச்சை முடித்துவிட்டான்.
“தரையில் படுக்க கஷ்டமா இருக்கும்” இவள் எழுந்ததற்கு அவன் காரணம் சொன்னான்.
என்ன பேசவென இவளுக்குத் தெரியவில்லை. ஒரு பிளாஸ்டிக் புன்னகை இவளது பதில்.
இவள் ஏன் இத்தனையாய் இவனுக்குள் விழுந்து கொண்டிருக்கிறாள்?