என்னைத் தந்தேன் வேரோடு 4 (2)

மலர்ந்த முகத்தோடு ஆராய்தலாய் அவளைப் பார்த்துக் கொண்டிருந்த அவன்

இவள் கேள்விக்கு பதிலும் சொன்னான்.

“கல்யாணமே பண்ணிட்டானே, நம்பித்தான் ஆக வேண்டி இருக்குது”

புன்னகைத்துக் கொண்டாள் மிர்னா.

“சரி வாங்க கிளம்புவோம்” அவன் கிளம்ப ஆயத்தமாக,

“இல்ல, வியன் இங்கயே இருக்கலாம்னு தோணுது.”

“என்னாச்சு மிர்னா, கால் வலிக்குதா, ரொம்ப டயர்டா இருக்குதா?”

“இல்ல, ஆனா தோணுது”

அவளை ஒரு பார்வை பார்த்தவன் சம்மதமாய் தலை அசைத்தான்.

கால் முட்டி கட்டி அதில் நாடி பதித்து அமர்ந்தவள் சுய ஆராய்ச்சியில் இறங்கினாள்.

கவின் விரும்பி வேறு மணம் செய்த தகவல் கிடைத்தவுடன் நியாயபடி இவளுக்கு கோபம் வந்திருக்க வேண்டும்.

இவள் விருப்பம் அறியாமல் இந்த திருமண ஏற்பாடுகளை கவின் செய்ய, இவளது அஸ்திவாரம் வரை ஆடிப் போனது அல்லவா? இப்படி தனியாளாக வீட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலைக்கு இவளைக் கொண்டு வந்தது இந்த திருமண ஏற்பாடு தானே!

இப்படி இவள் வாழ்வை தாறுமாறாக்கிவிட்டு, இப்பொழுது இவள் தங்கையைத்தான் எனினும் சில மணிகளில் மனம் மாறி விருப்ப மணம் புரிந்து கொண்டானென்றால் இவளை என்னவாக நினைக்கிறான் அவன்??

ஆனால் வரவேண்டிய கோபம் வரவே இல்லை. அதற்கு பதிலாக வேகமாக வந்த காதலை கண்டு ஆச்சர்யப்படுகிறது பக்கத்தின் இருப்பவனின் பார்வை கண்டு.

இத்தனைக்கும் இதுவரை காதலை பத்தி எதையும் நினைக்கவோ பேசவோ கூட இவளுக்கு பிடிக்காது. வீட்டில் அம்மா அப்பாவின் திருமண வாழ்க்கை போதாதா காதலையும் திருமணத்தையும் வெறுக்க?

ஆனால் இன்று?

மிர்னாவிற்கு எதையும் இழுத்தடித்து பழக்கம் கிடையாது. பொய்க்குப் பின் ஒழியும் கோழைத்தனமும் கிடையாது. அதனால் சட்டென அவள் மனம் தன் காதலை அவளிடம் ஒத்துக் கொண்டது.

மிர்னாவின் மனம் வியன் பின்பாக.

முதல் பார்வையிலேயே அவனை வில்லனாக ஒத்துக்கொள்ள மறுத்த மனம்.

அத்தனை ஆண்களிடமும் அடுக்கடுக்காய் குறைகாணும் இவள் சிந்தை இவனிடம் இன்னும் ஒன்றையும் குறையாக சுட்டவில்லை,ஏன்?

அவன் அருகாமையில் அவள் கருவாய் சுமக்கும் ஒலிம்பிக் கனவு மறந்து போக வேண்டுமென்றால்?

அன்னை தந்தை முன் இயல்பாக இருக்க தயங்குபவள், இவன் முன் தன் தோழிகளின் அருகாமையில் ஆடுவது போல் படு இயல்பாய் இருந்தாளே?

மனதில் நினைப்பதை கூட வார்த்தை மாறாமல் மறைத்து ஒளிக்காமல் இவனிடம் சொல்ல முடியும் இந்த நிலைக்கு பெயர் என்ன?

ஆனால் உண்மையில் இது காதல்தானா?

அம்மா இவனை திருமணம் செய்து வைக்கிறேன் என்ற போது வந்த வெறுப்புக்கும் அருவருப்புக்கும் என்ன விளக்கம்?

அது இவளுக்கு நீதியின் மேல் உள்ள பசி தாகம்.

தவறு செய்து தன்னை அவமதித்துக் கொள்ள, அசிங்கபடுத்திக் கொள்ள, இயலாத சுயமரியாதை.

வியனை அவனை சார்ந்தவர்களை கஷ்டப்படுத்த இயலாத உண்மைக்காதல். அவனோடு நிம்மதியாய் வாழவேண்டும் என்ற பேராசை.

ஆக இது அக்மார்க் காதல்தான்.

புரிதல் குடையாய் விரிந்து மழையாய் பொழிய செய்கிறது மனதை.

வேலியில்லா காற்றில் விடை தேடா கேள்வியாய் விண்ணுக்கும் மண்ணுக்குமாக மிதந்தாள் மையல் பிடி புகுந்தவள்.

அவளை அவளுக்கே பிடிக்கிறது. அத்தனையும் அவளுக்காக அப்பொழுதுதான் பிறந்தது போல் ஓர் உணர்வு.

அவளுக்குள் அவள் உலகம் உண்டாகியது.

அத்தனையும் அழகாகியது அறியா நொடியில்.

காதல் கொள்ளும் தருணத்தைவிட அதை உணரும் தருணம் அழகு.

கண நேரத்தில் இது வரை கடந்து வந்த வாழ்க்கை காணாமல் போனது.

இன்றுதான் இவள் பிறந்திருக்கிறாள்.

இதுவரை இவள் இருந்த இடம் எது?

எதிரில் இருந்தவன் மட்டுமே யுகயுகமாய் அறிந்தவனாய் தெரிகிறான். ஏனைய அத்தனையும் அந்நியம்.

ஆக இவனுள்தான் இத்தனை யுகமாய் உயிர்த்திருந்தாளோ இவள்? இன்று தான் பிறப்பனுபவிக்கிறாளோ?

புதிதாய் பிறந்திருப்பவள் இவள். பின் தாய்மை போன்ற உணர்வு அவன் மேல் ஏன் எழுகிறது?

தாய்மை கொண்டால் தலைமை உணர்வல்லவா வர வேண்டும், மாறாக தலைவனாக அவனைத்தானே காண்கிறது இவள் மனம்.

தலைமைக்கு உட்படுதலில் தன்னிகரில்லாத சுகம் காதலில் மாத்திரம் சாத்தியம் போலும்.

இவள் இல்லாமல் போய் அவன் மாத்திரமே இவளாக!

தோல்வியில் இத்தனை சுகம் இருக்குமா? இவனிடம் தோற்பதில் எத்தனை சுகம்?

அவ்வளவுதான் அத்தனை நேர மையல் மனோரம்மியம் மடிந்தது.

தோல்வியில் சுகம் காண்பவள் ஜெயிக்க முடியாது.

மறக்க வேண்டியதுதான் இவள் ஒலிம்பிக்கை.

ஒழிக காதல்.

வாழ்க தங்கமெடல்.

தடகளத்தில் ஜெயிப்பது மட்டும் மெடலாகாது, முதல் வெற்றி மனதை வெல்வதில்தான் தொடங்குகிறது.

ஜெயிக்க வேண்டும்.

அடுத்த பக்கம்