என்னைத் தந்தேன் வேரோடு 3 (5)

கண்களை மூடிக் கொண்டாள். காலி வயிறு வேறு காந்தியது.

தூங்கி விடக் கூடாதே என்ற பெரும் பயம் நெஞ்சை குடைய நரகமாக தொடர்ந்தது பயணம்.

அதற்கும் மேலாக அடுத்த உபாதை தொடங்கியது. இவனிடம் எப்படி கேட்க?

நேரம் செல்ல செல்ல அவளால் தாங்க முடியவில்லை. இனி முடியாது.

“ரெஸ்ட் ரூம் போகனும்”

அழுகையாக இவள் ஆரம்பிக்க க்ரீச்சிட்டு நின்றது கார். தூக்கி வாரி போட்டது அவனுக்கு.

“ஹே… நீயா?  தூங்கிட்டன்னு நினைச்சேன்,  அழுறியாடா?  ஏன்மா?” எனத் தடுமாறியவன் சுற்றும் முற்றும் பார்த்தான்.

“இன்னும் டென் ஃபிஃப்டீன் மினிட்ஸ் மதுரை ரீச் ஆயிடுவோம், அங்கே ஏதாவது ஹோட்டல்ல கூட்டிட்டு போறேன்” என்றவன் காரின் ஏசியை அணைத்தான்.

வின்டோஸை இறக்கிவிட்டான்.

“முன்னால வர்ரியாமா? தூங்கலைதானே, படுத்து தூங்குவன்னுதான் பின்னால இருக்கச் சொன்னேன்” இவளை எதிர்பார்ப்போடு பார்த்தான்.

அவனது அழுறியாடாவிலேயே அதிர்ந்திருந்தவள் இப்பொழுது மிரண்டாள்.

இந்நொடிதான் இவளுக்குச் சுட சுட உரைத்தது அவனது உரிமையின் எல்லை. இவன் இவளிடம் எதை எதிர்பார்க்கிறான்?

இத்தனை நேரம் அவன் இவள் வாழ்வில் முளைத்த அடுத்த ப்ரச்சனையாக மாத்திரம் தெரிந்தான்.

ஆனால் இப்பொழுதுதான்  அவன் அதாள பாதாளம் என புரிகிறது பெண்ணிற்கு.

தப்ப முடியாத பாதாளம்.

குழந்தையுடன் அனாதையாக நிற்பதுபோல் ஒரு காட்சி மனகண்ணில் தெரிய மயக்கம் வருவது போல் இருந்தது அவளுக்கு.

எப்படி தப்ப? என்ன செய்ய?

இவ்வளவு நேரம் இருந்த அவனது சிடுமூஞ்சித்தனம் எவ்வளவோ நல்ல விஷயமாக தோன்றியது இப்பொழுது.

வரவில்லை என்பது போல் பலமாக தலை அசைத்தாள். பயம் முகத்தில் அப்பி இருந்தது.

“ப்ளீஸ்மா , இப்படி திரும்பி திரும்பி பார்த்து பேசிட்டே ஓட்றது ரொம்ப ரிஸ்க்,

தயவு செய்து பிடிவாதம் பிடிக்காம முன்னால வா நீ,

ஜஸ்ட் பேச மட்டும்தான் செய்வேன், ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுகிற வரைக்கும்,  உனக்கு மனசு ஒத்து போற வரைக்கும் வேற ஒன்னும் செய்ய மாட்டேன்”

அவன் உறுதி மொழி  இன்னும் அதிகமாக பயத்தை தந்தது அவளுக்கு.

 

வளைப் பார்த்தவன் என்ன நினைத்தானோ, அவன் இருக்கையில் இருந்து இறங்கிவந்து,  இவள் புறத்துக் கதவை திறந்து இவளை நோக்கி குனிந்தான்.

”வாடா”

அவன் முகம் இவள் முகத்திற்கு மிக அருகில் தெரிய, பயத்தில் எதுவும் செய்ய முடியாமல்,  செய்ய தெரியாமல் கண்மூடி அழ ஆரம்பித்தாள் வேரி.

“வே…வேண்டாம், ப்ளீஸ், என்னை விட்டுடு”

“ஹேய்” என ஒரு கணம் அதிர்ந்தவன் பின் எதுவும் சொல்லாமல் காரை கிளப்பினான்.

மதுரையில் அந்த ஹோட்டல் சோனா முன் நிற்கும் வரையுமே மௌனம் காத்தான்.

“இங்கே ரெஸ்ட் ரூம் நீட்டா இருக்கும்.”

அவளுக்கு காரின் கதவை திறந்துவிட்டு சொன்னான்.

அவள் முன் செல்ல அவள் பின் தொடர்ந்தவன்,  வரவேற்பறை வளாகத்தில் நுழைந்ததும் இடபுற கதவை கை காண்பித்தான்.

“அங்கே போகனும் ” என்ற இரட்டை வார்த்தைகளுடன் நிறுத்திக் கொண்டான்,  ஆனால் அவளைப் பின் தொடர்ந்தான்.

சற்று தொலைவில் லேடிஸ் என்ற தங்க நிற அடையாள பலகை கண்ணில் பட அந்த கிரானைட் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றாள் வேரி.

இவள் வெளி வரும் போது கதவுக்கு எதிராக நின்றிருந்தான் அவன். அவன் முகத்தை நேராக பார்க்க பயம் தவிர வேறு ஒரு உணர்வும் தடுத்தது அவளை.

“உனக்கு சம்மதம்னா,  இங்கயே சாப்பிட்டு போயிடலாம்னு நினைக்கிறேன், இல்லை வேற இடம் போகனும்னா சொல்லு, சாப்பிடுறதுக்கு”

வேற எதுக்காகவும் எங்கேயும் அனுப்பமாட்டானாம்.

இவள் முகம் அவன் பார்க்கிறான் என அவளால் உணர முடிந்தது.  அவன் பார்வையை தவிர்த்து சுற்று முற்றும் பார்த்தாள்.

“டைனிங் ஹால் அந்த பக்கம்” என்று திசை காண்பித்தான் இவள் பார்வையை புரிந்தவன்.

அவன் சுட்டிய திசையில் சிறுது தொலைவில் இருந்த அந்த கதவை திறந்து உள்ளே சென்றவள் ஒரு இருக்கையில் அமர,

இவளுக்கு அருகில் வந்து அமர்ந்தான் கவின்.

 

“எதிர்ல இருந்தா என் முகத்தை நீ அடிக்கடி பார்க்க வேண்டி இருக்கும்,  அதான்“ என்ற விளக்கம் வேறு.

ஆமாம் ரொம்பவும் அக்கறை மாதிரி, ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுததாம்’  மெனு கார்டை வைத்து கொண்டு இப்படித்தான் வேரி நினைத்துக்கொண்டிருந்தாள்.

“உன் அக்கா ஸேபா இருக்கிறா, எதையும் போட்டு குழப்பிக்காம சாப்பிடு ” தன் கையிலிருந்த மொபைலை பார்த்தபடி சொன்னான் அவன்.

இவளுக்கு இவள் ஆர்டர் செய்ய,  அவன் தனக்கு வெறும் பாலோடு நிறுத்திக் கொண்டான்.

அதையும் அருந்தாமல் தன் மொபைலை இவள் சாப்பிட்டு முடிக்கும் வரை குடைந்தவன் இவள் சாப்பிட்டு முடிக்கவும் தன் பாலை ஒரே வாயில் குடித்தான்.

பின் பில் தொகையை செலுத்திவிட்டு இவளைப் பார்த்தான்.

“எதாவது, எந்த வகை உதவினாலும் தேவைனா கேளு, தேவை இல்லாம உன்னை கஷ்டபடுத்திகாத” என்றான் கேள்வி போல்.

எழுந்து காரை நோக்கி நடக்க தொடங்கினாள் வேரி.

இவள் பின் சீட்டில் அமர,  அவன் மௌனமாக காரை செலுத்தினான்.

அடுத்த பக்கம்