என்னைத் தந்தேன் வேரோடு 3 (4)

இப்பொழுது அறைக்குள் அனுமதியின்றி நுழைந்தான் கவின். சூழ்நிலையை உணர்ந்தவன் முகம் ஒரு கணம் இறுகி மீண்டும் இயல்புக்கு வந்தது.

மாலினிக்கு வாயெல்லாம் பல்லாகியது.

சுகுமாருக்குமே சந்தோஷம்.

“வாங்க மாப்ள”  கோரசாக வரவேற்க

அவன் கண்கள் வேரி மீது மட்டுமே.

வேரியின் மனதில் வந்து நிரம்பியது நிம்மதியோ சந்தோஷமோ இல்லை. மாறாக உலகின் மொத்த இளக்காரமும் ஏளனமும் அவன் மீதாக அவள் மனதில் குடியேறியது.

முட்டாள். படுமுட்டாள்.

இவளைப் பற்றி எதுவும் தெரியாமல்,  இவள் பெற்றோரின் வெத்து கூப்பாடிற்காக இவளைக் கல்யாணம் செய்ய வேண்டுமானால் அவன் நிச்சயம் முட்டாளிலும் படு முட்டாள் தான்.

மிர்னாவால் இந்த கவினை ஏமாற்ற முடிந்தது.

இவன் முட்டாள்.

இவள் பெற்றோரால் இவனை ஏமாற்ற முடிந்தது.

இவன் முழுமுட்டாள்.

ஏன், இந்த கல்யாணத்திற்கு சம்மதமே இல்லாமலிருந்தும் சம்மதம்  என சொல்லி இவளால் கூட இவனை ஏமாற்ற முடிந்தது.

நொடிக்கு நொடி அடுத்துவரை சார்ந்து மட்டுமே வாழமுடிந்த இவளாலயே இவனை ஏமாற்ற முடிந்தால் இவன் எப்படிப்பட்டவன்?

இப்பொழுது இவளை விட்டுவிட்டு அவன் போயிருந்தால் இவள் பெற்றோரின் நீள வாய்க்கு அவன்  பதிலடி குடுத்ததாக இருந்திருக்கும். அப்படியானால் அவனை புத்திசாலி என ஒருவகையில் ஒத்துக்கொள்ளலாம்.

இப்படி ஏமாறவென திரும்பி வந்து நின்றால்? இவன் நிச்சயமாக படு முட்டாள் தான்.

மிர்னா கவினை பற்றி வேரியிடம் ஓதி இருந்த விதைகள் இந் நொடியில் வனமாய் வளர்ந்துவிட்டன இவள் மனதில்.

வள் முகத்தைப் பார்த்திருந்த கவின்

தன் கையில் கொண்டு வந்திருந்த அந்த  கவரை அவள் முன் வைத்தான்.

“இந்த டிரஸை மாத்திட்டு நீ போட்டிருக்கிற டிரஸிலிருந்து,  உங்க வீட்ல குடுத்த நகை உட்பட,  ஒரு குண்டூசியை கூட எடுக்காம என் கூட கிளம்பு,  நாம இன்னைக்கே திருநெல்வேலி கிளம்புறோம்,  குயிக்” என்றவன்

“உங்க மகள் பொறுப்பு இனி எனக்கு மட்டும்தான். நீங்க இனி அவட்ட பேச முயற்சி பண்ணிணீங்கன்னா கூட நல்லதுக்கு இல்ல, உங்களுக்கும் அவளுக்கும் இனி எந்த சம்பந்தமும் கிடையாது”

“ஜஸ்ட் கெட் அவுட்” என்றான் தன் மாமனார் மாமியாரிடம்.

இடி மேல் இடி விழுந்தது போல் இருந்தது வேரிக்கு.

எப்படிபட்டவன் இவன்? எதற்காக இவளை மணந்திருக்கிறான்?  இவளை என்ன செய்ய போகிறான் இந்த முட்டாள்?

“மாப்பிள்ள,  அது” ஆரம்பித்த சுகுமார்,  வேரியின் தகப்பன் கவினின் ஒற்றைப் பார்வையில் பெட்டி பாம்பாய் சுருண்டார்.

“சரிடி,  நீ நகையை அம்மாட்ட தா,  பத்திரமா வச்சிருக்கேன், மாப்பிள்ள சொல்லிட்டார்ல” மகளிடம் சொன்ன மாலினி,

“அவ நீங்க சொன்னா கேட்பா ” என்றபடி மருமகனை பார்க்க அவன் எரிமலைக்கு ஆண்பால் கண்டிருந்தான்.

மாலினியின் முகத்தை பார்த்த அவன் தீக்கண்கள் வாசலை சுட்ட, அவனது மாமனார் மாமியார் வார்த்தையின்றி வெளியேறத்தான் வேண்டி இருந்தது.

தற்கொலை செய்து கொள்ளலாமா என வருகிறது வேரிக்கு.

‘தற்கொலைக்கு பிறகு போற இடத்தில் நிலமை இதைவிட மோசமா இருக்கும்,  அந்த நிலையை மாற்ற விரும்பினாலும் மாற்ற முடியாது,

இந்த பூமி வாழ்க்கையில் விரும்பும் படியான மாற்றம் வர எதோ ஒருவகையில் வாய்ப்பு இருக்குது,  பொறுமையா இரு’

என்ற பாட்டியின் அறிவுரை வழக்கம் போல் ஞாபகம் வர,

கவின் சொன்னபடி உடை மாற்றி,  திருமணத்தில் அவன் அணிவித்த ஒற்றை சங்கிலியை மட்டும் சுமந்த படி அவனது ஆடியின் முன்கதவை திறந்து ஏறப்போனாள் வேரி.

அவன் ஏற்கனவே தயாராக ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்தான்.

“பின்னால ஏறு,  வேரி”

அவன் வார்த்தையில் இவளுள் ஏதோ ஒன்று பலமாக அடி வாங்கியது.

அவனுக்கு இவள் இணையில்லை என்கிறான். உண்மைதானே!, இவள் அவனுக்கு இணை இல்லைதானே, கண்கள் குனிந்தன.

சுய இரக்கத்தில் துடித்த இதயம் சுட சுட கண்ணீராகி கண்கள் கடந்து அவள் காலடி சேர்ந்தன.

வெடிக்கும் இதயத்துடனும்,  ஒலியற்ற உதடுகளுடனும் பின் இருக்கையில் புதைந்தாள் மனைவி.

வாகனத்தைக் கிளப்பினான் கணவன்.

“அம்மா,  அப்பா” இவள் தொடங்கும் முன் அவனிடமிருந்து பதில் வந்தது,

“உனக்கு அப்படி யாரும் இல்லை.”

“இ… இல்ல, உங்க அம்மா அப்பாட்ட சொல்லிட்டு” இவள் இழுக்க,

“அவங்க கிளம்பி ஒரு மணி நேரம் ஆகுது” சொன்னபடி காரை நகர்த்தினான்.

ஆக இவளுக்கு இரண்டு வீட்டு பெரியவர்களும் கிடையாது. இப்படி ஒரு புலிப் பார்வை பார்க்கும் முட்டாளுடன்,  இவளுக்கு இருக்கும் அத்தனை வேதனைகளோடு இப்படி ஒரு வாழ்க்கை. ஏன் தெய்வமே?

எத்தனை நாள் தொடரும் இந்த உறவு? அதன் பின்பு?

அம்மா சொல்லியது ஞாபகம் வந்தது.

எப்படியும் விஷயம் தெரியுறப்ப விரட்டி விட்டுருவான், ஆனால் ஜீவனாம்சமா அவன் சொத்துல பாதி வரைக்கும் பிடுங்கிலாம்,  அதுக்குள்ள ஒரு குழந்தையும் வந்துட்டா, உனக்கு வாழ்க்கைல வேற என்ன வேணும்? எவ்ளவு முடியுமோ அவ்ளவும் வாங்கிடலாம்’

மனமும் அதற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் காலும் வலித்தது. எவ்வளவு நேரம் இன்று நின்றிருக்கிறாள்?

இரண்டாம் நிமிடம் இருண்ட மலைப்பாதையில் இறங்க ஆரம்பித்தது கார். அடி முடியற்ற பாதாளத்தில் விழுவது போலிருந்தது வேரிக்கு.

அடுத்த பக்கம்