என்னைத் தந்தேன் வேரோடு 3

மெல்ல உறைக்க வியனை திரும்பிப் பார்த்தாள் மிர்னா. அவனும் இவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் ஒரு மென்மை.

குழந்தையின் குறும்பை ரசிக்கும் ஒரு பார்வை.

அப்பார்வையின் முன் தன்னை குழந்தையாகவே உணர்ந்தாள் அவள் ஒருகணம். மறுகணம் இடித்தது ஈகோ.

ஏய் எம் எம் உனக்கு ஏழுகழுத வயசாச்சிடி, அவந்தான் அத மதிக்கலானா, நீயும் சேந்தா சீன் போடுற,

“என்ன பார்க்கீங்க?” விறைப்பாக கேட்டாள்.

“இந்த எக்கோ எஃபெக்ட்ட அப்பவே செய்ய சொல்லி இருக்கலாம் போலிருக்கே, இவ்ளவு எனர்ஜெடிக்கா ஆகிட்டீங்க, ”

இவள் விறைப்பு அவனை பாதித்ததாகவே தெரியவில்லை. கண்களில் இன்னும் மென்மையும் ரசனையும் அப்படியே இருந்தன. இதழில் இன்னுமாய் ஒரு புன்னகை.

ஆனால் இம்முறை அவளது ஈகோ எழும்பவில்லை. மாறாக மனதிற்குள் சந்தோஷச் சாரல்.

“ம்,  நிஜமாவே செய்திருக்கலாம், பக்கத்தில நீங்க இல்லனா செய்திருக்கவும் செய்வேனா இருக்கும்,  சின்ன வயசில இருந்து கடவுளுக்கு அடுத்தபடியா என் துணை இந்த கனவுதான், கோல்ட் மெடல் ஃபார் இண்டியா”

கனவுகளில் கரைந்தன அவள் கண்கள்.

ஆனால் பின்மனதில் ஒரு கேள்வி. இவன் அருகில் இவள் தன் கனவை மறந்திருந்தாளா என்ன?

ஒரு இனம் புரியா  புரியாமை.

அவன் முகத்தில் ஆச்சர்யம் உதித்தாலும் அது அளவு கடந்து இல்லாமல் அதே நேரம் ஒரு பாராட்டும் பாவமும் பார்வையில் பதிந்து வர,

அவளை மேலே பேசச் சொல்லும் விதமாக பார்த்திருந்தான் வியன்.

உனக்கே இது ஓவராத் தெரியலங்கிற மாதிரி அவன் இளக்காரமாகவோ,

இவல்லாம் தான் மெடல் வாங்கி கிழிக்க போறாங்கிற மாதிரி நம்பிக்கையின்றியோ,

.பொம்பிள பிள்ளயா லட்சணமா கல்யாணம் செய்தமா குடும்பத்த பார்த்தமான்னு இல்லாம இதென்ன வேலைன்னு அலட்சியமாகவோ பார்க்காது,

மிக இயல்பாக அவளது கனவை வியன் ஏற்றுக் கொண்ட விதம் மிர்னாவுக்கு மிகவும் புது அனுபவம்.

மிகவும் பிடித்த அனுபவமுமாயும் அது இருந்தது.

அது அவள் உணர்வில் ஒரு மின்னலை பிறப்பித்தது.

இனம் புரியாத,  உணர்ந்தறியாத ஒரு இறுகிய கடினம் இவள் இதயத்திற்குள் இத்தனைகாலமாய் இருந்திருப்பதை எனோ இன்னேரம் புதிதாய் உணர்ந்தாள். அம்

 மனப்பாறையில் இம் மின்னல் சிலீரென கால் பதிக்க ,  பாறையில் ஒரு நெகிழ்வு.

“இதெல்லாம் தேவையான்னு நீங்க அட்வைஸ் செய்யலியா?“

“நல்ல விஷயத்த ஏங்க குறை சொல்லனும் ? இதை சொல்லும் போது அவன் கண்களில் இருந்த உண்மை அவள் மனதில் மின்னல் கோடிட்டது. பெண்களை,  அவளை அவன் மதிப்பவன்.

இயல்பாய் இவளை இவளாய் ஏற்கும் முதல் உயிர்.

எதோ ஒலியற்று வழுகியது பெண் உள்ளே.

நெகிழ்ந்த மனப்பாறையில் இப்போது ஒரு விதை விழுந்த சலனம்.

“ஸோ இதுதான் கல்யாணம் பிடிக்காம போக காரணமா?”

குறை சொல்லா தொனியில் இயல்பாய் சக மனிதனாய்  அவள் முடிவை அங்கிகரிக்கும் விதமாக அவன் கேட்டான்.

அவள் திருமண தவிர்ப்பை குறை சொல்லும் ஒரு ஒலிக்குறியும் அதில் மறைவாகக் கூட இல்லை.

இவள் நிராகரித்தது அவன் அண்ணனை,  அதுவும் திருமண நாளில்.

அதை குறித்து ஒரு குறையும் சொல்லாமல் இவள் புறத்தை நடுநிலமையாக பார்க்கும் இவன் எப்படிபட்டவன்?

விழுந்த விதை வேர்விடும் சுகவலி பொறுத்தாள்.

அவனைப் பார்த்து ஆமோதிப்பாக புன்னகை பூத்தாள்.

“இதுவும் ஒரு காரணம்”

இனி அவனிடம் எதையும் மறைக்கும் எண்ணம் வருமா என அவளுக்குத் தெரியவில்லை.

“என் நிலைக்கு இது ரொம்ப பெரிய கனவுதான் பட் இன்னும் நம்பிக்கை இருக்குது,  ஐ’ல் வின் ஒலிம்பிக்ஸ்”

அடுத்த பக்கம்