என்னைத் தந்தேன் வேரொடு 2 (5)

மிர்னாவின் இத்தனை காலவாழ்க்கையில் இது முதல் அனுபவம். ஒரு மனித உயிர் அவள் மீது அக்கறைப் படுவதும் அதை அவளிடம் வெளிப்படுத்துவதும்.

இவள் பிறந்த பொழுதே இரட்டைப்பிறவி. இருவரை தனியாளாக பார்க்கமுடியாதென அம்மா இவளையும், பாட்டி வேரியையும் பாகம் பிரித்துக் கொண்டனர்.

அம்மாவும் பாட்டியும் ஒத்துபோன ஒரே விஷயம் இவள் வேரியை விட அழகென்பதில் தான். ஐடென்டிகல் ட்வின்ஸில் அப்படி என்ன வித்யாசத்தைக் கண்டுவிட்டார்கள் என இவளுக்கு இந்நாள் வரை புரியவில்லை.

அம்மா இவளை தன்னோடு வைத்துக் கொள்ள விரும்பிய ஒரே காரணம் அந்த அழகு தான் என்பது பாட்டியின் பேச்சின் சாரம்சம். அதை பலதடவை உறுதி படுத்தி இருக்கின்றன அம்மா நடந்துகொண்ட விதம்.

பாட்டியுடன் வேரி எப்பொழுதாவது மதுரையில் உள்ள இவள் வீடு வரும் போதும், இவள் அதிசயத்தில் அதிசயமாக பாட்டி வீடு செல்லும் போதும், பாட்டி இவளிடம் வெளிப் படுத்தியதெல்லாம் கோபமும் எரிச்சலும் தான்.

வேரியோடு ஒப்பிட்டு அவள் அப்பாவி இவள் காரியவாதி என்பதாக இருக்கும் அவரது வார்த்தைகள். தலை கால் புரியாவிட்டாலும் அதில் இவள் மீது அக்கறையை காண முடிந்ததில்லை.

வீட்டில் அப்பாவை பார்க்க முடிவது அதிசயம்.

உழைப்பதும்  அம்மாவுடன் சேர்ந்து குடும்பத்தின் சமூக அந்தஸ்த்தை பாதுகாக்க வேஷம் போடுவதிலுமே அவர் நேரம் முடிந்து போய்விடும்.

அம்மாவிற்கு அடுத்தவர்களிடம் இவளைப் பற்றி பெருமை பேச மட்டும் இவள் தேவை.

அடித்து கொடுமைபடுத்தி இவள் வளர்க்க படவில்லை எனினும் வாய் நிறைய பேசி பாராட்டி சீராட்டி, அறிவுரை ஆலோசனை கூறி இவளை வளர்த்தவரும் எவரும் இல்லை.

தனிமையில் தனக்குள் பேசி, தன்னைத் தானே உற்சாகமூட்டி, தானே தனக்கான தோழியாய் துணையாய் இவள் மறிவிட்டதின் மூலகாரணம், இவள் வளர்ந்த சூழலும், என்நிலையிலும் சந்தோஷமாக மட்டுமே இருக்கும் அவளது மனோநிலையும் தான்.

ஆனால் இன்றைய இந்த அக்கறை அவளுக்குள் இருந்த ஏக்கத்தை, அதை அவள் மறைத்து ஒளித்து வைத்திருந்த மனதின் அடி ஆழத்திலிருந்து  தொட்டுத் தாக்கியது.

தொடங்கியது ப்ரளயம்.

வந்த விம்மலை வாயோடு நிறுத்தினாள்.

“ஆர் யு ஆல்ரைட்?”

“குளிர்ல்ல இவ்ளவு தூரத்துக்கு மேல உங்களுக்கு கஷ்டம்னு தோணிச்சு” வியன் நலம் கேட்பதுபோல் காரணம் சொல்ல

தலை மட்டும் திருப்பி அவன் முகம் பார்த்தாள். அவள் பார்வையில் என்ன புரிந்தானோ?

மீண்டுமாய் பாறைப் புறமாக திரும்பிக் கொண்டாள்.

அடுத்து இருவரும் பேசிக் கொள்ளவில்லை.

பின் இருபதுகளிலோ, முன் முப்பதுகளிலோ மிர்னா இருந்திருந்தால் வியனின் செயலிற்கும் தன் மனதின் அலையடிப்பிற்கும் உள்ள தொடர்பை ஒருவேளை உணர்ந்து, இது தான் வளர்ந்த விதத்தின் பின்விளைவு என ஒரு முடிவிற்கு வர வாய்ப்பிருந்திருக்கலாம்.

வியன் மீது மரியாதை வந்திருக்கலாம்.

பதின் வயதுகளில் இருந்திருந்தால் தற்காலிக கிளர்ச்சி அலை தோன்றி அதை காதலென நம்பி இருக்கலாம். பின் நாளில் அது வெறும் இன்ஃபாக்ஷுவேஷன் என நிராகரிக்க பட்டிருக்கலாம்.

ஆனால், குழந்தை உள்ளமும்  குமரியின் பக்குவமும் மனதிற்கு நெருக்கமான மனித உறவை பற்றிய அறியாமையுமாய் இருக்கும் மிர்னாவுக்கு என்ன நடந்ததாம்?

மேல் குறிப்பிட்ட எதுவும் இல்லை.

மாறாக தனியாய் இருப்பதைவிட துணையோடு இருப்பது சுகம் என்ற ஒரு புரிதலை கொண்டு வந்தது அவ்வளவே.

இதுவரை அவள் தனிமையை உணர்ந்ததும் இல்லை,அதற்கு தீர்வு நாடியதும் இல்லை. கவினோடு திருமண பேச்சு வந்த போதும் திருமணத்தில் தனக்கு என்ன நன்மை இருக்கும் என்று சிறு சிந்தனைகூட வரவில்லை அவளுக்கு.

அதோடு அது வேண்டாம் எனச் சொல்ல பெரும் காரணமும் இருந்தது. இன்னும் அந்த காரணம் அப்படியேத்தான் இருக்கிறது.

ஆனால் இப்பொழுதோ தனிமையும் புரிகிறது. நல்ல துணை இருந்தால் வாழ்க்கை சுகமாய் இருக்கும் என்ற எண்ணமும் வருகிறது.

அப்படி ஒரு நிரந்தர துணையை பெற என்ன வழி என அலசும் மனதிற்கு திருமணம் முதன் முறையாக நல்லவிஷயமாக தோன்ற தொடங்குகிறது.

அதைத்தான் சிந்தித்துக் கொண்டிருந்தாள் மிர்னா.

சில ஆயிரம் ஆண்டுகள் போல் தோன்றிய ஒரு மணி நேரத்தில் அவன் குறிப்பிட்டிருந்த அந்த சரிவை அடைந்தனர்.

அடுத்த பக்கம்

 

Advertisements