என்னைத் தந்தேன் வேரோடு 2

திருமணம் ஏற்பாடு செய்திருந்த ரிசாட்டின் ஒரு அறை.

“நீங்க என்ன சொன்னாலும் என்னால ஒத்துக்க முடியாது, என் தம்பியை பத்தி எனக்கு தெரியும். முதல்ல அவங்கள தேடி கண்டு பிடிப்போம், அவங்க என்ன ப்ரச்சனைல இருக்காங்களோ?”

அழுத்தமாகப் பேசிக்கொண்டிருந்தான் கவின். பார்த்த உடன் வியனின் அண்ணன் என தெரியும் படி உருவ ஒற்றுமை. கவின் நிச்சயமாக காரணப் பெயர்தான். அழகன்.

பாசத் தவிப்பு முகத்தில் தெரிந்தாலும் சூழலை மீறிய ஒரு ஆளுமை அவனிடம் குடிகொண்டிருந்தது.

“இன்னும் என்ன இருக்குது மதுரை கொடைகானல் வழியை சல்லடையா சலிச்சாச்சு. அவங்க தடமே இல்ல, சொல்ல கேவலாமாத்தான் இருக்குது, என்ன செய்ய, இப்படி ரெண்டு பேரும் திட்டம் போட்டு ஓடி போய்ட்டாங்க,

இதனால என் ரெண்டாவது பொண்ணு வாழ்க்கை நாசமா போயிடும், உங்களுக்கும் அவமானம், அதனால பேசாம எங்க சின்னவளை நீங்க கல்யாணம் பண்ணித்தான் ஆகனும்”

இந்த ரீதியில் மிர்னாவின் பெற்றோர் பேச கவினின் குடும்பத்தார் மறுத்துப் பேச ஒரே களேபரம்.

வார்த்தை தடிக்க கட கடவென அறையை விட்டு வெளியே பார்த்து நடக்க ஆரம்பித்தான் கவின்.

“நீயெல்லாம் ஒரு ஆம்பிள்ளையா? தூ, கல்யாணத்தை பார்த்து பயந்து ஓடுற, இவனுக்குதான் எதோ சரி இல்ல, விஷயம் தெரிஞ்சிருக்கும், அதான் எங்க மிர்னி இப்படி ஓடியிருக்கா”

இன்னுமாய் அவனை கீழ்தரமாக பேசிய மாலினியின் வார்த்தைகள் கவின் காதில் விழுந்தன.

திரும்பிப்பாராமல் வெளியேறினான். அதுதான் கவின்.

ல்லோரும் தேடியும் கிடைக்காவிட்டால் என்ன, இவன் தானே தன் தம்பியைத் தேடப் போகிறான். கிளம்பிய கவினின் மனதில் அது ஒன்றுதான் இப்போதைய நினைவு. ஆனால்,

இந்த மிர்னாவின் பெற்றோர் நடந்து கொள்ளும் விதத்துக்கும், அவர்கள் வார்த்தைகளுக்கும், இவன் தம்பி குணத்துக்கும் பொருத்திப் பார்த்தால் எதுவோ புரியும்படி இருக்கிறது இப்போது.

மணப்பெண் மிர்னாவிற்கு இத் திருமணத்தில் விருப்பம் இருந்திருக்கும் என இவனுக்கு இப்போது நம்பமுடியவில்லை. அவள் சுய விருப்பத்தில் சென்றிருப்பாள் என்கிறார்களே அவள் பெற்றோர்கள்.

ஆக அவள் தன் வெறுப்பை இவர்களிடம் வெளி இட்டிருக்கலாம். இவர்கள் பிள்ளைகளின் உணர்வுகளை மதிப்பவர்கள் கிடையாது. ஆக அவளாக விலகி இருக்கலாம்.

அவள் பெற்றோர்கள் மகளுக்கு சம்மதம் என சொன்னதை நம்பியது இவன் வீட்டார் தப்பா? அவளிடம் நேரடியாக கேட்டிருக்க வேண்டும் போலும்.

ஆனாலும் சம்மதம் இல்லாதவள் இங்கு வர கிளம்பியதன் காரணம்? ஓ தப்பிக்க முடியாதபடி அடைத்து வைத்திருந்திருக்கலாம், இங்கு வந்து அவள் தனக்கு விருப்பம் இல்லை என சொல்லி இருந்தால் அவள் பெற்றோர் என்ன செய்திருப்பார்களாம்?

ஆனால் அவர்களுக்கு அப்படி ஒரு எண்ணம் வராத படி அவள் அமைதியாக இங்கு கிளம்பி இருக்கிறாள்.

எது எப்படியோ, வழியில் வியனுக்கு விஷயம் தெரிந்திருக்க வேண்டும், இங்கு வந்து அவள் தனக்கு விருப்பம் இல்லை என சொல்லும் நிலை வந்தால் இரு வீட்டாருக்கும் கஷ்டம் என நினைத்தும்,

இயல்பிலேயே அவனுக்கு உள்ள உதவி செய்யும் குணத்துக்கும் அவளை எங்காவது அழைத்துச் சென்று ஒழித்து வைத்து இருக்காலாம்,

அல்லது இவன் மனதிற்குள் உள்ளோடும் இன்னொரு நினைவு போல், அவர்களுக்கு விபத்து எதாவது… வழியில் அதற்கான அடையாளம் எதுவுமில்லை எனினும் திருப்திபட மறுக்கிறது மனம்.

இப்பொழுது இவனுக்குத் தேவை அவர்கள் இருவரின் பாதுகாப்பு பற்றிய செய்தி,

சட்டென ஒரு எண்ணம் உதயம்.

பெற்றொரிடம் ரகசியம் காக்கும் பிள்ளைகள்கூட தங்களுக்குள் ஒளிவு மறைவு வைப்பதில்லை. அதுவும் ஒத்தபாலரிடம் இந்த ஐக்கியம் பலமாக இருக்கும்.

மிர்னாவின் தங்கை வேரிக்கு விஷயம் தெரிந்திருக்கும்.

அவளை நேரடியாக சென்று சந்திப்பது வேறு ப்ரச்சனைகளை இப்பொழுது கொண்டுவர வாய்ப்பு இருப்பதால் அவள் நடவடிக்கைகளை ரகசியமாக கவனித்தால் சரியாக இருக்கும்.

மிர்னா குறித்து அவள் தவித்துக் கொண்டு இருந்தால் விஷயம் விபரீதம்.

இல்லையெனில் அவளுக்கு மிர்னாவின் சுக பத்திரம் தெரிந்திருக்கிறது என்று பொருள். தம்பியும் மிர்னாவும் நிச்சயமாக பத்திரமாக இருப்பார்கள்.

மணப்பெண்ணிற்கென ஒதுக்கி இருந்த அறையை நோக்கி சென்றான். அது இரண்டாம் தளத்தில் இருந்தது. உள்புறமாக  பூட்டி இருந்தது.

அடுத்த பக்கம்