என்னைத் தந்தேன் வேரோடு 15(8)

“கல்யாண நேரத்துல மிர்னி காணாமல் போனதும், அவ ஏதோ வம்பு பண்ணிட்டானு எனக்கு புரிஞ்சிது, இதுக்கு மேலயும் அவளை கட்டாயபடுத்த முடியாது, கூட்டத்துல வந்து இஷ்டம் இல்லைனு சொல்லிடுவான்னு தோணிட்டு“

மகளுக்கும் மருமகனுக்கும் பொதுவாக மாலினிதான் பதில் சொல்ல தொடங்கினார்.

“அதுவரைக்கும் மிர்னி வாழ்க்கை இப்படி பெரிய இடத்துல செட்டிலாகுதுன்னு சந்தோஷம் ஒரு பக்கம் இருந்தாலும், சின்னவளுக்கு சாதாரண உயரத்துல பார்க்கிறதே நமக்கு கஷ்டமே, பெரியவள இவ்ளவு பெரிய இடத்துல கொடுத்துட்டு சின்னவள ரொம்ப வசதி கம்மியான இடத்துல கொடுத்தா எப்படி இருக்கும்னு ஒரு பக்கம் ஒரே கவலை”

இப்படி எல்லாம் அம்மா யோசித்தார்களா? எனக்கு என் குழந்தை எப்படி முக்கியமாக படுகிறதோ அப்படித்தான் அம்மாவுக்கும் நானும் இருந்திருக்கிறேனா? வேரியின் மனம் ஒப்பிட்டுக் கொண்டிருந்தது.

“அந்த நேரம்தான் இந்த எண்ணம்”

மாலினி தொடர்ந்தார்.

“அப்படி தோனி இருக்க கூடாது,  ஆனா வேரி மேல உள்ள பாசம், கல்யாணம் நிக்க கூடாதுன்னு எங்க பக்கம்லாம் வேற பொண்ண பார்த்து கல்யாணம் செய்துருவோம்னு  யாரோ பேசுறது காதுல விழவும்,

இந்த சூழ்நிலைய பயன்படுத்தி நம்ம வேரிய இந்த மாப்ளைக்கு செய்து கொடுத்துட்டா, பெரிய இடத்துல அவ செட்டிலாயிடுவா,

இந்த அளவுக்கு பெரிய இடம் பாக்க முடியலைனாலும் மொத்த சொத்தையும் வித்து கொடுத்தா மிர்னிக்கு ஓரளவு பெரிய இடத்தையே முடிச்சுடலாம்னு தோனிட்டு,

இருக்குற பதற்றத்துல வேரிய பத்தி பெருசா விசாரிக்க மாட்டாங்க, ஏற்கனவே வெளிய யாருக்கும் அவ கால் விஷயம் தெரியாது, இப்படில்லாம் தோனவும் வேரிய பத்தி பேசிப் பாப்போம்னு பேசினேன்”

“மாப்பிள்ளயை வேற முட்டாள்னு நினச்சேன், அதனால ஈசியா ஏமாத்தலாம்னு நினைச்சேன், சொல்லுங்க” கத்தினாள் வேரி. கவினின் சதியில் இவளை எவ்வளவு எளிதாய் தள்ளிவிட்டார்கள்? கோபமாகவும் வந்தது வேரிக்கு.

“வேரிமா” என்றார் அப்பா, இது கெஞ்சலா அதட்டலா?

“ம்,முதல்ல பேச தொடங்குறப்ப ஒரு எதிர்பார்ப்பா இருந்தது” மிகவும் இறங்கிய குரலில் குற்ற குறுகுறுப்போடு தொடர்ந்தார் மாலினி

“அது நடக்காதுன்னு தெரியவும், ரெண்டு பொண்ணுக்கும் இல்லாம போகுதே இந்த இடம்னு ஒரு ஆதங்கம்,

அப்பல்லாம் எங்களுக்கு ஆரம்பத்துல பண வசதி மட்டும் இருந்திருந்தா, வேரி ஒரு நல்ல ஹாஸ்பிட்டல்ல பிறந்திருப்பா,  அவ கால் இப்படி ஆகி இருக்காது,  அந்த நைட் ப்ரச்சனை வந்தே இருக்காது,

இப்படில்லாம் நான் என் பிள்ளைய பிரிஞ்சு கஷ்ட பட்டிருக்க வேண்டாம்னு எனக்கு ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை,

பணக்காரங்க வீட்லயும் துக்கமும் இழப்பும் வரலாம்னு எனக்கு தெரியல,

ஒரு வசதியான வாழ்வு என் பிள்ளைக்கு வாசல் வரை வந்துட்டு இல்லாம போறதான்னு, ஒரு வேகம்,

முன்னெல்லாம் எனக்கு தெரிஞ்சவரை சந்தோஷமா இருக்க ஒரே வழி பணக்காரங்களா இருக்கிறதுதான்,

அதான் ஏமாற்றத்துல ரொம்பவே அதிகமா பேசிட்டேன்,

பண ஆசை எல்லா தீமைக்கும் வேராயிருக்கிறதுங்கிற மாதிரி,  நான் தப்பு செய்ய என் பண ஆசை காரணமாயிட்டு,

வியன் கூட மிர்னி போனதை காரணம்காட்டி அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் செய்துடலாம்னு கூட  எனக்கு அடுத்து தோனிட்டு,

மிர்னிட்ட அதை சொன்னதும்தான் அவ வீட்டுக்கே வராம போய்ட்டா, மன்னிச்சுக்கோங்க மாப்ளை, நான் செய்தது தப்பு, ஆனால் இப்ப அதை சரி செய்ய என்ன செய்ய முடியும்னு தெரியல” மாலினி கெஞ்ச

சரி விடுங்க அத்தை”

கவின் ஆறுதல் படுத்தினான்.

“நான் அதைலாம் மனசுல வச்சுகிடல, உங்க சின்ன பொண்ணுதான் நீங்க சொன்னதுக்கு பயந்து போய் இஷ்டம் இல்லாட்டாலும் என்னை கல்யாணம் செய்தாளே, அதான் திரும்பவும் உங்க கூட டச்ல இருந்தா சுயமா எதையும் யோசிக்க மாட்டா, நீங்க சொல்றதுக்கு மட்டும் தலை ஆட்டிகிட்டு இருப்பான்னு தோணிச்சு,

அதோட என்னை உங்க கண்ணோட்டத்துல பார்ப்பாளே தவிர எங்க ரெண்டு பேருக்கும் இடையில் ஒரு அன்டர்ஸ்டாண்டிங் வராதுன்னு புரிஞ்சுது,

அதான் இவ்ளவு நாள் அவள இங்க விடல,

எங்க ரெண்டு பேருக்கும் இடையில் ஓரளவு செட் ஆன பிறகு உங்க விஷயத்தை கவனிக்கலாம்னு நினச்சிருந்தேன், அதோட அவ கன்சீவானதும் இந்த நேரத்துல இந்த டார்ச்சர் வேண்டாம்னு பட்டுது,

பெற்றோரை கனபடுத்தனும்கிறது கடவுளோட கட்டளையில்லையா, அதோட நாங்க எங்க பேரண்ட்ஸ்ட்ட எப்படி நடந்துகிறமோ அப்படிதான எங்க பிள்ளைங்க எங்கட்ட நடந்துப்பாங்க, குழந்தை பிறந்த பிறகு இங்க எல்லாருமா  வரணும்னுதான் நினைச்சிருந்தேன்” கவின் சொல்ல

“பொய் சொல்றீங்க” வெடித்தாள் வேரி ”எங்க வீட்டை பத்தி பேசினாலே உங்க முகம் இறுகிரும்”

“கொஞ்சம் இளக்கம் காமிச்சாலும் நீ பிடிவாதம் பிடிப்பதானே, அதான்”

“அப்ப எங்க வீட்டு மேல கோபம் இல்லாட்டாலும் கோபம்ங்கிற மாதிரி நடிச்சேன்னு சொல்றீங்க” கொதிக்க தொடங்கி இருந்தாள்.

“இல்ல, நீ அங்க போகணும்னு அப்ப ஆசைப்படுறது எனக்கு பிடிக்கலைனு காமிச்சேன், அதைத்தான் இப்பவும் சொல்றேன், டெலிவரிக்கு அப்புறம்தான் வரணும்னு நினைச்சேன்”

“ஏன்டி நீ மாப்ளையை குற்றவாளி கூண்டுல நிறுத்தி விசாரிக்கிற மாதிரி பேசிகிட்டு இருக்க, அவருக்கு நம்ம வீட்ட பிடிக்கலைனா சின்ன மாப்ளைய இப்படி தினமும் எங்கட்ட பேச விடுவாறா?

அடுத்த பக்கம்