என்னைத் தந்தேன் வேரோடு 15(7)

“ஆக இவ  என்ட்டயும் சேரல, மிர்னாட்டயும் சேரல, அதுவும் நைட் தூங்கிறப்ப இவளுக்கு வர்ற, அந்த..அந்த பிரச்சனைக்கு ட்ரீட்மெண்டுன்னு எதுவும் இல்லைனு தெரிஞ்சதுக்கு பின்ன, யாரும் இவளை கல்யாணமே செய்துக்க மாட்டாங்களோன்னு எனக்கும் என் அம்மாவுக்குமே ஒரே வேதனை,

ஒருவேளை இவ கடைசி காலத்துல கல்யாணம் இல்லாம தனியாள நிக்க வேண்டியதாச்சுன்னா, கூட பிறந்தவ உறவாவது வேணும் தானேன்னு எனக்கு அடுத்த பயம், என் அம்மா அவங்க பேர்ல இருந்த மொத்த சொத்தையும் இவ பேர்ல எழுதிட்டாங்க, இப்படி இருக்குறப்ப நான் எதை பேசி எதை சிரிக்க?

இப்போ யோசிச்சு பார்த்தா, வேரி ஆரம்பத்துல இருந்து அவ உடம்புட்ட மட்டுமில்ல எங்க பண கஷ்டத்திட்டயும், எங்க எல்லாரோட பயத்துட்டயும், ஏமாற்றத்துட்டயும் ஒருவகையில் மாட்டிகிட்டு முழிச்சவ,

ரொம்ப கஷ்டபட்டுட்டா அதனால அவ ஏதாவது உங்கட்ட தப்பா பேசி இருந்தா பெரிய மனசு பண்ணி மன்னிச்சுடுங்க,

என்ன இருந்தாலும் உங்கட்ட சொல்லாம அவ இங்க வந்தது தப்பு,

எங்க வீட்ல இருக்றவரைக்கும் பிடிக்குதோ பிடிக்கலையோ ஒரு வார்த்தை அதிர்ந்து பேச மாட்டா, உங்கட்ட இப்படி கத்துறா, நீங்க அவ்ளவு சலுகை கொடுத்து வச்சிருக்கீங்கன்னு தெரியுது,

இதை மனசுல வச்சுகிடாதீங்க, இன்னும் ரெண்டு மூனு நாளாவது இங்க இருந்து அவள கூட்டிட்டு போங்க, நாங்களும் நல்லவிதமா அவட்ட சொல்லி…”

இதையெல்லாம் பேசிக்கொண்டு இருந்த மாலினியிடம் இந்நேரம் சென்றிருந்த வேரி

“அம்மா” தன் அம்மாவை பின்னோடு சென்று வேகமாக அணைத்தாள்.

“உங்களுக்கே என்னை பிடிக்கலைனா, யாருக்கும் என்னை பிடிக்கவே முடியாதுன்னு நினச்சேன்மா” எனக் கேவ,

இவர்களது பாசமும் நேசமும் தரைக்கும் நாற்காலிக்கும் புரியவா செய்கிறது? இவள்  இழுத்த வேகத்தில் நாற்காலி சரிய மாலினி அதோடு சேர்ந்து விழ,

இருந்த மன தவிப்பு அதனோடு சேர்ந்த குழப்பம் இப்பொழுது ஏற்பட்ட அதிர்ச்சி அனைத்தின் காரணமாக மயங்கி சரிய ஆரம்பித்தாள் மகள்.

“ஹேய், குல்ஸ்”கவின் இவளை நோக்கி ஓடி வர ஆரம்பிப்பது புரிந்தது.

அடுத்து இரு நிமிடத்தில் சற்று விழிப்பு வர இப்பொழுது இவள் கவினின் கைகளில் பயணிக்கிறாள் என்பது புரிந்தது. நிம்மதியாய் மயங்கிப் போனாள்.

மீண்டும் விழிப்பு வந்த போது மருத்துவமனைப் படுக்கையில் வேரி,

“ஷாக், அதுல பயந்துட்டாங்க, வேற ஒன்னும் இல்லை, எதுக்கும் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும் காலைல கூட்டிட்டு போங்க” மருத்துவர் விடை பெற

“அம்மா இதெல்லாம் நீங்க ஏன் என்ட்ட சொல்லவே இல்லமா?” அழுகையும் கெஞ்சலுமாக ஆரம்பித்தாள் வேரி

“உன் பக்கத்துல என்னைக்கு என்னை வரவிட்ட நீ, இப்ப இதுவா முக்கியம்? நீ மிர்னுட்ட பேசப்போறேன்னுதான ரூமுக்குள்ள போன, நாங்க பேசுறதை யார் ஒட்டு கேட்க சொன்னா? மாப்ளைட்ட எல்லாத்தையும் சொல்லனும்னு எனக்கு தோணிச்சு, நீ குறுக்க வந்து, இப்படி ஹாஸ்பிட்டல் வரைக்கும் கதைய கொண்டு வந்துட்ட”

“போங்கம்மா, எனக்குதான் இப்ப எல்லாம் தெரியணும், நீங்களும் பாட்டியும் செய்தது எல்லாம் தப்பு,

ஆனா அதோட காரணம் பாசம்னு இப்பதான் எனக்கு புரியுது, எப்ப யாரு கல்யாண பத்திரிக்கை கொடுத்துட்டு போனாலும் பாட்டியும் சரி நீங்களும் சரி, எதாவது ஏமாந்தவன் கிடச்சாதான இவளுக்கு கல்யாணம்னு என்ட்டயே சொல்லுவீங்க”

குறை சொல்லும் தொனியில் முடித்தாள். ஆனால் அது விளக்கம் கேட்கும் கேள்வி.

“அது, இத பேச வேற நேரமே கிடைக்கலையா உனக்கு?” கவினின் முன்பு வேரி இப்படி பேசுகிறாளே என்று இருக்கிறது மாலினிக்கு.

“சொல்லுங்க, இன்னைக்கு எனக்கு எல்லாம் தெரிஞ்சாகணும்” இப்பொழுது குரல் உயர்ந்து வெளி வந்தது மகளின் பிடிவாதம்.

‘அது நல்… பொண்ணுக்கு கல்யாணத்துக்கு 100 பவுன் போடுறாங்க இல்லனா 1 கிலோ தங்கம்னு வந்து சொல்லிட்டு போறப்ப, உனக்கு எவ்ளவு போட்டா கல்யாணத்துக்கு மாப்ளை கிடைக்கும்னு கவலையா இருக்கும்,

நம்ம வசதிக்கு நாம எவ்ளவுதான் செய்துட முடியும்? அதான் அந்த நேர டென்ஷன்ல எதாவது சொல்லியிருப்போம், இப்பதான் எல்லாம் சரியா போச்சே”

“ஒன்னும் சரியா போகல, எல்லாம் நாசமாதான் போச்சு” விரக்தியில் வெடித்தாள் மகள்.

“வேரிமா பொறுமையா பேசு, இதென்ன வார்த்தை?.” அப்பா அதட்டினார்.

“ஆமா இப்ப பேசுங்க, முன்னால அம்மா கன்னாபின்ன்னு பேசுறப்ப எங்க போனீங்களாம்? மிர்னிக்குதான இந்த மாப்பிள்ளைய பார்த்தீங்க எனக்கு எதுக்கு கல்யாணம் செய்து வச்சீங்க? அதுவும் அவரை மிரட்டி உருட்டி” கோபத்தில் கொதித்தாள்.

“அ..து” வேரியின் அப்பா இப்பொழுது கவினின் முகம் பார்த்தார் தர்மசங்கடமாய்,

“சொல்லுங்க மாமா, எப்படினாலும் ஒருநாள் இந்த கேள்விக்கு நீங்க பதில் சொல்லித்தான ஆகணும்?” இது ஒரு பெரிய விஷயமே இல்லை என்பது போன்ற குரலில் கவின்.

அடுத்த பக்கம்