என்னைத் தந்தேன் வேரோடு 15(6)

இங்க இருந்தா பிள்ளய கடைக்கு எடுத்துட்டு போகணும், என் பிள்ள யார் வாய்லலாம் விழுமோன்னு” தழுதழுத்துக்கொண்டே வந்த மாலினியின் குரல் உடைய

“விடுங்க அத்த,  இப்போ எதுக்கு பழசெல்லாம்” ஆறுதல் படுத்தும்விதமான ஒரு அதட்டல் கவினிடமிருந்து.

ஆனால் அவன் குரலிலும் வலி ஒன்றும் குறைவாய் இருப்பதாய் இவளுக்கு தோன்றவில்லை.

“இல்ல மாப்ள பேசட்டும், உங்க கல்யாணம் வரைக்கும் ரெண்டு தூக்க மாத்ரை போட்டுகிட்டு இருந்தா தினமும், சின்ன மாப்ள கூப்ட்டு பெரியவள ஒலிம்பிக் முடிஞ்சதும் கல்யாணம் செய்துக்க ஆசைப்படுறேன்னு சொன்ன அன்னைக்குதான் இவ மாத்திரை போடுறத விட்டுருக்கா,

நீங்க ரெண்டு பேரும் எங்களுக்கு சொந்த மகன் மாதிரிதான், உங்கட்ட பேசுறதுல ஒரு ஆறுதல், அதோட தப்பும் பண்ணியிருக்கோமே, மன்னிப்பு கேட்டா நிம்மதி” அப்பா சொல்ல அம்மா தொடர்கிறார்.

“ஆக சின்னவ அங்க, பெரியவ இங்க எங்களோட,மிர்னிய பார்க்கப்பல்லாம் சின்னவள ரொம்ப தேடும், மனசு முழுக்க தினமும் வலியில தூக்கமே வராது, எப்படா ஊருக்கு போவோம்னு இருக்கும், ஆனா அங்க போனா அடுத்த ப்ரச்சனை,

என்னமோ என் அம்மாவுக்கு இந்த மிர்னியாலதான் சின்னவ கால் இப்படி ஆகிட்டுன்னு ஒரு நினைப்பு,

வயித்துக்குள்ள இருக்கிற சின்ன பிள்ள அடுத்த பிள்ளய என்ன செய்திரும்னு எப்படிலாமோ சொல்லி பார்தாச்சு, ஆனா அவங்களுக்கு எப்பவும் அப்படி ஒரு நினைப்பு,

மிர்னி வேற அவ வயசு பிள்ளைங்க எல்லாரவிட வேகமா ஓடுவா ஆடுவா, அவ்வளவுதான் எங்க அம்மா அவளை கரிச்சு கொட்டுவாங்க, அவ காலையும் சேர்த்து இவ பிடுங்கிட்டு வந்துட்டானு,

கேட்கிறப்ப நமக்கே கஷ்டமா இருக்கும்,சி ன்ன பிள்ளைங்களுக்கு எப்படி இருக்கும்?

பெரியவ எத்தனை ஆசையா போனாலும் சின்னவ அவளை சேர்த்துக்க மாட்டா, கதவுக்கு பின்னால இருந்து பயந்து போய்தான் பார்ப்பா, மிர்னிக்கு அங்க போனாலே காய்ச்சல் வர ஆரம்பிச்சுது,

என்னவோ எங்கம்மா பேசுறதை கேட்டு அவளுக்கு காய்ச்சல் வந்துடும்,

அதோட எங்க ஊர்ல வீட்டை சுத்தி சின்ன பிள்ளைங்க உண்டு, அவங்களோட கூட சேராம விலக ஆரம்பிச்சா வேரி, மிர்னாவ பார்த்து பயந்து போய்,

ஆக நாங்க அங்க போறதும் வேரி இங்க எங்க வீட்டுக்கு வாரதும் ரொம்ப குறஞ்சு போச்சு, இப்படி மொத்தத்துல எனக்கு பிள்ளை இருந்தும் இல்லைனு ஆகிட்டு, நான் இவளுக்காக ஏங்கியே செத்தேன்,

ஸ்கூல் போற வயசு வரவும் கூட கூடிட்டு வரணும்னு நினச்சுகிட்டே காலம் தள்ளுனோம், இங்க வர்றப்ப அவள  யாரும் எதுவும் சொல்லிட கூடாதுன்னு வேரி கால் விஷயம் இங்க யாருக்கும் தெரியாமலேதான் வச்சிருந்தோம்,

உங்க கல்யாணம் வரைக்குமே அதை யாருக்கும் தெரியாமலே தான் பார்துகிட்டேன், யாராவது அவள எதாவது சொல்லிட்டாங்கன்னா என் பிள்ள  மனசு எப்படி நோகும்னு கஷ்டமா இருக்கும், மிர்னிக்கு கூட இவ விஷயம் தெரியாது”

“ம், வியன் சொல்லியிருக்கான், மிர்னுக்கு இந்த விஷயம் தெரிஞ்ச மாதிரியே இல்ல, தேவையில்லாம அவ மனசை இப்ப கலைக்கவேண்டாம்னு இப்போதைக்கு நானும் இதை சொல்லலைனு சொல்லிகிட்டு இருந்தான்”

“பார்தீங்களா, இதுதான் என் அடுத்த வேதனை, நீங்க அண்ணன் தம்பிங்க எதல்லாம் பேசிக்கிடுறீங்க, எவ்ளவு சேர்ந்துகிடுறீங்க, ஆனா இங்க ரெண்டுபேரும் சேர்ந்துக்கவே மாட்டாங்க,

ஸ்கூல் போற வயசுல  இவளை இங்க கூட்டிட்டு வந்தோம், இங்க இருக்கவே மாட்டேன்னு இவ அழுகை, உடம்பு சரியாவே வரலை திரும்ப எங்கம்மாட்ட கொண்டுபோய் விடுற வரைக்கும்,

அங்க எங்கம்மாவும் ஒரே அழுகை பிள்ளைய என்ட்ட இருந்து பிரிக்காதன்னு, அவங்கட்ட இருந்துட்டால, இவதான் அவங்க உலகம்னு ஆகிட்டு அவங்களுக்கு,

கொஞ்சம் பெருசானதும் வந்துடுவா, சேர்ந்துகிடுவான்னு நம்பியே நாள் போச்சு,

அதே நேரம் இங்க எங்க வீட்ல வசதி கூட கூட, சின்னவளுக்கும் பெரியவளுக்கு என்னல்லாம் செய்தமோ அதை எல்லாம் செய்து கொடுத்தோம்,

ஆனாலும் எங்கம்மா பெரியவளுக்குன்னா எல்லாம் செய்வ, சின்னவனா உனக்கு இளப்பம்தான்னு இவ முன்னாடியே பேசுவாங்க, என் அம்மா மிர்னிய குறை சொன்னா நான் எதிர்த்து பேசுவேன்ல, அது அவங்களுக்கு எப்படியோ எனக்கு மிர்னாதான் முக்கியம் இவள பிடிக்கலைனு நினைக்க வச்சுட்டு,

அது இவ மனசுலயும் பதிஞ்சுட்டு போல பெரியவட்ட பேச கூட மாட்டா, குழந்தையா இருக்கப்ப ஆரம்பிச்சது, இப்ப வரைக்குமே பெரியவளாவது  இளையவட்ட போய் பேச ட்ரை பண்ணும், சின்னது எங்களல்லாம் வில்லிய பார்க்கிற மாதிரிதான் பார்க்கும்”

அறைக்குள் படுத்தபடி கதை கேட்டிருந்த வேரிக்கு இதற்கு மேல் பொறுமையாய் இருக்க முடியவில்லை,

நடந்த விஷயங்களுக்கு இப்படி ஒரு கோணம் இருக்கிறதா? அம்மாவும் பாட்டியும் விஷயங்களை கையாண்ட விதம் தவறாக இருக்கலாம், ஆனால் அதன் அடிப்படை அன்பல்லவா, வேகமாக எழுந்தாள் கண்களில் நீர் கோர்க்க,

அடுத்த பக்கம்