என்னைத் தந்தேன் வேரோடு 15(5)

ஆனால் பேருந்தில் வைத்து அழைத்தாள். மிர்னா இணைப்பை ஏற்கவில்லை. பயிற்சி நேரத்தில் மொபைல் சைலன்ட் மோடில் இருக்கும், இவளும் அறிந்ததே, அதோடு பயணத்தில் வைத்துப் பேசக்கூடியதா இது?

கவின் இவளை தொடர்புகொள்ளகூடாது என்பதால் மீண்டுமாய் மொபைலை ஸ்வ்ட்ச் ஆஃப் செய்திருந்தாள் வேரி.

இன்னும் ஆன் செய்யவில்லை. ஆக மிர்னா கவினை தொடர்பு கொண்டிருக்கிறாள் போலும். எந்த தகவலைப் பெற யாரை தொடர்பு கொள்வதாம்?

சாப்பாட்டைவிட்டு எழுந்துவிட்டாள் வேரி.

“மாப்ள சாப்டுகிட்டு இருக்கார், எங்க போற நீ? உட்காரு, இவ்வளவு கொஞ்சமாவா சாப்டுவ, ஒழுங்கா சாப்டு”

இவள் கையை பிடித்து சட்டென இவள் அம்மா இழுக்க நிலை தடுமாறி  வேகாமாக நாற்காலியில் அமர்ந்தாள்.

அதை கவின் பார்த்த பார்வையில்,

நிச்சயமாக வேறு யாராவது இப்படி செய்திருந்தால் கவின் கை நீட்டுவதை இவள் பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும் என்பது புரிகிறது.

“அவ போகட்டும் அத்தை, இவ்வளவுதான் சாப்டுவா, கொஞ்ச நேரம் கழிச்சு பால் குடிப்பா, சரியாதான் இருக்கும்” அவன் சொல்ல,

வேகமாக சென்று தன் அறைக்குள் புகுந்தாள் இவள். மனம் மட்டும் இன்னும் உணவு மேஜையில், காரணம் இல்லாமல் இல்லை.

“அது, அவ எங்கம்மா வீட்ல வளந்தா, அங்க மாடு உண்டு, வீட்டு பால் நல்லது நல்லதுன்னு எங்கம்மா அவளை வெறும் பாலும் தயிரும் மட்டுமே கொடுத்து வளத்துட்டாங்க, சரியான பால்கொழுக்கட்டை இது” அம்மா மாலினி  இவளைப் பற்றி பேசிக்கொண்டு போக

சிரித்தான் கவின்.

“என்னாச்சு, மாப்ள?”

“பி கேன்னா பால்கொழுக்கட்டையோன்னு தோணுது, மிர்னு வியனுக்கு வச்சிருக்கிற பெயர், என்ன அர்த்தமா இருக்கும்னு நாங்க பெரிய ஆராய்ச்சியே செய்துகிட்டு இருக்கோம்”

“அச்சோ, அது, பெரியவளுக்கு  இவளவிட சூட்டிகை அதிகம், வாயும் அதுக்கு ஏத்தமாதிரி கொஞ்சம் அதிகம், இருந்தாலும் யார்ட்ட என்ன பேசணும்ன்னு தெரிஞ்சு நடந்துப்பா,

யார் மனசும் கஷ்டபடுற மாதிரி நடந்துக்க மாட்டா, ஆனா ஏன் இப்ப இப்படி பேசிகிட்டு இருக்கான்னு புரியலையே” தவிப்பாய் ஒரு மன்னிப்பு கோரும் குரலில் மாலினி பேச

“விடுங்க அத்தை, இதுக்கு போய், யார்ட்ட பேசணும்னு அவ தெரிஞ்சுதான பேசுறா? நீங்க இப்படிலாம் மாமாட்ட பேசமாட்டீங்களோ?” கவின் குரலில் கிண்டல்,

“நீங்க வேற, விடுங்க தம்பி” இவள் அம்மாவின் குரலில் சிரிப்பும், உவகையும் அதனோடு இழையோடிய வெட்கமும்,

அறைக்குள் படுத்திருந்த வேரிக்கு இது தன் வீட்டு உணவு மேஜைதானா என சந்தேகமே வருகிறது.

“இன்னைக்குத்தான் உங்க அத்தை சிரிச்சே நான் பார்க்கிறேன், இப்படி அடிக்கடி இங்க வந்து போய் இருங்க மாப்ள” இந்த அப்பா வேறு,

“ஆகா அத்தை நீங்க மாமாவ இப்படில்லாம் பேசுறதே இல்லைனு மறைமுகமா மாமா கம்ளய்ண்ட் கொடுக்றாங்க பாருங்க, எப்படி அத்த இப்படி? அப்படி ரெண்டு வாயாடி பொண்ணுங்களுக்கு இப்படி ஒரு அம்மாவா?” கவின் கிண்டலாகத்தான் கேட்டான்.

ஆனால் மாலினி சற்று சீரியஸான தொனியில் துவக்கினார்,

“உங்கட்ட சொல்றதுக்கு என்ன தம்பி, நாங்க சாதாரண மிடில் க்ளாஸ்ல இருந்து வந்தவங்க, எங்க கல்யாணத்தப்ப இவர் ஒரு சின்ன டெயிலரிங் ஷாப்பும், அதுல விக்றதுக்கு கொஞ்சம் துணியும் வச்சிருந்தார்,

நான்தான் கடையில இவருக்கு கூடமாட உதவிக்கு, அவ்வளவுதான் வசதி,

இதுல முதல் பிரசவத்துல ரெண்டு பொண்ணுங்க, அதுலயும் ஒருத்தி இப்படி, எப்படி கரை சேர்க்க போறோம்கிற கவலையே பெரிய கவலை,

இதுல நான் கடைக்கு போனாதான் கடைய சமாளிக்க முடியும்னு ஒரு நிலை, ரெண்டு பிள்ளய வச்சுகிட்டு நான் அங்க போய்தான் என்ன செய்ய முடியும்? அதனால ஒரு பிள்ளய என் அம்மாட்ட விடுறதுன்னு ஆச்சு,

எங்களுக்கு பெரியவங்கன்னு என் அம்மா மட்டும்தான் உண்டு, பிள்ளய பிரியனுமேன்னு மனசெல்லாம் வலி, கூட இருக்கசொல்லி அம்மாவ கூப்டு பார்த்தேன், அம்மாவுக்கு சொந்தமா கொஞ்சம் மாடு உண்டு, அதோட அப்பா வாழ்ந்த வீடுன்னு, இங்க வரமாட்டேன்னுட்டாங்க,

இதுவரைக்கும் உனக்குன்னு வாழ்ந்துட்டேன், இனிமேலாவது எனக்குன்னு இருக்கவிடுன்னு சொல்றவங்கள என்ன சொல்ல?

ஆனா ஒரு பேத்திய கூட வச்சுகிட ஆசைபட்டாங்க, சின்னவளை அங்க விடுறதுன்னு முடிவு செய்தது நான்தான்,

விருதுநகர் பக்கம் சின்ன ஊர் அது, அத்தனை பேரும் எங்க சொந்தகாரங்க, என்னதான் இருந்தாலும்  பிள்ளைய அவ குறைய சொல்லி ஒதுக்கி வைக்க மாட்டாங்க,

அடுத்த பக்கம்