என்னைத் தந்தேன் வேரோடு 15(4)

நீ ஆசைப்பட்டாலும் நானும் விரும்பி சம்மதித்து எடுத்த முடிவுதான் அது, அது நம்ம குழந்தை, உன் மேல எனக்கு இருக்கிற உரிமையை எனக்கு பயன்படுத்த விருப்பமில்லை, ஆனால் குழந்தை மேல் எனக்குள்ள எதையும், ஒரு புள்ளிய கூட விட்டு கொடுக்க மாட்டேன், அதோட சர் நேம் சத்யாதான்,

அதனால நீ எங்க இருக்கியோ நானும் அங்கதான் இருப்பேன், உன்னால ஆனத பாரு” எக்கு இரும்பு முகத்தோடு சொல்லிக் கொண்டிருந்தவன்,

கதவை திறந்து கொண்டு வெளியே சென்றேவிட்டான்.

வேரிக்கு இதற்கு எப்படி ரியாக்ட் செய்வதென்றே புரியவில்லை.

அவன் முகத்தில் இருந்த உறுதியைத் தவிர எதையும் அவளால் புரிந்து கொள்ளவும் முடியவில்லை. அவன் வார்த்தைகளின் அர்த்தத்தில் இருந்த கோபம்,வலி, ஏமாற்றம், கூட அவன் உடல்மொழியில் இல்லை.

இவளுக்குள்ளோ அறுபட்டதுபோல் துடித்துக் கொண்டிருந்த உள்மனதில் ரகசிய சாரல். காயமாறல். இதயம் அழுத்திய பாறை காணாமல் போதல்.

இனி அவனை பார்க்கவே முடியாது என்று தவித்துக் கொண்டிருந்த அதற்கு அவனது இப்பிடிவாதம் ஔஷதம்.

சே, எவ்ளவு ஈசியா இந்த மனம் அவன்ட்ட விழுந்து போகுது, கேடுகெட்ட மனம்.

பசி தோன்றியது வயிற்றில்.

இவ்வளவு நேரமும் உணர்வற்று மரத்துப்போய் இருந்த உடல்?

ஆக இவள் மனமும் உடலும் இவ்வளவு நேரமும் துக்கமனுஷ்டித்தது இவனை பிரிந்ததற்காகதானா? இவன் வந்துவிட்டால் எல்லாம் சரியாகிவிட்டதாமா?

மனமும் உடலும் எவ்வளவு எளிதாய் அடிமைகோலம் பூண்கிறது,

உன்கூடதான் இருப்பேன்னு சவால்விட்டுவிட்டு இவன் எங்கு போய்விட்டான்? மெல்ல அறைக்கு வெளியே தலையை நீட்டினாள். வரவேற்பறை ஸோபாவில் கற்சிலையாய் அவன்.

அழையா விருந்தாளியாய் வெறுப்பவர் சூழ உட்கார்ந்து இருப்பது என்றால்?

சற்று தொலைவில் அம்மாவும் அப்பாவும் கையை பிசைந்து கொண்டு நிற்பது தெரிந்தது, இந்த அம்மா இவனை என்னவெல்லாம் பேசினார், அவர் முன் இப்படி இவன் வந்து நிற்கவேண்டும் என்றால்?

அவன் மீது இரக்கம் வருகிறது ஒரு புறம்,

ஆமா கத்தியால குத்த வந்தவனுக்கு ஓங்கி குத்றப்ப கை வலிக்குமேன்னு கவலைப்படு என்று இடித்துரைத்தது மறுபுறம்.

“சின்னவளே சாப்ட வா, அப்படியே மாப்ளய சாப்ட கூப்டு”

வேற யாரு, இந்த அம்மாதான், அறைக்குள் வந்து நின்றார்.

அதற்குள் அப்பாவின் குரல் வெளியே கேட்டது “சாப்ட வாங்க மாப்ள”

“அன்னைக்கு உங்கள சீன்னு விட்டுட்டுபோனாரு அவர்தான் உங்களுக்கு மாப்ளையோ?”

இவள் குரல் தாழ்த்தி எல்லாம் பேசவில்லை.

“ஷ்ஷ், என்னைக்காவது உங்க அப்பா கூட சண்ட போட்டுட்டு உன் பாட்டி வீட்டுக்கு வந்து நின்னுருக்கனாடி? இல்ல அப்பாவ பத்தி உன் பாட்டிட்ட குறை சொல்லிருப்பனாடி?”

விக்கித்துப் போனாள் மகள்.

அம்மாவின் வாய் நீளம் பிரசித்தம், ஆனால் அப்பாவை விட்டுகொடுத்து இதுவரை அம்மா பேசியதே கிடையாது, இதை இவள் கவனித்ததே இல்லையே,

அதற்குள் அம்மாவின் விரல்கள் இவள் கையில் தோளுக்கு கீழிருக்கும் பகுதியை தொட,

“அத்தை” என்றபடி வந்து நின்றான்  கவின்.

அம்மாவிற்கு கோபம் வந்தால் அவ்வளவுதான், கையின் சதைப் பற்றான இடத்தை கிள்ளி திருகிவிடுவார், அது இவளுக்கு இப்பொழுதுதான் ஞாபகம் வருகிறது, அவனிடம் அதை முன்பு சொன்னதும் சேர்த்துதான்.

இந்த கிள்ளல் வலி கூட இவளுக்கு வந்துவிட கூடாது என்று காப்பாற்றி, பின்  கழுத்தை வெட்ட போகிறானாமா?!!

“அது, சாப்ட வாங்க மாப்ள, ரெண்டு பேரும் வாங்க” அம்மா சமாளித்துவிட்டு இவளை பார்வையால் மிரட்டிவிட்டு விலகிச் சென்றார்.

இவள் வெடுக்கென்று வெளியேற எந்த முகாபாவமும் இன்றி உணவு மேஜையில் அவன்.

சாப்பாட்டு தட்டை தவிர எதையும் பார்க்கவில்லை இவள்.

அவன் மொபைல் சிணுங்க எடுத்தான்.

“உங்க வீட்லதான் இருக்கோம் மிர்னு, சாப்டுகிட்டு இருக்கோம், முடிஞ்சதும் அவளே கூப்டுவா“

மீண்டுமாய் உணவைத் தொடர்ந்தான்.

திருநெல்வேலி வீட்டிலிருந்து கிளம்பும் முன் மிர்னாவிற்கு விஷயத்தை விளக்கி ஃபோன் செய்யவேண்டும் என்று கூட வேரிக்கு தோன்றவில்லை. அவளது நிலை அப்படி.

அடுத்த பக்கம்