என்னைத் தந்தேன் வேரோடு 15(2)

மாடிப் படியில் இவள் ஏற, மனதிலோ அவன் அவளை இந்த படிகளில் விளையாட்டாக தூக்கிச் சென்ற ஞாபகம். அப்பொழுது அருகில் பார்த்த அவன் முக பாவம்,

அறைக்குள் நுழைந்தால் எதை தேடுகிறாள் என்பதே மறந்து போகும் அளவு அவன் நினைவு ஊர்வலம்.

தன்னை அடிக்க ரூலரை எடுத்து நீட்டிய கவின் மனதில் வந்து வதை செய்தான்.

பாஃஸ்போர்ட் தான் கண்ணில் படவில்லை.

கீழிருந்த அவர்கள்  அறைக்குள் நுழைந்தால் டிரஸிங் டேபிளை தாண்டி நகர மறுக்கிறது மனம்.

எப்பொழுது அவள் அதன் முன் நிற்பதைப் பார்த்தாலும் பின்னிருந்து கட்டிகொண்டு அவள் தோளில் தன் நாடி இருத்தி கதை பேசும் அவன், அப்பொழுது கண்ணாடியில் ஒளிரும் அவன் கண்கள்,

தரையைப் பார்த்தால் இவளோடு வந்து தரையில் அவன் படுத்த அந்த நேரம்,

படுக்கையையோ பார்க்க முடியவில்லை, அத்தனையும் பொய்யா? நடிப்பா? தெய்வமே நம்ப முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்றிருக்கிறது இப்பொழுது,

எத்தனை பேசி இருப்பான், விருப்பு, வெறுப்பு, வேதனை, சந்தோஷம், கனவுகள் என,

அதோடு எத்தனை சீண்டல்கள், வேண்டல்கள்,

நெஞ்சை அடைத்துக்கொண்டு வருகிறது அவளுக்கு.

கவின்  பொய்த்துப்போனான் என்பதை அவள் உள்மனம் முழுமையாக நம்ப கூட தயாராயில்லை. அவன் நல்லவனாய் இருந்துவிடமாட்டானா என பாலைமண்ணாய் தாகம் கொண்டது ஒரு புறம்.

இந்த விஷயம் இறுதிவரை அவளுக்கு தெரியாமலே இருந்திருக்க கூடாதா, அவன் இவள் அறியாமல் இவளை கொன்றே போட்டாலும் அவன் தன்னை காதலிக்கிறான் என்ற பொய்யான நிம்மதியுடன் வலியின்றி செத்துபோயிருப்பாளே,

இப்பொழுதோ உயிர்வரை வலிக்கிறதே என்று அரற்றியது மறு மனம்.

உலகோடு அவளை இணைக்கும் வேர் அவன் தான் என இப்பொழுது புரிகிறது அவளுக்கு.

அவனே பொய்த்தபின் வாழ்வென்ன வாழ்வு?

அவன் அவள் வாழ்வில் வருவதற்கு முன்பு உலகின் மீது என்ன பிடிப்பிருந்ததாம் அவளுக்கு?

இங்கேயே இருந்து அவனை எதிர்கொள்கிறேன், அவன் என்னைக் கொன்றால் கொல்லட்டும்,

இப்படியும் ஒரு எண்ணம்.

ஆனால் கிளம்ப வேண்டும் என்று அவளை உந்தித்தள்ளியது இரண்டு விஷயம். ஒன்று அவளது மேடிட தொடங்கியுள்ள வயிறு, மற்றொன்று மிர்னாவின் உயிர்.

இவள் காதலுக்காக அவர்களை பலியிடுவதாமா?

ஆக இறுதியில் கவினுக்கு எழுதிய கடிதத்தில் அவள் உணராமலே பதிவாகி இருந்தது வேரியின் இந்த மனநிலைதான்.

வீட்டிலிருந்து பேருந்து நிலையம் வரை ஆட்டோவில் போனவள், அங்கிருந்து மதுரையிலிருக்கும் அவள் தாய்வீட்டிற்கு பேருந்து ஏறினாள்.

பயணம் முழுவதும் தறியின் நாடா போல் முன்னும் பின்னுமாய் ஓடிக்கொண்டு இருந்தது மனம். ஒரு நேரம் வெறுப்பு, மறு  நேரம் காதல் தவிப்பு.

கவினின் ஒவ்வொரு காதல் கவனிப்பு செயல்கள் ஞாபகம் வர, அதோடு என்னமாய் நடித்திருக்கிறான் என்ற நினைவும் வர,

மதுரையில் இறங்கி ஆட்டோவில் தன் வீட்டை நோக்கி போகும் வரை வீட்டில் வரவேற்பு எப்படி இருக்கும், குறிப்பாக அம்மா மாலினி எப்படியாய் எதிர் கொள்வார் என்ற நினைவே வரவில்லை.

சற்று தொலைவில் வரும் போதே கவனித்தாள். இவள் வீட்டின்  கேட் திறந்திருக்கிறது.

இன்நேரம் அவள் அம்மா வீட்டில் இருக்கும் வாய்ப்பே கிடையாது, அவரது கேங்குடன் வாக்கிங் போயிருப்பாரே, அப்பாதான் தனியாக இருப்பார்.

அவரிடம் சொல்லி அம்மாவிடம் பேசச் சொல்வது சற்று எளிதாக இருக்கும்,  இப்பொழுது என்ன செய்ய?

எது எப்படியோ, முன்னைப் போல் அம்மாவிடம் பயந்து நடுங்க இனி இவளால் முடியாது, மனதில் பட்டதைப் பேசி ஆக வேண்டும், இவள் முடிவெடுத்துக் கொண்டு இருந்த போதே ஆட்டோ நிற்க, வாசலில் நின்ற அம்மா மாலினி கண்ணில் பட்டார்.

இவளை நோக்கி வந்தார்.

“என்ன நீ இப்படித்தான் செய்வியா?” கடு கடுவென ஆரம்பித்தவர் இவள் இறங்கி நின்றவுடன் இவள் முழு கோலத்தயும் பார்த்தவர்

“இப்படி இருக்றப்ப ஆட்டோலயா வருவ, சரி பார்த்து வா, முதல்ல ஜூஸ் ஏதாவது குடி” என்று  கரிசனை கலந்த குரலுக்கு மாறினார்.

அதோடு இவளது ஒற்றை கேண்ட் பேக்கை தன் வசமாக்கிக் கொண்டு மறு கையால் இவளது கையை வேறு பிடித்து அவர் அவளை வீட்டிற்குள் நடத்தினார்.

குழப்பத்தில் தனக்கு நடப்பது ஒன்றும் புரியவில்லையோ என்று இருந்தது வேரிக்கு.

அடுத்த பக்கம்