என்னைத் தந்தேன் வேரோடு 15(10)

நான்காம் நாள் இவள் மருத்துவமனையைவிட்டு டிஸ் சார்ஜ் ஆகி கிளம்பினால் இவளது கார் வீட்டிற்கு செல்லாமல் நேராக சென்று நின்ற இடம் மதுரை ஏர்போர்ட்.

பிரேசில் கிளம்புகிறார்கள் என புரிந்துவிட்டது வேரிக்கு. இவள் மிர்னாவிடம் செல்ல வேண்டும் என்று ஆசைப் பட்டதற்காகவா?

கவின் இவளை தேடி இவள் வீட்டிற்கு வந்த பிறகு அவனை சந்தேகப்படுவது இன்னும் கஷ்டமாகிக்கொண்டே போனது அவளுக்கு.

ஒருவேளை இவள் நிலத்திற்காக இவளை திருமணம் செய்தாலும், அதன் பின் உண்மையில் இவளை நேசிக்க தொடங்கிவிட்டானோ? இதுதான் இப்போதைக்கு நம்பும்படியாக இருக்கிறது இவளுக்கு,

அவன் பிறந்த நாளன்று இவள் நிலத்தை பதிந்து கொடுத்த போது அவன் நடந்து கொண்ட விதம் நிச்சயமாக அவளது நிலம் அவனுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை காண்பிக்கிறதே,

அதோடு அலுவலகத்தில் அந்த நபர் இந்த இடப்பிரச்சனையைப் பற்றி குறிப்பிட்ட போது, கவின் மறுக்கவில்லையே, என் மனைவிக்கு தெரிந்துவிடக் கூடாது என்று தானே சொன்னான்,

இவள் உண்மை தெரிந்து இப்பொழுது போல் அவன் காதலை சந்தேகப் படுவாள் என்று நினைத்திருப்பானாய் இருக்கும்,

மற்றபடி அவன் செயல்களில் இவள் அனுபவித்த அக்கறை, அன்பு, காதல் எல்லாவற்றையும் சந்தேகப்பட வழியே இல்லையே, அவன் காதல் உண்மை.

மனதில் நிம்மதி வந்திருந்தது.

எதற்காகவோ திருமணம் என்றாலும் இப்பொழுது இவர்களுக்குள் இருப்பது பரிசுத்த காதலல்லவா? இவள் இடம் இவளது கவினுக்கு பயன்பட்டிருக்கிறது என்பதில் இவளுக்கு முழு மகிழ்ச்சியே,

அதனால் மிர்னாவை வியனிடமிருந்து காப்பாற்ற இவள் ரியோடி ஜெனிரோ போயே ஆக வேண்டும் என்ற மன நிலை இவளுக்கு இப்பொழுது இல்லை.

அதனால் தான் மிர்னாவிடம் கூட இந்த மெயிலை குறித்து இவள் பேசவில்லை. போட்டி அருகிலிருக்கும் நேரம் அவளை குழப்புவானேன்?

வியனிற்கு கவின் இந்த நிலத்திற்காகத்தான் இதையெல்லாம் செய்தான் என்று கூட தெரியுமா என்று தெரியவில்லை.

மிர்னாவிற்கு இத் திருமணத்தில் விருப்பமில்லை நீ சென்று அவள் இங்கு வராமல் பார்த்துக் கொள் என்று கவின் சொல்லி இருந்தாலே வியன் தன் அண்ணனிற்காகவும்  மிர்னாவிற்காகவும் திருமண மேடை வரை மிர்னாவை வரவிடாமல் தடுத்திருப்பானே,

இவளறிந்த வியனின் அனைத்து செயல்களும் தெரிவிப்பது, வியனின் மிர்னா மீதான காதல் உண்மை

அதனால் இவள் இப்பொழுது இந்த உடல்நிலையில் பிரேசில் போக வேண்டாமே!!

கவினிடம் இவள் இதை சொல்ல வேண்டுமே,

ஆனால் கவின் விமானநிலையத்தில் இல்லை.

“அம்மா இந்த கண்டிஷன்ல நான் அவ்ளவு தூரம் வரலைமா”

“யேய், மிர்னிக்கு கல்யாணம்டி, சின்ன மாப்ள அங்க எல்லா ஏற்பாடும் செய்துட்டார், உன்னை டாக்டர் ட்ராவல் பண்ணலாம்னு சொல்லிட்டாங்க, இன்னும் மிர்னிக்கு விஷயம் தெரியாது, நீயும் சொல்லிடாத”

மிர்னுவுக்கு கல்யாணமா? பொங்கி ப்ராவகித்தது ஆனந்த சுக நதி வேரியினுள்.  கண்டிப்பாக கவின் வருவானே அவனை எங்கே காணோம்.

“அம்மா அவரை எங்கம்மா?”

மொபைலை நீட்டினார் மாலினி.

“போங்கம்மா, நானே என் ஆத்துகாரர் எனக்கே எனக்குன்னு வாங்கி கொடுத்த மொபைல்லயே அவர்ட்ட பேசிப்பேன், உங்க மொபைல் ஒன்னும் வேண்டாம்”

மாலினியின் முகம் மலர்ந்தது.

தன் மொபைலை எடுத்து கவினை அழைத்தாள் வேரி. அவன் எங்கே? இவர்கள் போடிங் பாஸ் வாங்கிய பிறகும் அவன் ஏன் இன்னும் வரவில்லை?

இவள் மொபைலில் அவன் எண்ணை தேடி அழுத்தினாள்,

ரிங் போனது. ஆனால் அவன் இணைப்பை ஏற்கவில்லை.

அதற்குள் இவர்கள் விமானத்திற்குள் போட் ஆனார்கள்.

எப்படியும் வியன் கல்யாணத்திற்கு கவின் வராமல் இருக்க மாட்டான், வரட்டும்.

நம்பிக்கை தந்த சந்தோஷத்தில் நிம்மதியாக தூங்கிப்போனாள். சென்னையில் இவர்களை இன்டர்நேஷனல் விமான நிலையத்தில் சந்தித்தான் கவின்.

அடுத்த பக்கம்